கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018
கறவை மாடுகள் வளர்ப்பில் மிகவும் முக்கியமானது சினை மாடுகளைப் பராமரிப்பது. சினை மாடுகளில் ஈற்றுக்கு முன்பும் ஈற்றுக்குப் பின்பும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான், கறவை மாடுகளை நல்ல முறையில் வளர்த்துப் பயனடைய முடியும். இங்கே, கறவை மாடுகள் ஈன்ற பிறகு எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றிப் பார்ப்போம்.
சினை மாடுகள் பராமரிப்பில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது, கன்றை ஈனுவதற்கான அறிகுறிகளாகும். சினையூசி போடப்பட்ட நாளிலிருந்து 280+5 நாட்களில் கன்றை ஈன்று விடும். ஆனால், 270ஆம் நாளிலிருந்தே மாட்டைக் கவனமாகப் பார்த்துவர வேண்டும். எட்டு மாதங்கள் முடிந்ததும் சினை மாட்டைத் தனியே வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
நஞ்சுக்கொடி தங்குதல்
கருப்பையில் இருக்கும் கன்றுக்கு, உணவு, சுவாசம், கழிவு மற்றும் சுரப்பு உறுப்பாகவும், வெளிநோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் தடுப்புச் சுவராகவும் விளங்குவது பிளசண்டா என்னும் நஞ்சுக்கொடி. இது, கன்று பிறந்த பிறகு 3-8 மணி நேரத்துக்குள் தானாகவே வெளியே வந்துவிடும். அப்படி வராமல் கருப்பையிலேயே தங்கி விடுவதைத் தான், நஞ்சுக்கொடி தங்குதல் (Retained Placenta) என்கிறோம். எட்டுமணி நேரமாகியும் நஞ்சுக்கொடி வராத நிலையில், கால்நடை மருத்துவரிடம் காட்டிச் சிகிச்சையளிக்க வேண்டும். நஞ்சுக்கொடி வெளியேறி அதை அகற்றும் வரையில் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் தாய் மாடே அதைச் சாப்பிட்டு விடும். இப்படி நடந்து விட்டால், மாட்டுக்குச் செரிமானச் சிக்கல் ஏற்படும்; பாலுற்பத்தியும் குறைந்து விடும். நஞ்சுக்கொடியை நாய்கள் தூக்கிச் செல்லவும் வாய்ப்புண்டு.
நஞ்சுக்கொடி விழாமல் இருப்பதை, நோயுற்ற நிலையாகக் கருத வேண்டும். இது கருப்பையிலேயே தங்கி விட்டால், பாலுற்பத்தி பாதிக்கும்; மீண்டும் பருவத்துக்கு வரக் காலதாமதமாகும்; தயிரைப் போல வெள்ளையாகத் துர்நாற்றத்துடன் சீழ் வரும்; மாடு சரியாக உண்ணாது; கருப்பை அழற்சி ஏற்பட்டு எண்டோமெட்ரைடிஸ் (Endrometritis) பயோமெட்ரா (Pyometra) போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகும்.
பெரும்பாலான மக்கள் நஞ்சுக்கொடியை விழ வைப்பதற்காக, வெளியே தொங்கும் நஞ்சுக்கொடியில், செங்கல் அல்லது பிரண்டைக் கொடியைக் கட்டி விடுவார்கள். இது தவறான முறையாகும். இப்படிச் செய்தால் கருப்பை அழற்சி ஏற்படும். கிராமங்களில் மாடு ஈன்றதும், கம்பு, கேழ்வரகு, எள் புண்ணாக்கு, பனைவெல்லம் கலந்து வேகவைத்து மாட்டுக்குக் கொடுப்பார்கள். இதனால் நஞ்சுக்கொடி வெளியேறும் என்பது நம்பிக்கை.
இதற்குப் பதிலாக, உலர் மற்றும் அடர் தீவனத்தில் அரைக்கிலோ பனைவெல்லத்தைக் கலந்து கொடுக்க வேண்டும். பிறப்பு உறுப்பையும், மடியையும் மிதமான சுடுநீரில் கழுவி, கன்றைப் பால்குடிக்கச் செய்ய வேண்டும். அப்போது, ஆக்சிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோன் சுரப்பதன் காரணமாகப் பால் பெருகுவதுடன், நஞ்சுக்கொடியும் எளிதாக வெளியே வந்துவிடும். நஞ்சுக்கொடி தங்குவதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால், மாடு இறப்பதற்கும் வாய்ப்புண்டாகி விடும்.
இரத்தப்போக்கு
கால்நடை மருத்துவர்கள் அல்லாத மற்றவர்களைக் கொண்டு பிரசவம் பார்ப்பதே, இரத்தப்போக்கு (Bleeding) ஏற்படுவதற்குக் காரணம். கன்றை வெளியே எடுக்கத் தெரியாமல் இவர்கள் மாட்டின் பிறப்புறுப்பைக் கிழித்து விடுவார்கள். நஞ்சுக்கொடியை எடுப்பதாகச் சொல்லி, கருப்பையில் கன்றையும் தாயையும் இணைக்கும் நஞ்சுக்கொடியையும், கருப்பையில் உள்ள காடிலிடன்ஸ் மற்றும் கேரங்கில் (Cotyledens & Caruncles) என்னும் பாகத்தையும் பிய்த்து எடுத்து விடுவார்கள். இதனால் இரத்தப்போக்கு அதிகமாகும். மேலும், அதிர்ச்சி (Shock) ஏற்பட்டு மாடு உடனே இறந்து விடும்.
தலைச்சன் ஈற்று மாட்டில் கன்று பெரிதாக இருந்தால், இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஈன முடியாமல் தாயின் வயிற்றுக்குள் இறந்துவிடும் கன்றின் கால்களைத் தனித்தனியாக வெட்டியெடுத்து, பீடாடமி (Fetotomy) என்னும் அறுவைச் சிகிச்சை செய்யும் போதும், சிசேரியன் அறுவைச் சிகிச்சையின் போதும், இரத்தப்போக்கு உண்டாகும். கருப்பை அழற்சி அல்லது முறுக்கிக் கொள்வதைச் சரிப்படுத்த, மாட்டை உருட்டும் போதும், கன்று பிறந்ததும் கருப்பை முழுவதையும் வெளியே தள்ளிவிடும் போதும் (Ulterine Prolapse) இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கருப்பை முழுவதும் வெளியாதல்
சினைமாடு மிகவும் பலவீனமாக இருந்தால், கன்றை ஈன முடியாமல் மிகவும் சிரமப்படும். அந்த நிலையில் அவசரப்பட்டுக் கன்றை வெளியே எடுத்து விட்டால், சிறிது நேரத்தில் கருப்பை முழுவதும் (Whole Uterine Prolapse) வெளியே வந்துவிடும். இதனால், வெளியே வந்த பகுதியில் காயமுண்டாகி இரத்தப்போக்கு ஏற்படும். உடல் சோர்வின் காரணமாக அதிர்ச்சி (Shock) ஏற்பட்டு மாடு உடனே இறந்து விடும். இதைத் தவிர்க்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சையளிக்க வேண்டும்.
கருப்பை அழற்சி
இது ஈற்றுக்குப் பிறகு கருப்பையைப் பாதிக்கும் நோயாகும். நஞ்சுக்கொடி தங்குதல், கருச்சிதைவு, கன்றை ஈன முடியாத நிலை, கருப்பை வெளித்தள்ளுதல், தீவனக்குறை ஆகியவற்றால், கருப்பை அழற்சி (Endometritis) ஏற்படுகிறது. ஈன்று இரண்டு நாள் கழித்து, பிறப்பு உறுப்பிலிருந்து வெள்ளையும் மஞ்சளும் கலந்த தயிரைப் போன்ற சீழ் துர்நாற்றத்துடன் வெளிவரும். செர்விக்ஸ் என்னும் கமலம் விரிந்திருக்கும். கருப்பை மென்மையாக இல்லாமல் தடித்திருக்கும். இதனால், மீண்டும் சினைக்கு வருவதற்குக் காலதாமதம் ஆவதுடன், சினைக்கே வரமுடியாத நிலையும் ஏற்படும். தகுந்த சிகிச்சையளிக்கா விட்டால் கருப்பையில் சீழ் தங்கி, பயோமெட்ரா (Pyometra) என்னும் நிலைக்குச் சென்றுவிடும். இதனால் பெருத்த பொருளாதார இழப்பு உண்டாகும்.
பால் காய்ச்சல் நோய்
கறவை மாடுகளின் உடல் செயலியல் (Physiological Functions) காரணமாக மேற்கண்ட நோய்கள் ஏற்படுகின்றன. அதைப்போல, வளர்சிதை மாற்ற நோய்(Metabolic Diseases) அல்லது உடல் உள்ளியக்க நோய்களில் பால் காய்ச்சல் (Milk Fever) நோயும், ஊன்சிதைவு நோயும் (Ketosis) முக்கிய நோய்களாக உள்ளன. பால் காய்ச்சல் நோய் என்று சொன்னாலும், இந்நோயின் போது, மாட்டின் உடல் வெப்பம் சாதாரணமாகவே (Normal Temperature) இருக்கும். அதிகமாகப் பாலைத் தரக்கூடிய பிரிசியன், ரெட்டேன், ஜெர்சி கலப்பின மாடுகள், எருமைக் கலப்பின மாடுகள் இந்நோயால் அதிகமாகப் பாதிக்கப்படும். நாட்டுப் பசுக்கள் பாதிக்கப்படுவதில்லை.
பால் காய்ச்சல் நோய் ஈனும் போதும், ஈன்ற இரண்டு நாட்களுக்குள்ளும் ஏற்படுகிறது. மாட்டின் இரத்தத்தில் கால்சியம் திடீரெனக் குறைவதே இதற்குக் காரணம். இத்துடன் பாஸ்பரஸ் சத்தும் குறைந்து விடும். இரத்தத்தில் சர்க்கரை அதிகமானால் பால் காய்ச்சலும், சர்க்கரை குறைந்தால் ஊன் சிதைவு நோயும் ஏற்படும். கன்றின் வளர்ச்சிக்காக இரத்தத்தில் இருந்து அதிகமாக எடுக்கப்படுவதால் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், பாரா தைராய்டு ஹார்மோன் (Para Thyroid Hormone) மற்றும் வைட்டமின் டி சுரப்பியும் பாதிக்கப்படும். முதல் இரண்டு ஈத்துகளில் இந்நோய் வருவதில்லை. 5-10 வயதுள்ள மாடுகளையே இந்நோய் அதிகமாகத் தாக்கும்.
மடிவீக்க நோய்
இந்தியாவில் மட்டும் மடிவீக்க நோயால் சுமார் 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இங்கு ஆறுகோடிப் பசுக்களும் நான்கு கோடி எருமைகளும் உள்ளன. இவற்றில் 10% மாடுகள் மடிவீக்க நோயால் பாதிக்கப்படுகின்றன. கலப்பின மாடுகளிலும், முர்ரா எருமைகளிலும் இந்நோயின் தாக்கம் அதிகம். பாலை உற்பத்தி செய்யும் சுரப்பிகளில் சுழற்சி ஏற்படுவதாலும், நுண்ணுயிரி, நச்சுயிரி, பூஞ்சைக் காளான், ஒவ்வாமை ஆகியவற்றாலும் மடிவீக்க நோய் உண்டாகிறது.
ஊன் சிதைவு நோய்
ஈன்ற மாட்டில் சர்க்கரை குறைந்து விட்டால், ஊன் சிதைவு நோய் (Ketosis) ஏற்படும். அதிகமாகக் கறக்கும் மாடுகளில் ஒன்றரை கிலோ சர்க்கரை, பால் மூலம் வெளியேறுகிறது. மாவுச்சத்துக் குறைவதாலும், புரதச்சத்து நிறைந்த உணவை மாடு அதிகமாக உண்பதாலும், சர்க்கரை அளவு குறைந்து விடும். இதனால், கீடோன் (Ketone Bodies) பெருமளவில் உற்பத்தியாகி, கீடோசிஸ் நிலை ஏற்படுகிறது.
இதனால், பசியும் குறைந்து பாலுற்பத்தியும் குறைந்து விடும். மாடு மெலிந்து விடும். ஆனால், வைக்கோலை மட்டும் உண்ணும். ஆட்டுப் புழுக்கையைப் போலக் கெட்டியாகப் போடும் சாணத்தில் சளி ஒட்டியிருக்கும். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இந்நோயைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையளித்து விடலாம்.
எழ முடியாமை நோய்
மாடுகளில் கால்சியக் குறையால் எழ முடியாமை நோய் (Cow Downers Syndrome) ஏற்படுகிறது. பெரும்பாலும் பால் காய்ச்சல் வந்த பின்பே, எழ முடியாமை நோய் வரும். பிரிசியன் மாடுகள் இதனால் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றன. நீண்ட நாட்களாக, பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் பற்றாக்குறை இருந்தாலும் இந்நோய் வரும். 4-5 முறை ஈன்ற மாடுகளே அதிகமாகப் பாதிக்கப் படுகின்றன. முன்னங்கால்களில் எந்தச் சிக்கலும் இருக்காது. பின்னங் கால்கள் மட்டுமே எழ முடியாமல் இருக்கும். இதனால், சரியாக உண்ணாது. எழ முயல்வதால் பின்பகுதியை உயர்த்திக் கொண்டிருக்கும். பால் காய்ச்சல் வந்த மாடுகளே இந்நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுவதால், உடனடியாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
இரத்தச் சிறுநீர் நோய்
ஈன்று 2-4 வாரங்களில் இரத்தச் சிறுநீர் நோய் (Hypo Phospotemia) ஏற்படுகிறது. நிறையக் கறக்கும் மாடுகளையும், 3-6 முறை ஈன்ற மாடுகளையும் அதிகமாகத் தாக்குகிறது. பாஸ்பரஸ் என்னும் மணிச்சத்துக் குறையால் இரத்தக் குழாய்களில் சிவப்பணுக்கள் சிதைக்கப்படுவதால், சிறுநீரில் இரத்தம் வெளியேறுகிறது.
எனவே, இதுவரையில் கூறியுள்ள நோய்களைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்வது மட்டும் போதாது. கவனிப்பின்றிக் கால்நடை இல்லை; கால்நடையின்றி ஏர்முனை இல்லை. எனவே, இந்த நோய்கள் கறவை மாடுகளைத் தாக்கினால் உடனே கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். அப்போது தான், பொருளாதார இழப்பைத் தவிர்த்து, பண்ணையை இலாபமிக்கதாக நடத்த முடியும்.
டாக்டர் A.R.ஜெகத் நாராயணன்,
மண்டல இணை இயக்குநர் (ஓய்வு), கால்நடைப் பராமரிப்புத்துறை,
கன்னங்குறிச்சி, சேலம் 636008.