பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

Potash Bacterial Liquid

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020

யிர் வளர்ச்சிக்குத் தேவையான முதன்மைச் சத்துகளில் சாம்பல் சத்தைத் தரும் பொட்டாசியமும் அடங்கும். பொதுவாகவே, நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகமாகவே, அதாவது, ஒரு எக்டர் நிலத்தில் 3,000-1,00,000 கிலோ சாம்பல் சத்து மண்ணின் 0.2 மீட்டர் ஆழம் வரையில் உள்ளது.

இது, நீரில் கரையும் வடிவில், பயிர்களுக்குக் கிடைக்கும் வடிவில், பயிர்களுக்குக் கிடைக்காத வடிவில், தாதுகள் அமைப்பில் என, நான்கு நிலைகளில் உள்ளது. முதலிரண்டு நிலைகளில் உள்ள சாம்பல் சத்தைப் பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும். ஆனால், இவ்வகைச் சாம்பல் சத்து 2% மட்டுமே மண்ணில் உள்ளது.

மூன்று மற்றும் நான்காம் நிலையில் உள்ள சாம்பல் சத்தைப் பயிர்களால் எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், 98% சாம்பல் சத்து, இந்த நிலைகளில் தான் மண்ணில் உள்ளது. எனவே, பயிருக்கு உதவாத சாம்பல் சத்தை; நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள், பல்வேறு செயல்களால் அமிலத்தை உற்பத்தி செய்து, நீரில் கரையும் வகையில் மாற்றி, பயிர்களுக்குத் தருகின்றன.

பிரட்சூரியா ஆரண்டியா என்பது, நகரும் தன்மையுள்ள தண்டு வடிவ பொட்டாஷ் பாக்டீரியா ஆகும். இது 15 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையுள்ள மண் வெப்ப நிலையில் நன்கு வளரும். 3.5 முதல் 11.0 வரை அமில காரத்தன்மை மற்றும் 7% சோடியம் குளோரைடு உப்புள்ள மண்ணிலும் வளரும். எனவே, இது உவர் மற்றும் அமிலத் தன்மையுள்ள நிலத்தில் வளரும் பயிர்களுக்குத் தேவையான சாம்பல் சத்தைக் கொடுக்கும். மேலும், ஆக்ஸிஜன், ஜிப்ரலின், சைட்டோகைன்கள் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து, பயிர்கள் வேகமாக வளர்வதற்கு உதவும்.                                 

பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களைத் தாங்கி வளரும் வகையில், பயிர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். எனவே, 10-25% மகசூல் கூடும். இந்த நுண்ணுயிரி ஒரு மி.லி.க்கு 108 கூட்டமைப்பை உருவாக்கும் உயிர் உரமாகும். இது திரவமாக 500 மி.லி. அளவில் வேளாண்மைக் கிடங்குகளில் கிடைக்கிறது. இதை விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தினால், மண்வளத்தைக் காத்து நல்ல மகசூலைப் பெறலாம்.

கவனிக்க வேண்டியவை

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் கலந்து பயன்படுத்தக் கூடாது. புட்டியைத் திறந்து விட்டால் உடனே மீதமின்றிப் பயன்படுத்தி விட வேண்டும். வெப்பம் குறைந்த மற்றும் நேரடியாக வெய்யில் படாத இடத்தில் வைக்க வேண்டும். 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமிப்பது நல்லது. காலாவதி ஆகுமுன் பயன்படுத்த வேண்டும். இதற்கும், இரசாயன உரமிடலுக்கும் இடையே, ஒருவார இடைவெளி இருக்க வேண்டும். புட்டியை நன்கு குலுக்கிப் பயன்படுத்த வேண்டும்.


முனைவர் சி.பத்மப்பிரியா,

வேளாண்மை அலுவலர், திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையம், திண்டுக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!