நமது முன்னோர்கள் சந்திரனின் நிலை மற்றும் கிரகங்களின் செயல்களை அறிந்து பயிரிட்டு வந்தனர். ஆனால், இடையில் இது பின்பற்றப்படவில்லை. ஆயினும், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதைப் பற்றி ஆய்வு செய்து தனிப் பஞ்சாங்கத்தைத் தயாரித்து உள்ளனர். இவ்வகையில் விவசாயம் செய்தால் 30% வரை கூடுதல் மகசூலைப் பெற இயலும்.
செங்கம் புதுப்பாளைய விவசாயி சுப்பிரமணியம், கிரகநிலை அறிந்து விவசாயம் செய்து நல்ல மகசூலைப் பெறுகிறார். மேலும், இந்தியாவில் காப்பி, தேயிலை உற்பத்தியில் உள்ள பல நிறுவனங்கள், கிரக நிலைகளைப் பின்பற்றுகின்றன என்பது முற்றிலும் உண்மையாகும்.
பௌர்ணமிக்கு 48 மணி நேரத்துக்கு முன், மண்ணின் ஈரப்பதம் பெருகும். இதனால், முளைப்புத் திறன் உயர்ந்து, பயிர்கள் வீரியமாக வளரும். அப்போது இலைவழி உரத்தைத் தெளித்தால், அதைப் பயிர்கள் எளிதில் ஈர்த்துக் கொள்ளும்.
அமாவாசை நாளில், வெப்பப் பகுதிகளில் விதைக்கலாம். மரம் வெட்டுதல், கவாத்து செய்தல், அறுவடை செய்தல், தானியங்களை உலர வைத்தல் ஆகிய வேலைகளைச் செய்யலாம். சில பகுதிகளில் அமாவாசையில் அகத்தி மரங்கள் வெட்டப்படுகின்றன.
மேல்நோக்கு நாளில் விதைக்கலாம். மேலும், உரமிடுதல், இலைகளில் உரம் தெளித்தல், அறுவடை செய்தல் ஆகிய வேலைகளைச் செய்யலாம். பிரதோஷ நாளில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விதைத்தால் கூடுதல் விளைச்சலைப் பெறலாம்.
கீழ்நோக்கு நாளில் கவாத்து செய்யலாம். மேலும், மரம் வெட்டுதல், நாற்று நடுதல், பதியம் போடுதல், பசுந்தாளை மடக்கி உழுதல், இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் இடுதல், கிழங்கு அறுவடை ஆகிய வேலைகளைச் செய்யலாம்.
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாளில் மேற்கொள்ளும் செயலுக்கு, உரிய மண்டலப் பிரிவைச் சேர்ந்த நட்சத்திர நிலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை உழவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளலாம். உலகத்தின் பல்வேறு நாடுகளில் இம்முறை பின்பற்றப்படுகிறது.
இயற்கை வேளாண்மை என்னும் நூலில் இருந்து…