கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019
ஊரகப் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் கால்நடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. இவற்றில் வெண்மைப் புரட்சிக்குக் காரணமாக விளங்கும் எருமையும் அடங்கும். இந்நிலையில், எருமைக் கன்றுகள், சத்துக்குறை, தொற்றுநோய் மற்றும் குடற்புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. டாக்ஸகாரா விட்டுலோரம் உருளைப் புழுக்களின் தாக்கம், கன்றுகளை இறக்கச் செய்யுமளவில் உள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிறக்கும் கன்றுகளில் 50% இறந்து விடுகின்றன. இப்புழு, தடித்து, இளமஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் 20-30 செ.மீ. நீளத்தில் கன்றுகளின் சிறுகுடலில் இருக்கும்.
வாழ்க்கைச் சுழற்சி
கன்றுகளின் சிறுகுடலில் இருக்கும் முதிர்ந்த புழுக்கள் இடும் முட்டைகள், சாணத்தின் மூலம் வெளியேறி, புல், தீவனம் போன்றவற்றில் ஒட்டியிருக்கும். இத்தகைய தீவனத்தை உண்ணும் கால்நடைகளின் சிறுகுடலை இந்த முட்டைகள் மீண்டும் அடைந்து புழுக்களைப் பொரிக்கும். இந்த இளம் புழுக்கள் குடற்சுவரை ஊடுருவி, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், பால்மடி உள்ளிட்ட உறுப்புகள் மற்றும் பிற தசைகளில் அமைதி நிலையில் இருக்கும்.
பசு அல்லது எருமையானது எட்டு மாதச் சினையானதும், புத்துணர்வைப் பெறும் இப்புழுக்கள், சினைக்கொடியின் மூலம் அல்லது பிறந்த கன்று சீம்பாலைக் குடிக்கும் போது, அதன் வயிற்றுக்குள் பரவும். பெருமளவுப் புழுக்கள் கன்று பிறந்த 10 நாட்களில் பாலின் மூலம் வெளியேறி விடும். அடுத்து, மூன்றாம் வாரத்தில் இருந்து கன்றுகளின் சாணத்தில் முட்டைகள் தோன்றும். வளர்ந்த புழுக்கள் வெளியேறுவது, பிறந்த 38 நாளுக்குப் பின் தொடங்கி, 120-180 நாட்களில் முடிந்து விடும்.
தாக்குதல் அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட கன்றுகள், குறிப்பாக 1-3 மாதக் கன்றுகள் மெலிந்து, மயிர்கள் சிலிர்த்து, நிற்க முடியாத அளவில் பலவீனமாக இருக்கும். மேலும், இரத்தச்சோகை, கண்ணிமை வெளிர்தல், வயிறு பெருத்தல், உடல் மெலிவு, கன்றின் மூச்சில் பழவாசம் அடித்தல், வலிப்புப் போன்ற அறிகுறிகளும் இருக்கும். கடைசியாக, களிமண் நிறத்தில் சளி அல்லது கொழுப்புக் கலந்த துர்நாற்றக் கழிச்சலும், நுரையீரல் ஒவ்வாமையும் ஏற்பட்டுக் கன்றுகள் இறந்து போகும். முதிர்ந்த புழுக்கள் அதிகளவில் இருந்து, குடலில் அடைப்பு, குடல் திசுக்களில் வீக்கம் ஏற்பட்டாலும் கன்றுகள் இறக்க நேரிடும்.
சிகிச்சை
சரியான கால இடைவெளியில் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். 10-16 நாள் கன்றுக்கு, லிவமிசோல், பென்பென்டசோல், ஐவர்மெக்டின் மருந்துகளைக் கொடுக்கலாம். லிவாமிசோல் மருந்தை, கன்று பிறந்த மூன்று மாதங்கள் வரையில் மாதந்தோறும் கொடுக்க வேண்டும். பிறகு கன்றின் வயதைப் பொறுத்து 2-4 மாதங்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம்.
மூன்று வாரத்துக்கு மேலான கன்றுக்கு, பைப்ரசின், பைரண்டல், மாரன்டல் போன்ற மருந்துகளைக் கொடுக்கலாம். எட்டு மாதச் சினை எருமைக்கு, பென்பென்டசோல் மருந்தைக் கொடுத்தால், பிறக்கும் கன்றை இப்புழுக்கள் தாக்காது. மேலும், பென்பென்டசோல், பிராசிகுயின்டல் மருந்துக் கலவை, அஸ்காரிடு புழுக்களைக் கட்டுப்படுத்தும். சரியான கால்நடை மருத்துவர் மூலமே சிகிச்சை செய்ய வேண்டும்.
இப்புழுக்களைக் கட்டுப்படுத்துவதன் நோக்கம், கன்றுகளைக் காப்பதுடன், இப்புழு முட்டைகளால் மேய்ச்சல் நிலம் மாசடைவதைத் தடுப்பதுமாகும். இதற்கு, 10-16 நாட்களில் கன்றுகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம். கொட்டிலைச் சுத்தமாகவும், சரியாகவும் பராமரித்தால், டாக்ஸகாரா விட்டுலோரம் குடற்புழுப் பாதிப்பிலிருந்து கன்றுகளைக் காக்கலாம்.
அ.மீனாட்சிசுந்தரம்
ம.க.விஜயசாரதி, ந.இராணி, கால்நடை மருத்துவக் கல்லூரி,
ஒரத்தநாடு-614625, தஞ்சாவூர் மாவட்டம்.