செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022
நிலத்தைச் சுற்றி உயிர்வேலி அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல; செலவு குறைவானது மற்றும் நிரந்தரமானது. இரும்புக் கம்பி வேலியைப் போலச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நன்மைகளைத் தருவது. தற்சார்புப் பொருளாதாரம் வளர்வதற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும், உயிர்வேலியில் உள்ள மரங்கள் நிலத்தை நோக்கி வரும் காற்றுத் தடுப்பானாகவும் அமையும். நீர் மற்றும் காற்றால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கும் சக்தி உயிர்வேலிக்கு உண்டு.
நிலத்தில் பயிரிட்டுள்ள பழ மரங்கள், தென்னை, வாழை போன்றவை, கீழே சாய்ந்து விடாத அளவில் காற்றின் வேகத்தைக் குறைத்து தடுக்கும் இந்த உயிர்வேலி. கடற்கரை ஓரங்களில் வீசும் காற்றால், மண் வாரி இறைக்கப்படுவதைத் தடுக்கும்.
உயிர்வேலித் தாவரங்கள்
பரம்பை முள், கிளுவை முள், நாட்டுக் கருவேல், கள்ளிச்செடி, நொச்சி, பனைமரம், கொடுக்காய்ப்புளி, இலந்தை முள், சவுக்கு, போகன் வில்லா என்னும் காகிதப் பூச்செடி, களாக்காய் மரம், சிகைக்காய் மரம் போன்ற தாவரங்களைக் கொண்டு உயிர்வேலி அமைக்கலாம்.
பல்லுயிர்கள் பெருகும் இடமாகவும், அவற்றின் வாழ்விடமாகவும் அமையும் உயிர்வேலியை நிலத்தைச் சுற்றி அமைக்கும் போது, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ உயிரினங்கள் நிலத்தில் தங்காமல், வேலியில் தங்கிப் பாதுகாப்பு வளையமாகச் செயல்படும்.
ஆந்தை, மயில்கள், குருவி, கரிச்சான் போன்ற பறவை இனங்கள் கூடுகளைக் கட்டித் தங்கிச் சிறு சரணாலயம் போல விளங்க, உயிர்வேலித் தாவரங்கள் வழி வகுக்கும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர், நிலத்தைச் சுற்றி உயிர்வேலித் தாவரங்கள் வளர்வதற்கு 6-7 அடி அளவில் இடத்தை ஒதுக்கி உயிர்வேலியை அமைத்தால், மண்ணரிப்பைத் தடுப்பதுடன், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் அரணாகவும் அமைந்து விடும்.
ஆண்டுக்கு ஒருமுறை உயிர்வேலியில் உள்ள தாவரங்களைக் கவாத்து செய்து, புதராக இல்லாமல் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். சிலவகை உயிர் வேலிகள், விவசாயத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் தேனீக்களை வளர்க்கவும் மற்றும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படும்.
பொறிஞர் எம்.இராஜமோகன்,
தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர்,
பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி-15.