கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020
இன்றைய கன்றே நாளைய பசு என்பதால் கன்று வளர்ப்பில் அதிகக் கவனம் தேவை. கன்று வளர்ப்பு என்பது சினைமாடு பராமரிப்பிலிருந்தே தொடங்கி விடுகிறது. வளமான கன்றைப் பெற, தாய்ப்பசு சினையாக இருக்கும் போதிருந்தே நன்கு பராமரிக்க வேண்டும். சினைப்பசுவின் தீவனத்தில் தாதுப்புகளும் உயிர்ச் சத்துகளும் சரியாக இருக்க வேண்டும். வளரும் கன்றுக்குத் தேவையான உயிர்ச்சத்து ஏ மற்றும் தாதுப்புகளைப் பசுந்தீவனம் தருகிறது.
கன்று பிறந்ததும் செய்ய வேண்டியவை
கன்று பிறந்ததும் அதன்மேல் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பான திரவம் மற்றும் நாசித்துளைகளை அடைத்திருக்கும் பொருளைச் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். கன்றின் தொப்புள்கொடியை மூன்று செ.மீ. விட்டுவிட்டு மீதமிருப்பதைச் சுத்தமான கத்திரியால் வெட்டிவிட வேண்டும். உடனே டிஞ்சர் அயோடினை நன்றாகத் தடவ வேண்டும். இதனால், தொப்புள் வீக்கம், தொப்புள் கட்டி, ஏனைய நோய்கள் வராமல் தடுக்கலாம். திடமுள்ள கன்று பிறந்த அரைமணி நேரத்தில் எழுந்து நிற்கும். எழுந்து நிற்கக் கஷ்டப்பட்டால் உதவி செய்ய வேண்டும். குளம்பின் நுனியில் உள்ள ஜவ்வை அகற்றி விட்டால் கன்று சிரமமின்றி நிற்கும்.
சீம்பாலின் அவசியம்
கன்று பிறந்த இரண்டு மணி நேரத்தில் சீம்பாலைக் கொடுக்க வேண்டும். இதில், கொழுப்பு, புரதம், சர்க்கரை, தாதுப்பு, உயிர்ச் சத்துகள் ஏ, டி, இ, நோயெதிர்ப்புச் சக்திப் பொருள் ஆகியன உள்ளன. சீம்பாலைக் குடித்த இரண்டு மணி நேரத்தில் கன்றின் செரிக்கும் சக்தி தூண்டப்பட்டு, உணவுப் பாதையில் தங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும்.
பாலின் அளவு
பொதுவாகக் கன்றுகள் ஆறு மாதம் வரையில் பாலைக் குடித்தே வளரக் கூடியவை. எனவே, இந்தக் காலத்தில் கன்றுகளுக்குத் தேவையான அளவில் பாலைக் கொடுக்க வேண்டும். ஒரு கன்றின் எடையில் 10% அளவில் பாலைக் கொடுக்க வேண்டும். வயிற்றுக் கோளாறோ, கழிச்சலோ ஏற்பட்டால் பாலின் அளவைக் கணிசமாகக் குறைக்க வேண்டும்.
பாலைக் குடித்ததும் கன்றின் நாக்கில் சிறிதளவு உப்பைத் தடவ வேண்டும். இதனால், கன்றுகள் ஒன்றையொன்று நக்கும் பழக்கம் நின்று விடும். கன்றுகள் நக்குவதால் உரோமம் வயிற்றுக்குள் சென்று உருண்டையாகத் திரண்டு உணவுப் பாதையைத் தடுக்க நேரிடும். இதனால், கன்றுகள் இறக்க வாய்ப்புண்டு. ஆறு மாதங்களுக்குப் பிறகு பாலை நிறுத்தி விடலாம்.
கன்றுத் தீவனம்
மூன்று மாதங்களில் கன்றுகளின் இரைப்பையின் நான்கு அறைகளும் இயங்கத் தொடங்குவதால், இதற்குப் பிறகு அவற்றுக்குப் பாலுணவு தேவையில்லை. மக்காச்சோளம், கடலைப் புண்ணாக்கு, கோதுமைத் தவிடு, தாதுப்புகள் கலந்த 1.5-2.0 கிலோ அடர் தீவனம், 10-15 கிலோ பசும்புல்லைத் தினமும் கொடுக்க வேண்டும்.
கொம்பு நீக்கம்
கன்று பிறந்து 3-6 வாரங்களில் கருவி மூலம் கொம்பின் குருத்தைப் பொசுக்கிவிட வேண்டும். இதைச் செய்து முடித்ததும் கிருமிநாசினியைக் கொம்புகளில் தூவி விட வேண்டும். இதைவிட எளிதாகக் கொம்பு நீக்கம் செய்யலாம். அதாவது, கன்று பிறந்த மூன்று நாட்களில் காஸ்டிக் பொட்டாஷ் குச்சியால் கொம்பின் குருத்தை நீக்கலாம். 2-3 நாட்களில் புண் ஆறி, கொம்பு வளர்வது தடைபடும். கொம்பில்லாத கன்றுகளை எளிதாகக் கையாளலாம். பணியாளர்கள் மற்றும் மாடுகளில் காயப்படுதல், ஒன்றோடு ஒன்று சண்டையிடுதல் இருக்காது.
குடற்புழு நீக்கம்
குடற்புழுக்களால் கன்றுகள் வளர்ச்சிக் குன்றி நோய்களுக்கு உள்ளாகின்றன. கன்றுகள் பிறந்து பத்து வாரங்களில் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். பின்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, 18 மாதங்கள் வரை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுப்பது அவசியம்.
நோய்த் தடுப்பு
தொண்டை அடைப்பான், சப்பை நோய், கோமாரியில் இருந்து கன்றுகளைக் காப்பாற்றத் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
கலப்பினப் பசுக்கள் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே, கன்றுகளைச் சுகாதாரமாக வளர்த்தால் நல்ல பசுக்களையும், காளைகளையும் பெற்று அதிக இலாபத்தை அடையலாம்.
முனைவர் க.செந்தில்குமார்,
முனைவர் ச.த.செல்வன், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,
முனைவர் க.தேவகி, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்-603203.