கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018
பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக 16 வகையான ஊட்டச் சத்துகள் தேவை. அவையாவன, கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம், குளோரின்.
இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் குறிப்பிட்ட சில ஊட்டச் சத்துகள் மட்டுமே பயிர்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால், அங்கக வேளாண்மைக்கான இடுபொருட்களில் அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைப்பதுடன், விளைபொருள்களின் தன்மையும், மண்ணின் தன்மையும் காக்கப்படுகின்றன.
அங்கக இடுபொருட்கள்
பயிர்க் கழிவுகள்: எளிதாகக் கிடைக்கும் அங்கக இடுபொருள்களில் பயிர்க்கழிவுகள் முக்கியமானவை. இந்தக் கழிவுகள், தழைச்சத்தை மட்டுமின்றி, மணி, சாம்பல் மற்றும் பலவகையான நுண்ணூட்டச் சத்துகளை அளிக்கின்றன. நெல் வைக்கோலில் அதிகளவில் சிலிக்கா உள்ளது.
கோழியெரு: கோழியெருவில் மற்ற தொழு உரங்களைக் காட்டிலும் அதிகளவில் தழைச்சத்து (3.03%), மணிச்சத்து (2.63%) சாம்பல் சத்து (1.4%) உள்ளன. ஆனால், முப்பது நாட்களில் 50% நைட்ரஜன் வீணாகி விடுவதால் அதனைச் சீக்கிரமாகப் பயிர்களுக்கு இடவேண்டும். அல்லது அதைச் சீரிய முறையில் சேமித்து வைக்க வேண்டும்.
மண்புழு உரம்: அங்கக வேளாண்மையில் மண்புழு உரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உரத்தில் 1-1.5% தழைச்சத்து, 0.4-0.75% மணிச்சத்து மற்றும் 0.5-1.5% சாம்பல்சத்து உள்ளது. இந்தச் சத்துகளின் அளவு நாம் மண்புழுவுக்கு உணவாகப் பயன்படுத்தும் இடுபொருள்களைப் பொறுத்து வேறுபடுகிறது.
பொதுவாக, மண்புழு உரத்தை ஏக்கருக்கு 5 டன் இட வேண்டும். சிறுதானியப் பயிர்களுக்கு 2 டன், பயறுவகைப் பயிர்கள் 2 டன், எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு 3-5 டன், நறுமணச் செடிக்கு 3-10 கிலோ அல்லது ஏக்கருக்கு 4 டன், காய்கறிப் பயிர்களுக்கு 4-6 டன், பழமரம் ஒன்றுக்கு 2-3 கிலோ வீதம், ஆண்டுக்கு இரண்டு முறை, அலங்காரச் செடிகள் மற்றும் மலர்ச் செடிகளுக்கு 4 டன், பணப் பயிர்களுக்கு 5 டன், தென்னை மரம் ஒன்றுக்கு 5 கிலோ இட வேண்டும்.
ஊட்டமேற்றிய தொழுவுரம்: தேவையான அளவு தொழுவுரத்துடன் 1% பாறையுப்பு, 1% உயிர் உரங்களான அசோஸ்பயிரில்லம், பாஸ்போ பேக்டீரியா, அசட்டோபாக்டர் போன்றவற்றை நன்றாகக் கலந்து கூம்பு வடிவில் வைத்து, செம்மண் கலவையால் மூடிவிட வேண்டும்.
தினமும் இந்தக் கலவையின் மீது நீரைத் தெளித்து ஈரமாக வைத்திருக்க வேண்டும். 12 வாரங்களுக்குப் பிறகு இந்த உரத்தைப் பயிர்களுக்கு இடலாம். இதில், 2.2% தழைச்சத்து, 2.35% மணிச்சத்து, 4.3% சாம்பல்சத்து, 5.31% கால்சியம், 1.63% மக்னீசியம், 1.72% கந்தகம் மற்றும் அனைத்து நுண்ணூட்டச் சத்துகளும் உள்ளன.
தொழுவுரம்: இந்தியாவில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது தொழுவுரம். இதுதான் மிக முக்கிய வேளாண்மைக் கழிவாகும். இதனைக் குழிகளில் இட்டு முறையாகப் பதப்படுத்துவதால், இதிலுள்ள சத்துகள் எளிதில் தாவரங்களுக்குக் கிடைக்கின்றன.
தொழுவுரத்தில் 0.7-1.3% தழைச்சத்து, 0.3-0.9% மணிச்சத்து மற்றும் 0.4-1.0% சாம்பல் சத்து உள்ளது. இந்த அளவுகள், பயன்படுத்தப்படும் தாவரக்கழிவுகள் மற்றும் கால்நடைகளைப் பொறுத்து வேறுபடும்.
ஆட்டெரு: வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் சாணத்தில் தான், மற்ற தொழு உரங்களைக் காட்டிலும் அதிகச் சத்துகள் உள்ளன. இதில், 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ், 2% பொட்டாசியம் உள்ளன. இதனை இரண்டு முறைகளில் நிலத்தில் இடலாம்.
எருவைச் சேகரித்துக் குழிகளில் இட்டு மட்கச் செய்து இடலாம். இப்படி இடுவதில் அதிகளவில் சத்துகள் வீணாகும். இரண்டாவது முறையில், ஆடுகளை வயலில் இரவு தங்க வைக்க வேண்டும்.
இதனால், அனைத்துத் திட, திரவக் கழிவுகளும் நிலத்திலேயே சேகரிக்கப்படுவதால் அவற்றில் உள்ள சத்துகள் வீணாவதில்லை.
எண்ணெய்ப் புண்ணாக்குகள்: இவை தழைச்சத்தை அளிக்கும் முக்கியமான அங்கக உரமாகும். பயன்படுத்தும் புண்ணாக்கின் தன்மையைப் பொறுத்துச் சத்துகளின் அளவு வேறுபடும். புண்ணாக்கில் உள்ள சத்துகள் பயிர்களுக்கு விரைவில் கிடைக்கின்றன. மேலும், இவை எல்லாவகை மண் மற்றும் பயிர்களுக்கும் ஏதுவாய் உள்ளன.
உயிர் உரங்கள்: உயிர் உரங்களான, அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்றவை மண்ணில் உள்ள நைட்ரஜனையும், வளிமண்டல நைட்ரஜனையும் நிலைநிறுத்திப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்கின்றன. அசோலா, நீலப்பச்சைப் பாசி போன்றவை எக்டருக்கு 40 கிலோ வரையிலான தழைச்சத்தை அளிக்கின்றன.
பசுந்தாள் இலையுரங்கள்: தேவையான தொழுவுரம் கிடைக்காத இடங்களில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை, மண்ணின் வளத்தைக் காப்பதுடன், மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மேம்படுத்துகின்றன.
மணிலா அகத்தி, சணப்பை, கொழுஞ்சி போன்றவை முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பசுந்தாள் மற்றும் பசுந்தாள் இலை உரங்களாகும். ஒரு எக்டரில் இடப்படும் 12 முதல் 25 டன் வரையிலான பசுந்தாள் உரம் 50 முதல் 90 கிலோ தழைச்சத்தை அளிக்கும்.
பயறுவகைகளைப் பயிரிடுதல்: பயறுவகைகள் அவற்றின் வேர் மற்றும் தண்டுகளில் தழைச்சத்தை நிலை நிறுத்தும். பயறுவகைப் பயிர்கள் வளிமண்டலத் தழைச்சத்தை நிலை நிறுத்துவதோடு, 15-20 கிலோ தழைச்சத்தை, அடுத்து வரும் பயிருக்கும் நிலைநிறுத்தி வைக்கின்றன. இதனால், மண்வளம் காக்கப்படுவதுடன், பயிர்களுக்குத் தேவையான சத்துளும் கிடைக்கின்றன.
பல பயிர்கள் சாகுபடி: முக்கியப் பயிர்களுடன், மணிலா அகத்தி மற்றும் பயறு வகைகளைக் கலந்து பயிரிடுவதால் முக்கியப் பயிர்களின் விளைச்சல் குறையாமல் மண்வளமும் காக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மணிலா அகத்தி மற்றும் பயறு வகைகளை மண்ணுக்குள் மடக்கி உழ வேண்டும்.
பயிர்ச் சுழற்சி முறை: ஒரே பயிரைப் பயிரிடாமல் பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றுவதால், முதல் பயிரினால் எடுக்கப்படாத ஊட்டச் சத்துகள் அடுத்த பயிருக்குக் கிடைக்கின்றன.
இவ்வாறு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, நீடித்த, நிலைத்த வேளாண்மைக்கு வழி வகுப்பதுடன், மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளையும் பாதுகாத்து வளம் பெறுவோம்.
முனைவர் செ.தமிழ்ச்செல்வி,
வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர்-602025, திருவள்ளூர் மாவட்டம்.