கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020
கோடைக்காலத் தொடக்கமே அதிக வெய்யிலுடன் உள்ளது. காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்குப் புதுப்புது நோய்கள் ஏற்படுவதைப் போல, கால்நடைகளும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரியம்மை நோயால் கால்நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோய் முதன் முதலில் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. இது மற்ற கால்நடைகளுக்கு எளிதாகப் பரவும் நச்சுயிரி நோயாகும்.
நோய்த்தாக்கம்
பெரியம்மை நோய், கால்நடைகளில் பெரியளவில் இறப்பை ஏற்படுத்தாத போதிலும், பொருளாதாரம் மற்றும் உற்பத்தி சார்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்தும். ஆட்டம்மை நச்சுயிரித் தாக்கத்தால் ஏற்படும் நோயானது, பசுக்கள் மற்றும் எருமைகளை மட்டுமே அதிகமாகப் பாதிக்கும். இதனால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இரத்தத்தை உறிஞ்சும் ஏடிஸ், கியூளக்ஸ் கொசுக்கள் மற்றும் பிற பூச்சி ஒட்டுண்ணிகள் மூலம் இந்நோய், மநற்ற கால்நடைகளுக்கும் பரவும்.
மேலும், நோயுற்ற கால்நடைகளின் இரத்தம், சளி, கண்ணில் வடியும் நீர், எச்சில், விந்து மூலம் மற்ற கால்நடைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும். கன்றுகள், கறவையில் உள்ள பசுக்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அனைத்துப் பசுக்கள் மற்றும் எருதுகளும் பாதிக்கப்படும்.
நோய் அறிகுறிகள்
இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் உண்பதில்லை. உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். பாலுற்பத்திக் குறையும். எச்சில் அதிகமாகச் சுரக்கும். கண்ணிலிருந்து நீர் வழியும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். அம்மை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். உடல் முழுதும் ஆங்காங்கே தோலில் தடிப்புகள் தோன்றும். முதலில் தோன்றும் ஒன்றிரண்டு தடிப்புகள் பிறகு உடல் முழுதும் பரவி விடும். நாளடைவில் இந்தத் தடிப்புகள் கொப்புளங்களாக மாறி வெடித்துப் புண்களாகவும் மாறும்.
சிகிச்சை
அம்மை நோய் அறிகுறிகள் தெரிந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சை செய்து நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இயற்கை முறையில் வேப்பிலை, குப்பைமேனி, கற்றாழை மற்றும் மஞ்சளை நன்கு அரைத்துப் பூசலாம். வெற்றிலை, மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், வேப்பிலை, கறிவேப்பிலை மற்றும் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து ஒரு வாரத்துக்கு வாய் மூலம் கொடுக்கலாம்.
பாதிக்கப்பட்ட கால்நடைகளைத் தனிமைப்படுத்தல், நோய்க்காலத்தில் மாடுகளை விற்காமல் இருத்தல், தடுப்பூசி போடுதல் ஆகிய செயல்கள் மூலம் இந்த நச்சுயிரி நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம்.
முனைவர் ஜி.கலைச்செல்வி,
முனைவர் மரு. மு.மலர்மதி, கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை-600051.