கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015
மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவர்களின் சராசரித் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, விவசாயப் பொருள்களும், கால்நடை உற்பத்திப் பொருள்களும் போதுமான அளவில் இல்லை. பருவமழை பொய்த்து வருவதன் காரணமாக, விவசாயப் பெருமக்கள் இப்போது கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கால்நடை வளர்ப்புச் சிறப்பாக அமைய, அவற்றுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் நோய்த் தாக்குதல்களுக்குக் காரணங்களாக இருக்கும் நோய்க் கிருமிகள் பற்றித் தெரிந்து கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். கால்நடைகளைத் தாக்குவதில் குடற் புழுக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
கால்நடைகளைப் பல்வேறு வகையான குடற் புழுக்கள் தாக்குகின்றன. குடல் மற்றும் வயிற்றுப் பகுதியைத் தாக்கும் இப்புழுக்களின் வளர்ச்சிக்குப் பின்வரும் காரணங்கள் சாதகமாக அமைகின்றன. சுற்றியுள்ள தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், சூரிய ஒளி ஆகியன குடற்புழு முட்டைகளின் முதிர்ச்சிக்கு உதவுகின்றன. கால்நடைகளின் சத்துக் குறைபாடு, குடற்புழுத் தாக்குதலுக்கு மிகவும் சாதகமாக அமைகிறது.
மேய்ச்சல் நிலத்தின் தன்மை, ஈரமான மேய்ச்சல் தரை குடற்புழுத் தாக்குதல் அதிகமாக ஏற்படக் காரணங்களாகும். தூய்மையற்ற சூழ்நிலைகளில் கால்நடைகளை வளர்த்தலும் குடற்புழுத் தாக்குதல் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
நோய்க்கான காரணங்கள்
கால்நடைகளை மூன்று விதமான குடற் புழுக்கள் தாக்குகின்றன. அவையாவன: தட்டைப் புழுக்கள், உருண்டைப் புழுக்கள், நாடாப்புழுக்கள். கால்நடைகளின் உணவுப் பாதையில் வாழும் நாடா, உருண்டை மற்றும் தட்டைப் புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகள், கால்நடைகளின் இரத்தத்தை உறிஞ்சியோ அல்லது கால்நடைகள் உண்ணும் உணவுப் பொருள்களை உண்டோ அல்லது கால்நடைகள் உண்ட உணவு, குடலால் உறிஞ்சப்படுவதைத் தடுத்தோ அல்லது நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்தோ குடற் பகுதியைத் தாக்குகின்றன.
தாக்கும் முறை
சிறுகுடலில் வாழும் புழுக்களின் முட்டைகள், சாணத்தின் வழியாக வெளியேறி புல் மற்றும் இதர தாவர இலைகளில் ஒட்டி முதிர்ச்சி அடைகின்றன. மேய்ச்சல் நிலத்தின் ஈரப்பதமும் தட்பவெப்ப நிலையும் முட்டைப் பொரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், இளநிலைப் பருவம் முடிந்த பின்பு புழுக்களாக வெளியேறித் தீவனம் மற்றும் மாசுபட்ட நீர் மூலமாக, ஆடு, மாடுகளின் வயிறுகள் மற்றும் குடலை அடைந்து நோயை உண்டாக்குகின்றன.
இந்தப் புழுக்கள், கால்நடைகள் உண்ணும் தீவனத்தின் சத்தில் 30-40 சதம் வரை எடுத்துக் கொண்டு, கால்நடைகளைப் பலவீனப்படுத்துகின்றன. மேலும், இப்புழுக்கள், கால்நடைகளின் ஈரல், குடல், நுரையீரல், கல்லீரல், தசைகள் மற்றும் தோல் பகுதியைச் சேதப்படுத்துகின்றன. முதிர்ச்சியடைந்த உருண்டை மற்றும் நாடாப் புழுக்கள் குடலின் உணவோட்டப் பகுதிகளை அடைத்துக் கொள்ளவும் செய்கின்றன. இந்தப் பாதிப்பு அதிகமாகும் போது கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது.
நோயின் அறிகுறிகள்
உணவு உண்ணாமை: குடற் புழுக்களால் தாக்கப்பட்ட கால்நடைகளில் பசியின்மை ஏற்படும். குடற் புழுக்கள் கோலிசிஸ்டோ கைனின் என்னும் ஒருவகை நீரை அதிகளவில் குடலில் சுரக்கச் செய்யும். குடற் புழுக்களால் தாக்கப்பட்ட கால்நடைகள் குறைந்தளவு மட்டுமே உண்பதால், அவற்றின் எடை குறைந்து உற்பத்தித் திறனும் குறையும். கால்நடைகளின் தோல் பளபளப்புக் குறைந்து சொரசொரப்பாகக் காணப்படும். சில நேரங்களில் நீண்ட முடிகள் முளைத்திருக்கும்.
துர்நாற்றத்துடன் பேதி: குடற்புழுத் தாக்கத்தினால் ஏற்படும் வயிற்றுப் போக்கானது கரும்பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் இருக்கும். மேலும், கழிவானது ஆசனவாய், பின்னங்கால் மற்றும் வாலைச் சுற்றி ஒட்டிக் கொண்டிருக்கும். அதிகமான வயிற்றுப் போக்கின் காரணமாகக் கால்நடைகளின் உடலில் நீரின் அளவு குறைந்து தோல்பகுதி மடிப்புடன் உலர்ந்து காணப்படும். இப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்ட கன்றுகள் வயிறு பெருத்துப் பானையைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கும்.
இரத்தச்சோகை: குடற் புழுக்கள் குடலின் பல பகுதிகளில் ஒட்டிக் கொண்டு தங்களின் வளர்ச்சிக்காக இரத்தத்தை உறிஞ்சும். சில உருண்டைப் புழுக்கள் 0.5 மில்லி வீதம் அன்றாடம் இரத்தத்தை உறிஞ்சும். இதனால் கால்நடைகளுக்கு இரத்தச்சோகை ஏற்படும்.
வீக்கம் காணப்படுதல்: குடற் புழுக்கள் குடல் சுவரில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டு அதன் முதிர்ந்த எபித்தீலியஸ் செல்களைப் பாதிக்கச் செய்யும். இதனால், உண்டாகும் இடைவெளிகளில் புரத மூலக்கூறுகள் மற்றும் பிற பொருள்கள் வெளியே செல்வதால் இப்பொருள்களின் அளவு இரத்தத்தில் குறையும். இதனால், புரதச் செரிமானம் பாதிக்கப்படும். இதன் காரணமாக முகம் மற்றும் கழுத்தின் தாடைப் பகுதியில் வீக்கம் உண்டாகும்.
விளைவுகள்
கால்நடைகள் உடல் எடை குறைந்து பலவீனம் அடையும். பால் மற்றும் இறைச்சி உற்பத்தியின் அளவு குறையும். கால்நடைகள் இறந்து போக நேரிடும்.
தடுப்பு முறைகள்
சாணத்தை அவ்வப்போது முறையாகக் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தீவனத்தில் சாணம் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். ஈரமற்ற இடத்தில் கால்நடைகளை வளர்க்க வேண்டும். வற்றிய நிலையில் நீர் கொஞ்சமாக இருக்கும் குளங்களில் கால்நடைகளை மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புழு நீக்க மருந்துகளைச் சரியான நேரங்களில் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும். தீவனம் மற்றும் நீர்த் தொட்டிகளைத் தினமும் தூய்மைப்படுத்த வேண்டும்.
மருத்துவர் இரா.அருண்,
முனைவர் ஜெ.திரவியம், வேளாண் அறிவியல் நிலையம்,
புழுதேரி, கரூர் மாவட்டம்.