கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2015
உலக நிலப்பரப்பில் நாற்பதில் ஒரு பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. நம் அருகமை நாடுகளாகிய சீனா அல்லது இரஷ்யாவின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலப்பரப்புச் சிறியது தான். ஆயினும், ஒரு கண்டத்திற்கான இயற்கைப் பண்பாட்டுக் கூறுகளை நம் நாடு கொண்டுள்ளது.
நிலம், காலம், மண், உயிர் என்னும் இயற்கைக் கூறுகளிலும், மக்களின் இனம், மொழி, சமயம் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளிலும் இந்தியா பெற்றிருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகளை உற்றுக் கவனித்த உலகச் சமுதாயம், இந்தியாவைத் தனிப்பட்ட ஒரு தேசமாகக் கொள்ளாமல், இந்தியத் துணைக் கண்டம் என்றழைத்துப் பெருமை சேர்த்துள்ளது.
இப்படித் தனித்தன்மையைப் பெற்றுள்ள இந்தியா தன் புகழையும் பெருமையையும் தக்க வைத்து உலகில் மேலோங்க வேண்டுமானால், மக்களிடம் காணும் சமூக முரண்கள் அழிய வேண்டும். அதே சமயம் இயற்கை வளம் பெருக வேண்டும். ஆயினும், இதற்கு மாறான நிலைமையே இந்தியாவில் நிலவுகிறது. அதாவது, நாட்டில் சமூக வேறுபாடுகள் மிகுந்து வருகின்றன. இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன.
மக்களின் பண்பாடு, மொழி, இனம், சமயம் மற்றும் இவற்றில் காணும் முரண்கள் தொடர்பான செய்திகள், பள்ளிக்கல்வி நிலையிலேயே விவாதிக்கப்பட்டு விடுகின்றன. அதனால் இவை குறித்த விளக்கங்களைச் சிறு குழந்தைகளிடம் இருந்தே இலவசப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது. சாதியச் சண்டைகளுக்கும் சமயப் போர்களுக்குமான களம் நம் தேசம் என்பது, வளரிளம் பருவ நிலையிலேயே மாணவனின் மனதில் ஆழப் பதிகிறது.
கல்லூரி வயதில், இளைஞன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு குறித்து நன்குணர்கிறான். இவை ஒவ்வொன்றும் முரண்பட்ட இனத் தோற்றத்துக்கு வித்திடும் அம்சங்கள். இவையல்லாது, சமுதாய அவலங்களைப் பன்மடங்காக்கி அம்பலப்படுத்தும் இன்றைய காட்சி ஊடகங்களும் சமுதாயத்தில் இக்கேடுகள் மேலோங்கக் காரணமாக உள்ளன எனலாம். இச்சூழலில் வளரும் இந்திய இளைஞன் சாதிய நோயாளியாக, சமயப் பித்து மிக்கவனாக உருவாவது தவிர்க்க இயலாததாக உள்ளது. ஆயினும், இன்றைய உயர் கல்விச்சூழல் பாலினப் பாகுபாடுகளை நீக்கும் தன்மையை உள்ளடக்கியுள்ளது.
அதனால் இந்தத் தீங்குகளிலிருந்து விலகி நின்று சிந்திக்கும் ஆற்றல் இரு பாலாரிடமும் பெருகி வருவதைக் காண முடிகிறது. இவர்கள் எண்ணிக்கையில் மிகும் நிலையில் சமூக முரண்கள் அறுகிப் போக வாய்ப்புள்ளது. இப்படி, மக்களினம் சமூகக் கொடுமைகளை விட்டு விலகி வருவது சாத்தியமானாலும் நம் தாயகப் புகழ் நிலைக்க வேண்டுமெனில் அழிந்து வரும் இயற்கை வளத்தை மீட்கும் ஆற்றல் கொண்டதாகப் புதிய தலைமுறை உருவாக வேண்டுவதும் அவசியம்.
இதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிதென்று கருதும் நிலையே இன்றுள்ளது. அதனால், இந்நிலை நீங்க சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆற்றலும் ஒன்று சேர வேண்டும். இயற்கையைப் பேணும் பாங்குகள் பற்றி அறியாதவர்கள் நாட்டில் மிகுதி என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
பொதுவாக, இந்திய இயற்கைக் கூறுகளின் சிறப்புத் தன்மைகள் பள்ளிகளில் அறிமுகமாவதோடு சரி. இளம் மனதில் அவை அழுந்தப் பதிவதில்லை. மேலும், இந்திய வளங்களின் இன்றைய நிலை குறித்தறியும் ஆர்வமும் மக்களுக்கு இல்லை. அதனால், தேசத்தின் இயற்கை வளம் அண்மைக் காலமாகப் பெற்று வரும் சீரழிவுகளும் அவற்றின் பின்விளைவுகளும் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதே உண்மை.
எடுத்துக்காட்டாக, வனவளமிக்க முதல் பத்து உலக நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. அரிய தாவர வகைகளும், உயிரினங்களும் இந்தியக் காடுகளில் பெருமளவில் உள்ளன. உலகின் 12 வனப்பகுதிகள் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்க மண்டலங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இந்தியக் காடுகளும் அடங்கும்.
பதிவு செய்யப்பட்ட உலகத் தாவர வகைகளில் சுமார் 12% தாவரங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படக் கூடியவை. இவற்றில் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை மட்டும் 47,000 ஆகும். மற்றவை பூவாத் தாவரங்கள். அதே போல், கண்டறியப்பட்ட உலக விலங்குகளில் 7% இந்தியாவைச் சேர்ந்தவை. இதனடிப்படையில் 90,000 விலங்கினங்களும், 2,500 வகை மீன்களும், 17,000 விதையுறையுள்ள உயிரிகளும், இந்தியக் காடுகளில் காணப்படுகின்றன. மேலும், 4,000 பாலூட்டிகளும் இந்தியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவ்வண்ணமே, உலகின் அரியவகைப் பறவையினங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகிலுள்ள மொத்தப் பறவைகளில் எட்டில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்த வன உயிரிகள் மற்றும் தாவர வகைகளில் பெரும்பாலானவை இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலையில் மட்டுமே உயிர்த்து நிற்கக் கூடியவை என்பதால், இவற்றைப் பிற நாடுகளில் காண்பது இயலாது.
அதே சமயம் இந்திய வனப் பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் தங்கி இளைப்பாறிச் செல்லும் நோக்கில் பல வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இடம் பெயர்ந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. இப்படி, உலக உயிரினப் பூங்காவாக இந்தியா திகழ்வதால் காட்டுயிர்ப் பாதுகாப்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு உள்ளது.
அதனால், மிக நீண்ட காலமாகவே இந்தியா, வனப் பாதுகாப்பு முறைகளைச் செவ்வனே பயன்படுத்தி வருகிறது. பழங்காலந் தொட்டே காடு வளர்ப்பில் நாட்டம் கொண்ட நாடு இந்தியா. அரசுக்கான காடுகள் கொள்கை 1894 ஆம் ஆண்டு முதலே, அதாவது, ஆங்கிலேயர் காலம் தொட்டே நாட்டில் நடைமுறையில் இருந்துள்ளது.
தேச விடுதலைக்குப் பின் இது 1952 ஆம் ஆண்டில் அன்றைய நிலைமைக்கு ஏற்ப திருத்தப்பட்டது. பின் 1988 ஆம் ஆண்டிலும் இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின்வழி சூழலின் நிலைத்தன்மையைப் பேணவும், இயற்கைச் சமன்பாட்டை மீட்பதற்குமான செயல்பாடுகள் நாட்டில் ஊக்கம் பெறத் தொடங்கின.
பின் 1972 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம், தேசிய பல்லுயிர்ப் பெருக்கச் சட்டம் 2002 ஆகியன வாயிலாக, இந்திய வனப் பகுதிகள் சட்டப்படியான பாதுகாப்பை முழுமையாகப் பெற்று வருகின்றன. இவை வனப்பகுதிகளில் இருந்து விதிகளை மீறி உயிர்களுக்கு ஊறு விளைவிப்பதை, வன விலங்குகளை வேட்டையாடுவதை, காட்டு மரங்களை வெட்டிச் சாய்ப்பதைக் கட்டுப்படுத்தும் கருவிகளாகச் செயல்படுகின்றன.
பொதுவாக, வனத்துறை சார்ந்த அத்துமீறல்களை விசாரிக்கும் அமைப்பாக இந்திய உளவுத்துறை உள்ளது. ஆனால், நாட்டில் தனிமனிதக் குற்றங்கள் மிகுந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் இவ்வமைப்பின் பணிச்சுமை அதிகமாவதைக் கணக்கில் கொண்டு வனத்துறை சார்பான குற்றங்களை மட்டும் தனியே விசாரித்து அறிவதற்கெனக் காட்டுயிர்க் குற்றக் கட்டுப்பாட்டு அமைப்பைப் பின்னர் அரசு ஏற்படுத்தியது. இவ்வமைப்பு, அறுகி வரும் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ள வனச் சரகங்களைக் கண்டறிந்து சூழல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சமூகப் பங்களிப்புக்கு வித்திடுகிறது.
மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழியங்கும் இதற்கான அமைப்புகள், உலக உயிரினப் பாதுகாப்புக்கும் பன்முகத் தன்மையின் செழுமைக்கும் காரணமாகத் திகழும் இந்திய வனப்பகுதிகளில் உள்ள தாவரங்கள், மரங்கள் மற்றும் உயிரிகள் பற்றிய கணக்கெடுப்புகளைத் தனித்தனியே எடுத்து அவற்றை ஆவணப்படுத்துகின்றன. மேலும், அழிந்து வரும் உயிரிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து அவற்றைக் களையும் முயற்சியிலும் இவ்வமைப்புகள் ஈடுபடுகின்றன. இவ்வமைப்புகள் தரும் செய்திகளைக் கொண்டு இந்தியக் காட்டுயிர்களின் இன்றைய அவலநிலையை அறியலாம்.
எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியேனும் வனப் பகுதியாக இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. ஆயினும், ஐக்கிய நாடுகள் சபையின் 2010 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்தப் பரப்பில் 24% அளவுக்கு மட்டுமே வனப்பகுதிகள் அமைந்துள்ளன. அதாவது, இந்தியாவின் வனப்பரப்பு சுமார் 68 மில்லியன் எக்டர் ஆகும்.
இப்படிக் கணக்கிடப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் அடர்த்தியான மரங்கள் நிறைந்த வனச்சரகங்கள் எனக் கொள்ள முடியாது. இப்பகுதிகளில் எபின், தேவதாரு, செம்மரம், கருங்காலி போன்ற மரங்கள் வளரும் பசுந்தாவரப் பகுதிகள், தனித்த மரங்களும் புதர்ச் செடிகளும் கொடிகளும் கலந்து காணப்படும் கலப்புக் காட்டுப் பகுதிகள், ஊசியிலைக் காட்டுப் பகுதிகள், தேக்கு, சால், சந்தனம், மூங்கில் போன்றவை நிறைந்த இலையுதிர்க் காட்டுப் பகுதிகள், சப்பாத்திக் கள்ளியும் கற்றாழையும் வளரக்கூடிய பாலைத் தாவரப் பகுதிகள் மற்றும் சதுப்புநிலக் காடுகள் உள்ளிட்டவையும் அடங்கும் என்பது அறியத் தக்கதாகும்.
இந்திய வனத்துறையின் 2013 ஆம் ஆண்டுக்குரிய கணக்கின்படி காடுகளின் பரப்பளவு, நாட்டின் வட தென் பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் உயர்ந்ததுள்ள அதே சமயம், வடகிழக்குப் பகுதிகளில் காடுகள் படிப்படியாகக் குறைந்து கொண்டே இருக்கின்றன. இப்படி அடர் வனப்பகுதிகள் அழியத் தொடங்கும் நிலையில், அங்கு நிலவும் இயற்கைச் சூழலில் மட்டுமே உயிர்த்திருக்கக் கூடிய உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் தோன்றும்.
அழிவின் விளிம்பில் நிற்கும் 32 பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியும், கிழக்கு இமாலயப் பகுதியும் இடம் பெற்றுள்ளன. இத்தகைய பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளின் அளவில் ஏறத்தாழ நாற்பது எக்டர் அழியுமானால், அங்குள்ள 1,500 வகைப் பூக்கும் தாவரங்கள், 700 மரவகைகள், 400 பறவையினங்கள், 150 பூச்சிகள், 100 ஊர்வன மற்றும் 60 நீர்நில வாழ்வன ஆகியவை அழிந்து விடும் என ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அழியும் நிலையிலுள்ள இந்திய வனப்பகுதிகளின் அளவுக்கேற்ப அழியக் கூடிய உயிரின அளவும் அதிகரிக்கும் என்பது கவனிக்கத் தக்கது.
இந்தியக் காடுகளிலுள்ள தாவர வகைகளில் 47,791 பிரிவைச் சேர்ந்தவை பல்வேறு வகை நோய்த் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நுண்ணுயிரிகள். இவற்றில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கடற் பாசிகள், பூஞ்சைக் காளான்கள், பூக்கும் தாவரங்கள், பெரணிகள், விதை மூடாத் தாவரங்கள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.
இவை விரைவில் அழிந்து விடும் அளவுக்குக் கடுமையான நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அழியும் இனங்களில் இவை சிற்றினங்கள் தானே என்று எண்ணுவது தவறாகும். ஏனெனில், இவை மனிதர்க்கும் உயிரினப் பெருக்கத்துக்கும் பேருதவி செய்யக் கூடியவை.
பென்சிலியம் என்பது ஒரு பூஞ்சை. இது கண்ணுக்குப் புலப்படாத ஒரு நுண்ணுயிரி. இதிலிருந்து தான் உயிர்காக்கும் மருந்தாகிய பென்சிலின் கிடைக்கிறது. இந்தப் பென்சிலின் மருந்தின் பயன்பாடு தான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு உயிரிழக்கும் நிலையிலிருந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிர்பெற வைத்தது எனலாம். மற்றொரு நுண்ணுயிரியான ஸ்ட்ரெப்டோமைசிஸ் என்பதிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் சிறு எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
இவையல்லாது, இந்தியக் காடுகளில் வாழும் 96,000 விலங்கின வகைகளை இவ்வமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தியது. இவ்வாய்வின் முடிவுகளை மேலாய்வு செய்த இயற்கைப் பாதுகாப்புக்கான உலக ஒருங்கமைப்பு, நோயுற்றுள்ள இந்திய உயிரினங்களில் 18 நீர்நில வாழ்வன, 14 வகை மீன்கள், 13 பறவைகள், 10 பாலூட்டிகள் ஆகியன மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அழியும் இனங்களாகக் கருதத்தக்கவை என்கிறது. மேலும், 310 வகை இந்திய வன உயிர்கள் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இவற்றில் 69 மீன் வகைகளும், 38 பாலூட்டிகளும், 32 நீர்நில வாழ்வனவும் அடங்கும் என்றும் இந்த மேலாய்வு தெரிவிக்கிறது
மேற்கண்ட அழிவுகள் அதிகம் இருக்கக் கூடிய பதினான்கு மாநிலங்களை இந்திய வனத்துறை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களும் அடங்கியுள்ளன.
இப்படி, நுண்ணுயிர்கள், தாவரங்கள், நீர் வாழ்வன, நீர்நில வாழ்வன, பறவைகள், பாலூட்டிகள், விலங்குகள் எனப் பல உயிர்களும் சிதையும் போது உயிர் வாழ்விற்கு அவசியமான உணவுச் சங்கிலி அறுந்து போய் உலகம் அழிவை நோக்கிப் பயணிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.
இவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, உயிர்களின் அழிவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைப் போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ள, தொடர்புள்ள மாநில அரசுகளை அறிவுறுத்தி இருக்கிறது. வனவளப் பாதுகாப்பை மிகப்பெரிய சவாலாகக் கருதி, இன்றுள்ள வனப்பகுதிகளின் தர நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய வனத்துறை எடுத்து வருவதாகவும் இதற்கான வழிகாட்டு நெறிகளை அரசுக்கு வழங்குமாறு சூழலியல் ஆர்வலர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதன் எதிரொலி என்பதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து அதற்கேற்ப செயலில் இறங்க வேண்டிய நேரமிது. ஆக, தொலைவில் மரக்கலங்கள் மூழ்கத் தொடங்குவது கண்ணுக்குப் புலப்படுகிறது! உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைவோம்!
செல்லூர் கண்ணன்,
+91 9788754746