கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2016
வேளாண்மையில் பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒரு நிலத்தில் ஒரே பயிரையே தொடர்ந்து பயிரிட்டால், அம்மண்ணில் அப்பயிருக்குத் தேவையான சத்துகள் மட்டும் உறிஞ்சப்படும். இதனால் அந்நிலத்தில், பிற சத்துகள் அதிகமாகவும், உறிஞ்சப்படும் சத்துகள் பற்றாக்குறையாகவும் இருக்கும். இக்குறையைச் செயற்கை உரங்கள் மூலம் ஈடுகட்ட இயலாது. ஆனால், பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிட்டு மடக்கி உழுவதன் மூலம் இக்குறையைப் போக்க முடியும். மேலும், ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பயறுவகைப் பசுந்தாள் உரப்பயிர்கள் மிகவும் முக்கியம்.
ஏனெனில், காற்றில் கூடுதலாக உள்ள நைட்ரஜன் என்னும் தழைச்சத்தை வேர் முடிச்சுகள் மூலம் கிரகித்துத் தன்னுடைய வளர்ச்சிக்குப் போக எஞ்சும் தழைச்சத்தை மற்ற பயிர்களுக்குத் தொடர்ந்து அளிக்கும். தொழுவுரம் கிடைக்காத நிலையில், பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிட்டு மடக்கி உழுதால், மண்வளத்தைக் காத்து நிலையான மகசூலுக்கு வழி வகுக்கலாம்.
தக்கைப் பூண்டு
பசுந்தாள் உரப் பயிர்களில் தக்கைப் பூண்டானது களர் உவர் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. இது வேகமாக வளர்ந்து 40-45 நாட்களில் ஏக்கருக்குப் பத்து டன்கள் வரையில் பசுந்தழை மகசூலைத் தரும். தண்ணீர் தேக்கத்தையும் வறட்சியையும் ஓரளவுக்குத் தாங்கி வளரும். தக்கைப்பூண்டில் 3.5 சதவீதத் தழைச்சத்தும், 0.6 சதவீத மணிச்சத்தும், 1.2 சதவீதச் சாம்பல் சத்தும் உள்ளன. இது மட்கும்போது, அங்கக அமிலம் வெளியாகும்.
இந்த அங்கக அமிலம் மண்ணிலுள்ள களர், உவர்த் தன்மையைக் குறைக்கும். மேலும், கரையாத நிலையிலுள்ள மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கொடுக்கும். இதன் மூலம் மண்ணில் நமக்குத் தேவையான மாற்றத்தைப் பெறலாம். மண்ணில் அங்ககச்சத்துச் சேர்வதால், நிலத்தில் இடப்படும் இரசாயன உரங்களும் நல்ல பயனைத் தரும்.
இவ்வளவு பலன்கள் நிறைந்த தக்கைப்பூண்டை நாம் நன்கு அறிந்திருந்த போதிலும், காலப்போக்கில் இதைச் செம்மையாகப் பயிரிட்டுப் பயன்படுத்தும் வழக்கம் குறைந்து விட்டது. இதற்கு முக்கியத் தடையாக இருப்பது, சரியான காலத்தில் தரமான விதைகள் கிடைக்காமையே ஆகும். எனவே, தரமான தக்கைப்பூண்டு விதை உற்பத்தி என்பது மிகவும் அவசியமாகிறது.
விதை உற்பத்தி நுட்பங்கள்
தக்கைப் பூண்டு விதை உற்பத்திக்கு, டிசம்பர், ஜனவரி, சூன் ஆகிய மாதங்களில் விதைப்பை மேற்கொள்ளலாம். ஏக்கருக்கு எட்டு கிலோ விதைகள் தேவைப்படும். தக்கைப்பூண்டு அனைத்து வகை மண்ணிலும் சிறப்பாக விளையும். விதைப்புக்கு முன், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம், பெவிஸ்டின் என்னும் பூசணக்கொல்லியை கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இதன்பின் 24 மணிநேரம் கழித்து ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளுடன் இரண்டு பொட்டலம் ரைசோபிய நுண்ணுயிர்க் கலவையை 600 மில்லி ஆறிய அரிசிக்கஞ்சி அல்லது மைதாக் கஞ்சியுடன் சேர்த்து நன்கு கலக்கி, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
பயிர் இடைவெளி 45 செ.மீ.க்கு 20 செ.மீ. இருக்க வேண்டும். ஆதார விதை உற்பத்திக்கு 10 மீட்டர், சான்று விதை உற்பத்திக்கு 5 மீட்டர் என்னும் அளவில் பயிர் விலகு தூரம் இருக்க வேண்டும்.
உர நிர்வாகம்
கடைசி உழவின்போது, ஏக்கருக்கு ஐந்து டன் தொழுவுரத்தை இட வேண்டும். இதனால் பயிர் வளர்ச்சி அதிகமாகி விதைப்பிடிப்பு நன்கு இருக்கும். பொதுவாகப் பசுந்தாள் பயிர்களுக்கு இரசாயன உரங்களை இடுவதில்லை. ஆனால், மேம்பட்ட விதை உற்பத்தியில், பயறுவகைக் குடும்பத்தைச் சேர்ந்த இப்பயிருக்கு உரச்சத்து அவசியமாகும். இதனால் காய்கள் நன்கு பிடித்து மகசூல் பெருகும். அதனால், ஏக்கருக்கு 8:16:8 கிலோ தழை, மணி, சாம்பல் ஆகிய சத்துகளை இட வேண்டும்.
பாசனம்
விதைத்ததும் முதல் பாசனமும், விதைத்த மூன்றாம் நாள் இரண்டாம் பாசனமும் அதன்பின் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்ய வேண்டும். பூக்கும்போதும், விதை முற்றும்போதும் பாசனம் மிக அவசியம். இக்காலங்களில் பாசனப் பற்றாக்குறை இருந்தால், பொக்கு விதைகள் அதிகமாகி விடும்.
இலைவழி ஊட்டம்
இலைவழியாகக் கொடுக்கப்படும் சத்துகளைப் பயிர்கள் வேகமாக எடுத்துக் கொள்வதால், பூக்கும் பருவத்தில் இலைவழி உரம் அளிக்கப்படுகிறது. இதனால், விதைப்பிடிப்பு அதிகமாகி மகசூல் கூடும். அதனால், டி.ஏ.பி. 2 சதக் கரைசலை 40, 60 ஆகிய நாட்களில் காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்
விதைத்துப் பாசனம் செய்தபின், ஏக்கருக்கு ஒரு லிட்டர் பென்டிமெத்தலின் அல்லது பாசலின் களைக்கொல்லியைக் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியைத் தெளிக்காத சமயத்தில், விதைத்த பத்தாவது நாள் கைக்களை எடுக்க வேண்டும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் காணப்படும் களைகளைக் கட்டுப்படுத்த, பத்து லிட்டர் நீருக்கு டர்கா சூப்பர் 30 மில்லி, பர்சூட் 20 மில்லி, ஒட்டும் திரவம் 10 மில்லி என்னும் அளவில் கலந்து அடிக்க வேண்டும். மேலும், வளர்ச்சிப் பருவத்தில் தென்படும் களைகளை நீக்கினால், நல்ல விளைச்சல் கிடைக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு
பூத்துக் காய்க்கும் பருவத்தில் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு குளோர்பைரிபாஸ் 20 இசி 3 மில்லி, அல்லது குயினால்பாஸ் 25 இசி 3 மில்லி மருந்தை காய்கள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் 90-100 நாட்களில் விதைகள் முற்றி விடும்.
அறுவடை
செடிகளை அறுத்துக் கட்டுகளாகக் கட்டிக் களத்தில் செங்குத்தாக நிறுத்தி வைக்க வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து மாடுகளைக் கொண்டு அல்லது டயர்களில் குறைந்த காற்றுள்ள டிராக்டரைக் கொண்டு விதைகளைப் பிரித்து எடுக்கலாம். பின்னர், விதைகளை நன்கு சுத்தம் செய்து 12-13 சத ஈரப்பதம் இருக்குமளவுக்குக் காயவைக்க வேண்டும்.
தரம் பிரித்தல்
இப்படிக் காய்ந்த விதைகளில் காணப்படும் உடைந்த, சுருங்கிய, நோய் தாக்கிய விதைகளை நீக்க வேண்டும். இதற்கு, 8க்கு8 பி.எஸ்.எஸ். சல்லடையைப் பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 200-240 கிலோ விதைகள் மகசூலாகக் கிடைக்கும். இந்த விதைகளை அரசு விதைப் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்க வேண்டும். இதனால், விதைகளின் தரத்தை உறுதி செய்துகொள்ள முடியும்.
இதுவரை குறிப்பிட்டுள்ள தொழில் நுட்பங்களைச் செவ்வனே கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை விதைப்பதன் மூலம் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மகசூலைப் பெறலாம்.
முனைவர் மு.சண்முகநாதன்,
முனைவர் ம.சுருளிராஜன், முனைவர் இர.சந்திரசேகரன்,
வேளாண்மை அறிவியல் நிலையம், கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி-639115