கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017
கால்நடைகளில் இருக்கும் கொம்புகள் அவற்றைக் காத்துக் கொள்வதற்கு மட்டும் தான் என்றே நாம் இதுவரையில் நினைத்து வந்திருக்கிறோம். ஆனால், இந்தக் கொம்புகளுக்குள் இயற்கை வைத்துள்ள விந்தைகளை நாம் புரிந்து கொள்ளவே இல்லை. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
அதிர ஓடினால் முதிர விளையும் என்பதும், குளம்பு பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம் என்பதும் தமிழ்நாட்டுப் பழமொழிகள். சூரியக் கதிர்வீச்சைக் கிரகிக்கும் கொம்புகள், அதை உடலுக்குத் தேவையான வைட்டமின் டி-யாகவும், கண்ணுக்குப் புலப்படாத மற்ற கதிர்வீச்சாகவும் மாற்றி, கால்குளம்புகளின் வழியே நிலத்துக்குள் பாய்ச்சுகின்றன. அதனால்தான், குளம்பு பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம் என்கிறோம். இது நம் முன்னோர்கள் கற்றறிந்த அறிவியல் நுட்பம்.
கருமையான கொம்புகள் தான் சூரியக் கதிர்களை நன்கு கிரகிக்கும். இந்த அடிப்படையில் தான், மாடு வாங்கப் போகும்போது, வெள்ளை கலந்த கொம்புள்ள மாடாக இருந்தால், அதைப் பூக்கொம்பு மாடு என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள். மாட்டின் குளம்புகள் நிலத்தில் படவேண்டும் என்பதற்காகத் தான், நல்லேறு கட்டுதல், பொன்னேறு கட்டுதல், மஞ்சு விரட்டு, ஏரிக்குள் தொழுவத்து மாடுபிடி போன்ற நடைமுறைகள் இங்கே இருந்தன.
காங்கேயம், ஒம்பிலாச்சேரி, ஓங்கோல், கிர், நகோரி, பொன்வர், மால்வே, டங்கி, கில்லாரி, அமிர்தமகால், ஜவாரி, காங்க்ரஜ், ரதி, கிருஷ்ணா, பர்கூர் போன்ற நம் நாட்டுக் கொம்பு மாடுகள் வளர்ந்த பூமியிது. அந்நிய மோகத்தில் கரைந்து, கொம்பில்லாத மாடுகளை இந்தியாவில் புகுத்தியது, நம் முன்னோடிகள் செய்த தவறு.
மாடுகளை வளர்ப்பது பாலுக்காக மட்டுமே என்னும் புரிதலை மக்களிடம் புகுத்திய பிறகுதான், கொம்பில்லாத மாடுகள் இங்கே தருவிக்கப் பட்டன; இளங்கன்றுகளின் கொம்புகளைத் தீய்த்து, கொம்பில்லா மாடுகள் உருவாக்கப் பட்டன.
எப்போதுமே தவறு செய்யாதது, ஒழுங்கு மாறாதது, கடமை தவறாதது இயற்கை. அத்தகைய இயற்கையின் இரகசியத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு முன், கொம்புள்ள மாடுகள் முட்டும் என்றும், முரண்டு பிடிக்கும் என்றும் எண்ணிக்கொண்டு, கொம்புகளைத் தீய்த்து அழித்து வருகிறோம்.
1935 வாக்கில், தமிழ்நாட்டில் கால்நடை இயக்குநராகப் பணியாற்றிய, லிட்டில்வுட் என்னும் ஆங்கிலேயர், தென்னிந்தியக் கால்நடைகள் (Livestock of Southern India) என்னும் தனது நூலில், பசு வளர்ப்பு, காளை வளர்ப்பு, பொலிகாளைகளைத் தேர்ந்தெடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட 32 வகை முக்கியக் குறிப்புகளைப் பற்றி, மிக விரிவாக எழுதியுள்ளார்.
மாடு இல்லாதவன் மனிதனே இல்லை, நொண்டி மாடு ஒன்றிருந்தால், நொடித்தவனும் நிமிர்ந்திடுவான் என்னும் பழமொழிகள், மாடுவளர்ப்பின் அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றன. குடும்பம், வீடு என்றால், அது, மாடு இல்லாமல் இல்லை. மாடுகள் தான் குடும்பத்தின் செல்வம் என்று நம்பப்பட்ட காலம் இருந்தது. அதனால் தான், புதுமனைப் புகுவிழாவில் மாட்டுக்கன்றுடன் நுழைகிறோம். அதுவும் இன்று போலித்தனம் மிகுந்த சடங்காக மாறி வருகிறது. இது பண்பாட்டுத் தேய்மானம் தானே?
வள்ளுவரின் எச்சரிக்கையைப் பாருங்கள். “ஆபயன் குன்றும் அறுதொழிலார் நூல் மறப்பார் காவலன் காவான் எனின்’’ என்கிறார். அதாவது, “ஓர் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க வேண்டுமாயின், அது, பசு இனங்களை, கால்நடைகள் வளர்ப்பை மிகவும் கருத வேண்டும்’’ என்று வலியுறுத்திக் கூறுவதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கால்நடைகளை அரசு கவனிக்கவில்லை என்றால், அவற்றின் மூலம் கிடைக்கும் நற்பயன்கள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். அதனால், வறுமை, பஞ்சம், பட்டினிச்சாவு தான் உண்டாகும். சான்றோர் பெருமக்கள், தாங்கள் கற்கும் நூல்களைத் துறக்க நேரிடும் என்பதைவிட, இதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
உலகத்துக்கே அறிவியல் மரபுவழி வாழ்வியலைக் கற்றுக் கொடுத்த நாம், இழந்தவற்றை மீட்டெடுப்போம்; புதுப்பொலிவைப் பெறுவோம். கால்நடை வளர்ப்பிலிருந்து இந்த மீட்புப் பணியைத் தொடங்குவோம். கால்நடை வளர்ப்பு, நாம் சார்ந்த வட்டம். இதில் முழுமையாக ஈடுபடுவோம்; கொம்புத் தீய்ப்பை உடனே நிறுத்துவோம்.
மருத்துவர் காசிபிச்சை,
தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம்,
திருமானூர்-621715, அரியலூர் மாவட்டம்.