கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021
உலகிலுள்ள கடல்களின் மேற்பரப்பு நீர் மற்றும் ஆழமான பகுதியில் உள்ள நீர், செங்குத்து அல்லது கிடைமட்டமாக இடம் பெயர்தல் கடல் நீரோட்டங்கள் ஆகும். இந்த நீரோட்டங்கள் எப்போதும் குறிப்பிட்ட ஒரு திசையில் நகர்ந்து கொண்டே இருக்கும். மேலும், பூமியின் ஈரப்பதம், வானிலை, நீர் மாசு ஆகிய அனைத்திலும் சுழற்சியை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல் நீரோட்டங்கள்; அவற்றின் அளவு, வலிமை ஆகியவற்றில் வேறுபடும்.
முக்கிய நீரோட்டங்கள்
பசிபிக் பெருங்கடலில் காணப்படும் கலிபோர்னியா மற்றும் ஹம்பொல்ட் நீரோட்டங்கள், அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் கல்ஃப் ஸ்ட்ரீம் மற்றும் லேப்ரடார் நீரோட்டங்கள், இந்திய பெருங்கடலில் காணப்படும் இந்திய பருவகால நீரோட்டங்கள் ஆகியன, மிக முக்கியமான நீரோட்டங்கள் ஆகும்.
கடல் நீரோட்டங்கள் உருவாகும் விதம்
பெருங்கடல் நீரோட்டங்கள் பல காரணிகளால் உருவாகின்றன. கடல்நீர் மட்டத்தில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையால் மாற்றம் ஏற்படுகிறது, இது, அமாவாசை மற்றும் பௌர்ணமி நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்தையும் மற்ற நேரங்களில் சற்றுக் குறைந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
இந்த ஏற்ற இறக்க மாற்றம், கடலிலும், கரையோரப் பகுதிக்கு அருகிலும், வளைகுடாவிலும், கரையோரம் இருக்கும் முகத்துவாரங்களிலும் நீரோட்டத்தை ஏற்படுத்தும். எனவே இவை, டைடல் அல்லது அலை நீரோட்டங்கள் எனப்படும். இவ்வகை நீரோட்டங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் பாதிப்பால் ஏற்படுவதால் எளிதில் கணிக்கப்படுகின்றன.
கடல் நீரோட்டங்களை இயக்கும் இரண்டாவது காரணி காற்று. இது, கடலின் மேற்பரப்பில் அல்லது அதற்கருகில் நீரோட்டங்களை உருவாக்கும். இந்த நீரோட்டங்கள் பொதுவாக வினாடிக்கு மீட்டரில் அல்லது நாட் என்னும் அளவில் கணக்கிடப்படும். ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்தில் 1.15 மைல் அல்லது 1.85 கி.மீ. பயணிப்பதாகும். கடலோரப் பகுதிகளில் வீசும் காற்று, பகுதி சார்ந்த நீரோட்டங்களையும் மற்றும் ஆழ்கடல் பகுதியில் பெரும் நீரோட்டங்களயும் உருவாக்கும்.
நீரோட்டங்களை இயக்கும் மூன்றாம் காரணி நீரில் ஏற்படும், உவர்ப்பு மற்றும் வெப்ப மாற்றத்தால் உருவாகும் தெர்மோஹைலைன் சுழற்சி ஆகும். இது, கடலின் வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை மற்றும் உப்புத் தன்மையால் நீரில் ஏற்படும் அடர்த்தி வேறுபாடுகளால் இயக்கப்படும். இதனால், ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் சுழற்சி ஏற்படும். இது, டைடல்/அலை நீரோட்டங்கள் அல்லது மேற்பரப்பு நீரோட்டங்களை விட மிக மெதுவாக நகரும்.
பெருங்கடல் நீரோட்ட வகைகள்
மேற்பரப்பு நீரோட்டம்-மேற்பரப்புச் சுழற்சி: இந்த நீரோட்டம் கடல் மேற்பரப்பில் 10% பகுதியாகும். இது, கடலின் 400 மீட்டர் ஆழம் வரை இருக்கும். பூமியில், வெப்பத்தை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்குக் கொண்டு செல்லும். ஒவ்வொரு பகுதியின் காலநிலைகளையும் பாதிக்கச் செய்யும். பூமத்திய பகுதியில் உருவாகும் வெப்பம், மேற்பரப்பு நீரோட்டத்தால் வடக்கு நோக்கி நகர்ந்து மிதவெப்பப் பகுதிக்குச் சென்றால், அங்குள்ள நாடுகளில், குளிர் காலங்களில் குளிர் அதிகமாக இருக்காது.
ஆழ நீரோட்டம்-தெர்மோஹைலைன் சுழற்சி: கடல் நீரோட்டங்களில் 90% இந்த வகையைச் சார்ந்தது. நீர் அடர்த்தி வேறுபாடு மற்றும் புவி ஈர்ப்பு விசை/கோரியாலிஸ் விசை ஆகியவற்றின் பாதிப்பால், கடல் படுகையை இந்த ஆழ நீரோட்டங்கள் சுற்றி வரும்.
பொதுவாக ஆழ நீரோட்டங்கள், துருவப்பகுதி குளிர்ச்சியால், அடர்த்தி அதிகமாகி இன்னும் ஆழமான பகுதிக்கு முங்கும். தொடர்ந்து நீர் முங்கும் போது, அது பூமியின் மையப்பகுதிக்குத் தள்ளப்படும், அப்படி நகர்ந்து வரும் ஆழநீர்; காற்று மூலம் மேல்மட்ட நீர் நகர்வதால் மேலே இழுக்கப்படும். இப்படி, ஒரு முழுச் சுழற்சி ஏற்படும்.
பெருங்கடல் சுழற்சி
சூரிய வெப்பம் காரணமாகக் கடல்நீர் விரிவடையும், இதனால், பூமத்திய ரேகைக்கு அருகில் மற்ற இடங்களை விட 8 செ.மீ. உயரம் வரை குவியும். இது, சிறியதொரு சாய்வை ஏற்படுத்தி, அதில் நீர் கீழே செல்லும். இதைப் போலக் கடல் மேற்பரப்பில் தொடர்ந்து வீசும் காற்று, தான் போகும் திசையில் நீரைத் தள்ளும்.
இப்படி, கடல் முழுவதும் பத்து மணி நேரம் வீசும் காற்று, அதன் வேகத்தில் சுமார் 2% வேகத்தில் பாயும் நீரோட்டத்தை உருவாக்கும். இதனால், நீரானது காற்றின் திசையில் குவியும். ஈர்ப்பு விசையானது சாய்வழுத்தத்துக்கு எதிராக நீரின் குவியலைக் கீழே இழுக்க முனையும். இப்படி உருவாகும் சுழற்சிகள், பெருங்கடல் சுழற்சிகள் (Ocean Gyres) எனப்படும்.
உலகில் ஐந்து பெருங்கடல் சுழற்சிகள் உள்ளன. அவையாவன: வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் மிதவெப்ப மண்டலச் சுழற்சி, வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் மிதவெப்ப மண்டலச் சுழற்சி, இந்திய பெருங்கடல் மிதவெப்ப மண்டலச் சுழற்சி. இந்த ஐந்து பெருங்கடல் சுழற்சிகளும் இணைந்து பெரிய தொடர் நீரோட்டத்தை உருவாக்கும். இதைக் கடல் கன்வேயர் பெல்ட் (ocean conveyor belt) என்று அழைப்பர். இது, கடல்நீரைப் பூமி முழுவதும் சுற்றச் செய்யும்.
நீரோட்டங்களின் விளைவு
பெருங்கடல் நீரோட்டங்கள் நெடுந் தொலைவுக்குப் பாய்ந்து, பூமியின் பல பகுதிகளின் தட்ட வெப்ப நிலைகளைத் தீர்மானிக்கின்றன. எடுத்துக் காட்டாக, வளைகுடா நீரோடை. இது வடமேற்கு ஐரோப்பாவை, அதே அட்ச ரேகையில் உள்ள மற்ற பகுதிகளை விட மிகவும் மிதமானதாக ஆக்குகிறது. ஹவாய் தீவுகள் மற்றொரு எடுத்துக் காட்டாகும், கலிபோர்னியா நீரோட்டத்தின் விளைவாக, அங்குள்ள காலநிலை வெப்ப மண்டல அட்ச ரேகைகளை விடக் குளிர்ச்சியாக இருக்கும்.
ம.முகேஷ் கண்ணன்,
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி,
பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.