செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

ன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் கால்நடைச் செல்வங்களை முறையாகப் பராமரிக்காமல், அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். எங்காவது சென்று எதையாவது உண்டு, வீடு வந்து சேர்ந்தால் போதுமென்ற எண்ணத்தில் இப்படிச் செய்கிறார்கள். செலவில்லாமல் கால்நடைகளை வளர்ப்பதாகக் கருதும் இவ்விவசாயிகள் சில நேரங்களில், பேரிழப்பை அடைகிறார்கள். இதற்குக் காரணம், இவர்களிடம் உள்ள அறியாமையே.

நன்கு பால் கறக்கும் வரை மட்டுமே கறவை மாடுகளைக் கவனிக்கிறார்கள். பால் வற்றிய மாட்டுக்கு முறையான தீவனம் தேவையா என நினைத்து, உச்சக்கட்ட சுய நலத்தால், அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். இதனால், தாங்கள் செய்வதன் விளைவு அறியாது பாதிக்கப்படுகிறார்கள்.

ஆம். கறவை மாடுகளை முறையாகப் பேண வேண்டும். அனைத்துச் சத்துகளும் நிறைந்த தீவனத்தை முறையாக அளிக்க வேண்டும். அதிலும், கறவை நின்று விட்டாலும் கூட, மீண்டும் நன்கு இனவிருத்தி ஆக வேண்டுமே என எண்ணிப் பார்த்துக் கவனமாக வளர்க்க வேண்டும்.

மிக எளிமையாக, வேலிகளில் தீவன மரங்களை நட்டு வளர்த்து அந்த மாடுகளுக்குக் கொடுக்கலாம். பாசன வசதியுள்ள விவசாயிகள் தீவனப் புற்கள், பயறு வகைகள், தீவனச் சோளம், மக்காச்சோளம் போன்றவற்றை வளர்த்து, கால்நடைச் செல்வங்களுக்கு உணவாக அளிக்க வேண்டும். பச்சைத் தீவனம் அதிகமாகக் கிடைக்கும் போது, அதைச் சத்துள்ள ஊறுகாய்ப் புல்லாக மாற்றி வைத்து, வறட்சிக் காலத்தில் தரலாம். புண்ணாக்கு வகைகளை உணவாகத் தரலாம். மேலும், அருகிலுள்ள கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி, ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கை அடைய முயல வேண்டும்.

பசு மாடுகள் தரும் கோமியம், பசுஞ்சாணம் முதலியவற்றை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றும் நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். அதாவது, பஞ்சகவ்யா, ஜீவாம்ருதம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். சாண எரிவாயுக் கலனை அமைத்துச் சமையல் மற்றும் விளக்குகளை எரிப்பதற்கான வாயுவை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், கரி, புகை போன்ற சுற்றுச்சூழலுக்கு எதிரான காரணிகளைத் தவிர்க்கலாம்.

சாண எரிவாயுக் கழிவைச் சத்துகள் மிக்க மண்புழு உரமாக மாற்றி, நிலத்தில் களைகள் முளைக்காத சூழலை உருவாக்கலாம். மண் புழுக்கள் மூலம் கிடைக்கும் கழிவுநீரைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை மேம்படுத்தலாம்.

கறவை மாடுகளால் இத்தனை நன்மைகள் கிடைக்கும் போது, அவற்றை ஏனோதானோ என்று சாலையில் அவிழ்த்து விடலாமா? இதனால், கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படலாம். பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம். விபத்துகளால் பொருள் மதிப்பு மிக்க கால்நடைகள் இறந்து போக நேரிடலாம். கால்நடைகள் களவு போகவும் வாய்ப்புள்ளது.

அலைந்து திரியும் கால்நடைகள் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை வாயால் கவ்வி எடுத்துப் பரப்பும். நெகிழிப் பையுடன் சில பொருள்களை உணவாக விழுங்கவும் செய்யும். வெளியில் திரியும் போது, நோயுற்ற கால்நடைகளால், நல்ல நிலையிலுள்ள கால்நடைகளும் நோய்க்கு உள்ளாகும்.

பாதிப்பான இனப்பெருக்க உறுப்புள்ள காளைகள் இனப்பெருக்க வேலையைச் செய்யும் போது கருப்பையில் கடும் நோய்த் தொற்று ஏற்பட்டு நிரந்தர மலட்டுத் தன்மையை அடையலாம். இவற்றால் எவ்வளவு இழப்பு என்பதை விவசாயப் பெருமக்கள் உணர்ந்து, இனிமேலாவது, கால்நடைகளைப் பொறுப்பற்றுச் சாலைகளில் அவிழ்த்து விடுவதைத் தவிர்க்க வேண்டும்.


டாக்டர் பா.இளங்கோவன்,

பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்,

பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!