உழவுத் தொழிலும் கால்நடை வளர்ப்பும் வேளாண் பெருமக்களின் இரு கண்களாகும். விவசாய வருமானம் குறையும் போது அல்லது தாமதமாகும் போது விவசாயிகளின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கால்நடைச் செல்வங்களால் ஈட்டித் தர முடியும். கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகள் வளர்ப்பு மிகவும் இலாபகரமான தொழிலாகும். கறவை மாடுகள் மூலம் பாலும், இயற்கை உரமும் கிடைக்கின்றன. கறவை மாடுகள் வேளாண் கழிவுகள் மற்றும் துணைப் பொருள்களை உண்டு தரமான பாலைத் தருகின்றன.
கறவை மாடுகளில் சீரான பால் உற்பத்தியைப் பெறுவதற்கு, தகுந்த நோய்ப் பாதுகாப்பு முறைகள் அவசியம். தொற்று நோய்கள் பரவுதல் மூலம் பால் உற்பத்திப் பாதிப்பதுடன், சினைப் பிடிப்பில், ஈனுதலில் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சிக் குறைபாடு எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நச்சுயிரி, நுண்ணுயிரி மற்றும் இரத்த ஒட்டுண்ணிகள் மாடுகளில் பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சில முக்கிய நோய்களின் தாக்கம் மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
தொண்டை அடைப்பான்
இந்நோய் பாசுரில்லா என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மாடுகளின் மூக்கிலிருந்து சளி ஒழுகுதல், மூச்சு விடுதலில் சிரமம், காய்ச்சல், தாடை மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் போன்றவை ஏற்படும். இதன் தாக்கம் மழைக் காலத்தில் அதிகமாக இருக்கும். இதற்கான தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை, மழைக்காலத்துக்கு முன்பு போட்டு விட வேண்டும்.
கோமாரி நோய்
இது, நச்சுயிரியால் ஏற்படுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்தில் கறவை மாடுகளைத் தாக்கும். தீவனம், நீர், காற்று மூலம் இந்நோய் பரவும். காற்று வீசும் திசையில் சுமார் 300 கி.மீ. வரையில் பரவும் தன்மையுள்ளது. இதனால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. ஆனால், பொருளாதார இழப்பு ஏற்படும்.
நோய் அறிகுறிகள்: முதலில் 41 டிகிரி செல்சியஸ் வரை காய்ச்சல் இருக்கும். வாயிலிருந்து நுரையுடன் கூடிய சளியைப் போன்ற கட்டியான உமிழ்நீர் கயிற்றைப் போலத் தொங்கும். மாடுகள் தொடர்ந்து வாயைச் சப்பியபடி இருக்கும். நாக்கின் மேல்புறம், மேலண்ணம், வாயின் உட்பகுதி முதலியவற்றில் நீர்க் கோர்த்த மெல்லிய கொப்புளங்கள் இருக்கும். ஓரிரு நாட்களில் இந்தக் கொப்புளங்கள் உடையத் தொடங்கும். இதனால் கறவை மாடுகளால் தீவனத்தை உண்ண முடியாத நிலை உண்டாகும்.
கால்களில் குளம்புகளுக்கு இடையிலுள்ள தோலிலும், குளம்புகளுக்குச் சற்று மேலுள்ள தோலிலும் புண்கள் உண்டாகி வலியைக் கொடுக்கும். இதனால், மாடுகள் அடியெடுத்து வைக்க அஞ்சும். நோய் முற்றினால் குளம்புகள் சுழன்று விழ நேரிடும். இந்தப் பசுக்களில் பாலைக் குடிக்கும் கன்றுகள் இறந்து போகும். மடியிலும், காம்புகளிலும் கொப்புளங்கள் தோன்றிப் புண்களாக மாறும்.
தீர்வு: கன்றுகள் பிறந்து 8 ஆம் வாரத்தில், 12 ஆம் வாரத்தில், 16 ஆம் வாரத்தில் கோமாரி தடுப்பூசியைப் போட வேண்டும். அடுத்து, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எனத் தவறாமல் போட்டு வர வேண்டும். மாடுகளுக்கு ஆண்டுக்கு இருமுறை போட வேண்டும். இதை, நோய்க்காலம் வருவதற்கு ஒரு மாதம் இருக்கும் போதே போட்டு விட வேண்டும்.
அடைப்பான் நோய்
இது, பேசில்லஸ் ஆந்த்ராக்சிஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படுகிறது. இந்நோயுற்ற மாடு திடீரென இறந்து விடும். அதன் வாய், மூக்கு மற்றும் ஆசன வாயிலிருந்து கெட்டுப்போன இரத்தம் வெளியேறும். பெரும்பாலும் கோடையில் தான் இந்நோயின் தாக்கம் இருக்கும். எனவே, இதைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை, நோயுள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், மேயில் போட்டு விட வேண்டும்.
சப்பை நோய்
இது, நுண்ணுயிரி மூலம் ஏற்படுகிறது. மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளைப் பெருமளவில் தாக்குகிறது. இதனால், கன்றுகள், பசுக்கள் மற்றும் எருதுகள் பாதிக்கப்படுகின்றன. காய்ச்சல், முன்னங்கால், பின்னங்கால், தொடை ஆகியவற்றில் சூடான வீக்கம் ஏற்படும். இதை அழுத்தினால் நறநறவெனச் சப்தம் கேட்கும். இந்நோய், திடீரெனப் பெய்யும் மழைக்குச் சில நாட்கள் கழித்துத் தாக்கும். இதற்கான தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை, மழைக்காலம் வருமுன் போட்டு விட வேண்டும்.
கன்று வீச்சு நோய்
இதைக் கருச்சிதைவு நோயென்றும் சொல்லலாம். இது, புருசெல்லா என்னும் பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். கருச்சிதைவுக்குப் பின் கருவையும், நஞ்சுக் கொடியையும் சுகாதார முறையில் அகற்ற வேண்டும். இந்நோய் வராமல் தடுப்பதற்கான ஊசியைக் கிடேரிகளுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் போடுதல் அவசியம்.
மடிவீக்க நோய்
இது, கறவை மாடுகளைத் தாக்கும் மிக முக்கிய நோயாகும். பல்வேறு வகையான நுண்கிருமிகள் மடியின் உள்ளே சென்று பால் சுரப்புத் திசுக்களைப் பாதிக்கச் செய்வதால் இந்நோய் ஏற்படுகிறது. நோயின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில், மாட்டின் மடி வீங்கியும், தொட்டால் சூடாகவும் இருக்கும். பால் முழுவதும் கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.
தீர்வு: பண்ணையின் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். மடியைக் கிருமிநாசினியால் கழுவ வேண்டும். கறவையாளர் கை விரல் நகங்களைச் சுத்தமாக வெட்டியிருக்க வேண்டும். நல்ல மாடுகளில் பாலைக் கறந்த பின் மடிநோயுள்ள மாடுகளில் கறக்க வேண்டும். அடுத்து, காம்புகளைக் கிருமி நாசினி கலந்த நீரில் முக்கியெடுக்க வேண்டும்.
ஒட்டுண்ணி நோய்கள்
அக ஒட்டுண்ணிகள் எனப்படும் குடற் புழுக்களால், கறவை மாட்டின் உடல் எடை குறைதல், கழிச்சல், வளர்ச்சிக் குறைவு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். எனவே, அக ஒட்டுண்ணிகளை ஒழிப்பதற்கு, கன்றுகள் பிறந்த பத்தாம் நாளில் முதல் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். மேலும், ஆறு மாதம் வரையில் மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுத்து வர வேண்டும். அதைத் தொடர்ந்து ஓராண்டு வரையில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும்.
ஓராண்டைக் கடந்த மாடுகளுக்கு நான்கு மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். மாடுகளில் புற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த, டெல்டா மெத்திரின், சுமதியான், மாலதியான் போன்ற உண்ணி நீக்க மருந்துகளை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து மாடுகளின் மேல் தெளித்துக் குளிப்பாட்டி வெய்யிலில் உலரவிட வேண்டும்.
பால் வாதம்
இது, சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. ஈன்ற மாடுகளில் பொதுவாக இந்தப் பாதிப்பு உண்டாகும். சில நேரங்களில் ஈனுவதற்கு முன்பும் உண்டாகும். அதிகமாகக் கறக்கும் மாடுகளில், 3 முதல் 7 முறை ஈன்ற மாடுகளில், இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட கறவை மாடுகளில் பசி இருக்காது. உட்கார்ந்த நிலையில் படுத்துக் கொண்டு கழுத்தை வயிற்றுப் பக்கம் திருப்பி வைத்துக் கொள்ளும். சாணம் போடாது. வயிற்று உப்புசம் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.
முனைவர் இரா.துரைராஜன்,
முனைவர் மு.முருகன், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மாவட்டம்.