கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021
கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்னும் களைச் செடியாகும். 1.5-2.0 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடிக்கு, காங்கிரஸ் புல், கேரட் களை என்னும் பெயர்களும் உண்டு. குயின்ஸ்லேன்ட் என்னும் இடத்தில் இருந்த பார்த்தீனியச் செடிகள் இரண்டாம் உலகப் போரின் போது பயன்பட்ட ஆயுதங்கள், கருவிகள் மூலம் பார்த்தீனிய விதைகள் மற்ற இடங்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்தச் செடிகள் 35 மில்லியன் எக்டர் விளை நிலங்கள், தரிசு நிலங்கள், குன்றுகள், சாலையோரம், இரயில் பாதையோரம் எனப் பரவி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு செடி முளைத்து வளர்ந்து நான்கு வாரங்களில் விதைகளை உற்பத்தி செய்து விடுவதால், ஓராண்டில் பல மடங்குகளில் பரவி விடும். ஒவ்வொரு செடியும் 5,000-25,000 விதைகளை உற்பத்தி செய்யும். இரசாயனத் திரவம் சுரக்கும் இதன் இலைகள் காய்ந்து மண்ணில் மட்கும் போது, மற்ற பயிர்கள் வளர்வதில் தடை ஏற்படும். பார்த்தீனிய மகரந்தம், மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும்.
பார்த்தீனியச் செடிகள் நிலத்தில் முளைப்பதால், உணவு மற்றும் தீவனப் பயிர்களின் வலர்ச்சிப் பாதிக்கப்படும். இச்செடியின் வேர், இலை, தண்டு, பூ போன்ற அனைத்துப் பாகங்களும் தீமையை விளைவிக்கும். எனவே, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 2, 3 ஆகிய வாரங்கள், பார்த்தீனிய விழிப்புணர்வு வாரங்களாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன.
கால்நடைகள் பாதிக்கப்படுதல்
மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், பார்த்தீனியச் செடிகளை உண்பதால், வயிற்றுப்போக்கு, கல்லீரல், கணையம் செயலிழப்பு மற்றும் உரசுவதால், தோல் நோய், தோலின் நிறம் மாறுதல், அரிப்பு ஏற்படுதல் மற்றும் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆடு, மாடுகளின் பாலின் தரமும், இறைச்சியின் தரமும் கெட்டு விடும். விளைநிலப் பரப்பும், மேய்ச்சல் பரப்பும் குறையும். குறிப்பாக, மேய்ச்சல் நிலப்பரப்பு 90% வரை குறையும்.
பயிர்கள் பாதிக்கப்படுதல்
உணவுப் பயிர் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். பார்த்தீனிய இலைகள், வேர்களில் ஹைமினின், ஹிஸ்டிரின், அம்ரோசின், பிளவோனாய்ட்ஸ் போன்ற வேதித் திரவங்கள் சுரக்கும். எனவே, இவை மண்ணில் மட்கும் போது மற்ற பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்துதல்
பூக்கள் உருவாகு முன் வேருடன் செடியைப் பிடுங்கி விட வேண்டும். அதிகமாக இருந்தால், குழியில் போட்டு மட்க வைத்து உரமாக மாற்றலாம். நிலத்தில் நிறைய இருந்தால், அச்செடிகள் பூப்பதற்கு முன், 1-2 முறை உழுது மண்ணில் மடக்கி விடலாம்.
இரசாயன முறை: ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் அட்ரசின் வீதம் கலந்து, பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்கு முன் நிலத்தில் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம் சோடியம் குளோரைடு, 2 மில்லி சோப்பு எண்ணெய் வீதம் கலந்து, பூக்கள் வருமுன் செடிகளில் தெளிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 2,4, டி சோடியம் உப்பு 8 கிராம் அல்லது கிளைப்போசைட் 10 மில்லி, 20 கிராம் அம்மோனியம் சல்பேட், 2 மில்லி சோப்பு எண்ணெய் வீதம் கலந்து பூக்கள் வருமுன் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் மெட்டிரிபூசின் வீதம் கலந்து பயிரில்லாத நிலங்களில் தெளிக்கலாம்.
உயிரியல் முறை: செடிக்கு 50 மெக்சிகன் வண்டுகள் (Zygogramma bicolorata) வீதம் விடலாம். செண்டுமல்லி, தீவனச்சோளம், சூரியகாந்தி, மக்காச்சோளம் போன்ற போட்டிப் பயிர்களைப் பயிரிடலாம்.
உரமாக மாற்றுதல்
தண்ணீர் தேங்காத இடத்தில் 10x6x3 அடி அளவில் குழியை எடுக்க வேண்டும். உரத்தின் முக்கியச் சத்துகள் மண்ணுக்குள் பரவாமல் இருக்க, பக்கச் சுவரைக் கற்கள் அல்லது மண்ணால் பூச வேண்டும். 10 கிலோ யூரியா அல்லது ராக் பாஸ்பேட், 200 கிலோ மண், 100-150 லிட்டர் நீர், 500 கிலோ பார்த்தீனியச் செடிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் குழியில் 100 கிலோ பார்த்தீனியச் செடிகளைப் பரப்ப வேண்டும். அதன் மேல் 500 கிராம் யூரியா அல்லது ராக் பாஸ்பேட்டைத் தூவ வேண்டும். இதன் மேல் 50 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டிரைக்கோடெர்மா ஹர்சியானாவைத் தூவுதல் நல்லது. அடுத்து 10-20 கிலோ மண்ணை இட்டு, நீரைத் தெளித்து நன்கு மிதித்து விட வேண்டும்.
இதைப் போல, குழிக்கு மேல் ஓரடி உயரம் வரை, அடுத்தடுத்த அடுக்குகளை அமைத்து, சாணம், மண் மற்றும் உமிக் கலவையால் குழியை மூடிவிட வேண்டும். இப்படிச் செய்தால் 4-5 மாதங்களில் பார்த்தீனியச் செடிகள் மட்கி நல்ல கம்போஸ்ட் உரமாக மாறி விடும். 100 கிலோ பார்த்தீனியச் செடிகளில் இருந்து 40-45 கிலோ உரம் கிடைக்கும்.
சலித்தல்
குழியில் இருந்து எடுக்கும் பார்த்தீனியக் கம்போஸ்ட் உரத்தில் சிறு சிறு குச்சிகள் கிடக்கும். இவையும் மட்கிய நிலையில் தான் இருக்கும். இவற்றைச் சிறிது நேரம் வெய்யிலில் உலர்த்தி நீண்ட குச்சியால் அடித்தால் பொடியாகி விடும். இதை 2×2 துளை அளவுள்ள சல்லடையில் சலிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உரக்குழி, திறந்த வெளியில் நிழலான இடத்தில் இருக்க வேண்டும். குழியைச் சுற்றிப் பார்த்தீனியச் செடிகள் முளைத்தால், அவற்றைப் பிடுங்கி அழித்து விட வேண்டும். குழியின் மேற்பரப்பை, சாணம், மண் மற்றும் உமிக் கலவையால் மூட வேண்டும். உரக்குழியில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். ஈரம் குறைந்தால் மேற்பரப்பில் துளையிட்டு நீரை ஊற்றி விட்டு, மீண்டும் மூடி விட வேண்டும். மட்குதல் நடக்கும் போது குழிக்குள் 60-70 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கலாம். வெப்பப் பகுதியில் 3-4 மாதங்களில் உரமாகி விடும். குளிர்ச்சியான பகுதியில் அதிக நாட்கள் ஆகும்.
நன்மைகள்
பார்த்தீனியச் செடிகளை மட்க வைப்பது, மக்களுக்கும், கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் நல்லது. தொழுவுரம், மண்புழு உரத்தில் இருப்பதை விட, இவ்வுரத்தில் தழை, மணி, சாம்பல் சத்து அதிகமாக இருக்கும். மண்வளம் கூடுவதால் விளைச்சலும் கூடும். பார்த்தீனியக் கம்போஸ்ட்டை, எக்டருக்கு 2.5-3.0 டன் இடலாம். காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்தால் 4-5 டன் இடுவது நல்லது.
முனைவர் மா.டெய்சி,
முனைவர் ந.அகிலா, முனைவர் கி.செந்தில் குமார்,
வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல்.