ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

ANAI MALAI

யிர் காக்கும் பயிர்கள் எல்லாம் பச்சையாக இருப்பதால், ஏழு நிறங்களில் பச்சைக்குத் தான் முதலிடம். அது அமைதியின் பிறப்பிடம். உலகில் பச்சையம் எவ்வளவில் உள்ளதோ அவ்வளவில் இவ்வுலகம் செழிப்பாக இருக்கும். அதனால் தான் பச்சைக் காடுகளை, சோலைகளைக் காக்க வேண்டும், புதிது புதிதாக உருவாக்க வேண்டும் என்கிறோம். இவற்றின் வளர்ச்சியே மனித வாழ்க்கை; ஏனைய உயிர்களின் வாழ்க்கை. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் தான், பச்சை பூமியில், மலைகள் தொடர் என்னும் பகுதியைத் தொடங்கியுள்ளோம்.

பச்சை பூமியின் மலைகள் தொடர் பகுதிக்கு, ஆனைமலையைத் தேர்வு செய்து, அதுகுறித்த செய்திக்காக, ஆனைமலைப் புலிகள் வனக்காப்பகத்தின் பொள்ளாச்சிக் கோட்டத் துணை இயக்குநர் ம.கோ.கணேசனைத் தொடர்பு கொண்டோம். ஆர்வமுடன் நம்மிடம் பேசியவர், நம்மை அழைக்க, அவரது அழைப்பை ஏற்று ஆனைமலையின் அடிப்பகுதியான ஆழியாறு அணைக்குச் சென்றோம். அங்கே அவருடனும், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி, வனவர் ராஜன் ஆகியோருடனும் இணைந்து கொண்டோம்.

உதவி வனப் பாதுகாவலர் செல்வம், துணை இயக்குநர் ம.கோ.கணேசன், வனச்சரகர் புகழேந்தி

அதைத் தொடர்ந்து, ஆழியாறு அணையின் மேல் பகுதிக்குச் சென்றோம். முழுமையாக நிரம்பியிருந்த அணை, கடல் போல் கம்பீரமாகக் காட்சியளித்தது. அதற்குச் சாட்சியாக நீரலைகள் வந்து வந்து அணையின் சுவரை முட்டி முட்டி மோதிக் கொண்டிருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே, “ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடலைப் போலக் காட்சியளிக்கும் ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்த அணையைத் திட்டமிட்டுக் கட்டி முடித்த, அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர், 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, அணை நீரைப் பாசனத்துக்குத் திறந்து விட்டு, ஆழியாறு அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட இந்த அணையில் உள்ள நீர், பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் உயரம் 81 மீட்டர். அணைக்குக் கீழே பூங்கா ஒன்று இருக்கிறது. இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள மூன்று புறமும் மலைகள் சூழ்ந்திருப்பது கண்களுக்குப் பெரிய விருந்து’’ என்று, அந்த அணையைப் பற்றி நம்மிடம் விளக்கிக் கூறினார் கணேசன்.

அதைத் தொடர்ந்து அணையின் மறுபுறம் இருந்த தென்னை மரங்கள் சூழ்ந்த பொள்ளாச்சியின் எழில் கொஞ்சும் அழகைக் காட்டி வியந்து பேசிய அவர், “இங்கே எல்லோரும் தென்னை மரங்களை மட்டுமே வைத்துள்ளார்கள். தென்னைக்கு நிறைய நீர் தேவைப்படும். அதனால், இங்கு இன்னும் சில வருடங்களில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். மேலும் ஒரு இடத்தில் ஒரே மாதிரியான பயிரையே சாகுபடி செய்யும் போது, விவசாயிகள் தங்களுக்குள்ளாகவே போட்டியாளர்களாக மாறி விடுகிறார்கள். அதனால், அந்த விளைபொருளின் விலையும் குறைந்து விடுகிறது.

எனவே, விவசாயிகள் ஒரு பகுதி முழுவதும் ஒரே பயிரைப் பயிரிடாமல் பல்வேறு மாற்றுப் பயிர்களைப் பயிரிடும் விவசாய முறைக்கு முன்வர வேண்டும்’’ என்றதுடன், நித்திய கல்யாணிச் செடியைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்களைப் பற்றியும், அதற்குச் சந்தையில் இருக்கும் மதிப்பைப் பற்றியும் விளக்கி, அதைப் போன்ற மருத்துவச் செடிகளைத் தமிழக விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும் என்றார்.

அதன் பிறகு, அங்கிருந்து ஆழியாறு சோதனைச் சாவடிக்குச் சென்றோம். அங்கு வனத்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதன் அருகில் உள்ள வண்ணத்துப் பூச்சிப் பூங்காவுக்குச் சென்றோம். அந்தப் பூங்கா முழுவதும் வகை வகையான வண்ண மலர்களுடன் எழில் கொஞ்சும் நேர்த்தியுடன் அமைந்திருந்தது. அந்த மலர்களைப் பற்றி விளக்கிக் கொண்டு வந்த கணேசன், அங்கிருந்த ஒரு பட்டாம் பூச்சியைக் காட்டி, “இது தான் நமது தமிழ்நாட்டு மாநிலப் பட்டாம் பூச்சியான தமிழ் மறவன் பட்டாம் பூச்சி’’ என்றார்.

அப்போது ஆழியாறு அணைப்பகுதி வனவரான ராஜன் நம்மிடம், அந்த வண்ணத்துப் பூச்சிப் பூங்காவைப் பற்றி விளக்கினார். “இந்தப் பூங்கா அண்மையில் தான் உருவாக்கப்பட்டது. வண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் தேனை எடுப்பதற்காக ஒவ்வொரு மலராகப் போகும் போது, அயல் மகர்ந்தச் சேர்க்கை இயல்பாக நடைபெறும். இதனால் உணவு உற்பத்தி அதிகமாகும். இத்தகைய சிறப்புமிக்க இந்த இனங்கள் அழிந்தால், உணவு கிடைக்காமல் மனித இனமே அழிய நேரிடும்.

வண்ணத்துப் பூச்சி பூங்காவில் ஆய்வு…

எனவே, அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு, பொது மக்களுக்கும், பள்ளி மாணவ மாணவியர்க்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாய் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே, புளூ டைகர், காமன் க்ரோ, பிளைன் டைகர், காமன் ரோஸ் என்று, முப்பத்தைக்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் வந்து செல்கின்றன’’ என்றார்.

தொடர்ந்து, அந்தப் பூங்காவின் மேல் பகுதியில் தண்ணீர் வரும் இடத்தை, குழந்தைகள் மட்டும் குளிப்பதற்கான பாதுகாப்பு வசதிகளோடு அருவியாக மாற்றி வைத்திருந்தனர். அதைப் பார்வையிட்ட கணேசன், அது குழந்தைகள் குளிக்கும் இடம் என்பதால் மேலும் சில பாதுகாப்பு வசதிகளையும், கழிப்பிட வசதியையும் ஏற்படுத்தச் சொல்லி விட்டு, பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த உயரமான கோபுரத்தில் ஏறி, ஆழியாறு அணை, மலை என அனைத்தையும் பார்வையிட்டார். அப்போது அங்கும் சில பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும்படி, அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்னர், ஆழியாறு சோதனைச் சாவடியைப் பார்வையிட்ட அவர், அங்கிருந்த மலைவாழ் மக்கள் நடத்தும் வண்ணப்பூர்ணி தேனீர் விடுதியில் தேனீர் அருந்த, நாம் அங்கே தீவிரமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த சோதனைச் சாவடி வனவரான இளவரசியுடன் வாகனச் சோதனை பற்றிப் பேசினோம்.

தீவிர வாகனச் சோதனையில்…

அப்போது அவர் நம்மிடம், “மேலே மலைக்குச் சுற்றுலா செல்பவர்கள் பிளாஸ்டிக், மதுபானம், தீப்பெட்டி முதலிய தீப்பிடிக்கும் பொருள்கள், பறக்கும் கேமரா ஆகியவற்றை எடுத்துச் செல்கிறார்களா என்று சோதனை செய்கிறோம். அடுத்ததாக, மலையில் வன விலங்குகளை துன்புறுத்தக் கூடாது, அவற்றுடன் நின்று செல்பேசியில் புகைப்படம், செல்பி போன்றவற்றை எடுக்கக் கூடாது, யானை, சிறுத்தை முதலிய வன விலங்குகள் இங்கே இருப்பதால், சாலையில் அங்கங்கே வாகனங்களை நிறுத்தக் கூடாது, வாகனங்களின் வேகம் 30 கிலோ மீட்டரைத் தாண்டக் கூடாது, தண்ணீர் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் புட்டிகளைக் கண்ட இடங்களில் தூக்கி வீசக்கூடாது, வன விலங்குகளுக்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைத் தரக்கூடாது என்பன போன்ற பாதுகாப்பு விசயங்களை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். வாகனங்களின் பதிவு எண், ஓட்டுநர் விவரம், பயணம் செய்பவர்களின் விவரம் ஆகியவற்றையும் பதிவு செய்கிறோம்.

சுற்றுலா நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறோம். சுற்றுலா அல்லாத நாட்களில், குறிப்பாக இந்தக் கொரோனா காலச் சூழலில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது இல்லை. ஆனால், மேலே மலையில் வாழும் மக்களை, உள்ளூர்வாசிகளை, அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை வைத்துச் சோதனை செய்து அனுமதிக்கிறோம்.

இங்கே, இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாய், தனியாள் ஒருவருக்கு 50 ரூபாய், புகைப்படக் காமிராவுக்கு 50 ரூபாய், வீடியோ காமிராவுக்கு 300 ரூபாய் வீதம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறோம். அதற்கு அவர்களுக்கு இரசீதும் வழங்குகிறோம்’’ என்றவரிடம், “அந்த நுழைவுக் கட்டணத்தை வைத்து என்ன செய்வீர்கள்?’’ என்ற கேள்வியை முன் வைத்தோம்.

அதற்கு அவர், “அந்தப் பணத்தைப் பராமரிப்புப் பணிகளுக்கும், இங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் செலவிடுகிறோம். இந்த மலை முழுவதும் அங்கங்கே உள்ள மலைவாழ் மக்களைக் கொண்டு குழுக்களை உருவாக்கி, முறைப்படி பதிவு செய்து, அவர்கள் மூலமாகச் சுத்தம் செய்வது, சுகாதாரம் காப்பது, சிற்றுண்டிச் சாலைகளை நடத்துவது போன்ற பணிகளைச் செய்கிறோம். உதாரணமாக இங்கே சோதனைச் சாவடியில் வண்ணப்பூர்ணி என்னும் பெயரில், மலைவாழ் மக்கள் தான் சிற்றுண்டிச் சாலையை நடத்துகிறார்கள். இப்படியான செயல்களால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது’’ என்றார்.

அதைத் தொடர்ந்து அனைவரும் தேனீர் அருந்தி முடிக்க, அங்கிருந்து மேலே மலைப்பகுதிக்குச் செல்ல ஆயத்தமானோம். சோதனைச் சாவடியைக் கடந்து கொஞ்ச தூரம் சென்றதும் ஆழியாறு அணை நமது இடப்பக்கம் தெரிய, குளிர்க்காற்று ஜில்லென்று நம் நாசியைத் துளைக்க, அந்தச் சுகமான சூழலை அனுபவித்துக் கொண்டே பயணித்தோம்.

சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் அங்கே ஓர் அருவி இருப்பது தெரிந்தது. அந்தப் பகுதி சாலையில் குரங்குகள் கூட்டமாகக் கூடி விளையாடிக் கொண்டிருந்தன. அதை இரசித்தபடி அங்கே போனோம். அருவியின் நுழைவாயிலில் அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் உள்ள குரங்குகளைப் பற்றிய பாடல்களை அவற்றுக்கான விளக்கங்களுடன், குரங்குகளின் கற்படங்களையும் அமைத்திருந்தனர். அருவியில் நீர் கொட்டும் சத்தம் பேரிரைச்சலாகக் கேட்டது. அந்நேரம், அங்கே நம்முடன் இணைந்து கொண்ட அந்தப் பகுதியின் வனவரான சதீஷ், அந்த அருவியைப் பற்றி விளக்கினார்.

“இந்த அருவியின் பெயர் குரங்கருவி. இந்த அருவி மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் குரங்குகள் அதிகமாக இருப்பதால் இப்படி அழைக்கப்படுகிறது. நீர் எப்போதும் வற்றாமல் இருக்கும் பகுதியில் தான் குரங்குகள் வாழும். அந்த வகையில் இந்த அருவியின் மேல் பகுதியில் ஒன்பது ஓடைகள் இருக்கின்றன. அந்த ஒன்பது ஓடைகளில் நீர் அதிகமாகும் போது அது, இந்த அருவியில் கொட்டும். இந்த அருவியில் நீர் ஊற்றாத சமயங்களிலும் அந்த ஒன்பது ஓடைகளில் நீர் இருக்கும். இப்படி, நீர் எப்போதும் வற்றாமல் இருப்பதால் தான் இங்கே குரங்குகள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில், குரங்கருவி என்று சொல்வது ஒரு மாதிரியாக இருந்ததால், இந்த அருவியின் பெயரை இப்போது, கவியருவி என்று மாற்றியுள்ளோம். தூய தமிழில் கவி என்றால் குரங்கு என்று பொருள். மேலும், ஒரு வருடத்துக்கு முன்பு வரை இந்த அருவியின் நுழைவாயில் மலைக் கற்களாகவே இருந்தது. அதை இப்போது படிகளுடனும், குரங்குகளின் சிலைகளுடனும் அழகாக மாற்றி இருக்கிறோம். சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக உடை மாற்றும் அறை, கழிவறை, தேனீர் விடுதி ஆகியவற்றை அமைத்து, பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்தி இருக்கிறோம். இதன் கீழேயுள்ள சமதளப் பகுதியை, குழந்தைகள் குளிக்க ஏதுவாக மாற்றி இருக்கிறோம்’’ என்றார்.

இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்த போது, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய,

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்

குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே!

என்னும் குற்றாலக் குறவஞ்சிப் பாடல் தான் நினைவுக்கு வந்தது.

அப்போது அந்த அருவி நீரைக் கையில் பிடித்துக் குடித்துப் பார்த்த கணேசன், நீர் சுவையாக இருப்பதாகவும், குட்டிக் குற்றாலம் போல இருப்பதாகவும் கூறி, அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளிடம், “வயதானவர்கள் இந்தப் படிகளில் ஏறி வர முடியாது. அதனால் இந்தப் படிப்பகுதியை ஒட்டிச் சாய்தள வழி அமைக்கலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி மலையில் ஏறினோம். சுமார் நாற்பது வளைவுகளைக் கொண்ட அந்த மலையின் ஒன்பதாவது வளைவில் காட்சி முனை இருந்தது. அதைப் பார்வையிட்டோம். அங்கிருந்து பார்த்த போது, ஆழியாறு அணை ஏதோவொரு பெரிய கண்மாயைப் போல இருந்தது. கீழிருந்து மேலே வரும் சாலை பாம்பைப் போல வளைந்து வளைந்து அழகாகத் தெரிந்தது. அந்தக் காட்சி முனைக்கு மேலே பெரிய பாறையொன்று புற்களுடன் அழகாகக் காணப்பட்டது. அது, வரையாடுகள் வாழும் பகுதி என்று சாலையில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்க, நமக்கு மிக அருகில் வரையாடு ஒன்றும் நின்று கொண்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே நம்மிடம் பேசிய கணேசன், இந்த வரையாடு தான் தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்றும், நாம் வளர்க்கும் ஆடுகள் அனைத்தும் இந்த வரையாடுகளில் இருந்து உருவானவை தான் என்றும் கூறினார்.

varai aadu

தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய நாம், சற்று நேரத்தில் அட்டகட்டி என்னும் பகுதியை அடைந்தோம். அங்கு வன உயிரின மேலாண்மைப் பயிற்சி மையம் இருந்தது. அந்தப் பயிற்சி மையத்தில், ஆனைமலை பொள்ளாச்சிக் கோட்ட வனத்துறை அதிகாரிகள் சுமார் ஐம்பது பேர் கூடியிருந்தனர்.

அவர்களிடம் பேசிய கணேசன், “பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பல விஷயங்கள் நிறைந்துள்ளன. ஆனால், அவற்றைப் பற்றிய ஆவணங்கள் இல்லை. நீங்கள் பார்க்கும் அனைத்தும் ஆவணமாக வேண்டும். தகவல்கள் நம் கையில் இருந்தால் நம்முடைய வேலை மிக எளிதாக இருக்கும். அருவி என்பது அருவி மட்டுமே அல்ல. நீர் ஊற்றும் அனைத்தும் அருவி தான்.

மின்னணு நூலகத்தை உருவாக்க வேண்டும். இன்றைய தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காகிதம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். வனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்’’ என்றவர், வனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஏதுவாக, சுமார் 144 விஷயங்கள் உள்ளடக்கிய ஒரு கோப்பை, புரொஜெக்டரில் காட்டி விளக்கினார்.

உயரதிகாரி என்னும் மிடுக்கு இல்லாமல் மிக இயல்பாக அவர்களுடன் உரையாடிய கணேசன், வன உயிர்கள் கணக்கெடுப்பு, பாதுகாப்புக் குறித்த அறிவுரைகளையும் வழங்கியதுடன், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பின்னர், ஆனைமலைப் பகுதியில் உள்ள யானை, சிறுத்தை போன்ற வன உயிரினங்களைப் பற்றித் துல்லியமாக அறிந்து கொள்ள, வனப்பகுதியில் காமிரா பொருத்தும் பணிக்கான பயிற்சியை, வன உயிரியலாளர் பீட்டர் வழங்கினார்.

கேமரா நிறுவுவது குறித்த பயிற்சியில்…

அவரிடம் பேசிய போது, “ஆனைமலை புலிகள் காப்பகம் சுமார் 1909 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது. பொள்ளாச்சிக் கோட்டத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் இடத்துக்கு இரண்டு காமிராக்கள் வீதம் 674 இடங்களில் 1,348 காமிராக்களை வைக்கப் போகிறோம். இந்த காமிராக்கள் மூலம், வன விலங்குகளின் உடல் அசைவுகள், வெப்பநிலை ஆகியவற்றைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.  

இந்தக் காமிராக்கள் பகலில் காணொளியாகவும், இரவில் புகைப்படமாகவும் எடுக்கும். இதன் மூலம் இந்த வனப்பகுதியில் உள்ள யானைகள், புலிகள், சிறுத்தைகள் என, அனைத்து வன விலங்குளையும், தாவர உண்ணிகளையும் கணக்கிட முடியும்.

புலிகள், சிறுத்தைகளின் உடலிலுள்ள வரிகளை வைத்து அவற்றைத் தனித்தனியாக அடையாளம் காணலாம். புலிகள் மற்றும் சிறுத்தைகளின் இருப்பைப் பொறுத்துத் தான் ஒரு காட்டின் வளம் தீர்மானிக்கப்படும். ஒரு புலி வாழ 25 சதுர கிலோ மீட்டர் காடு தேவைப்படும். 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆனைமலை புலிகள் வனக் காப்பகத்தில் 23 புலிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் மற்றும் காணொளிகளை நான்கு நாட்களுக்கு ஒருமுறை சேகரித்து, அந்தப் பதிவுகளை வருடம் ஒருமுறை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கிறோம்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து, அருகில் இருந்த ஹார்ன்பில் காட்சி முனைக்குச் சென்றோம். அங்கே வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், வனவர்கள் முனியாண்டி, சிவக்குமார் ஆகியோரும் நம்முடன் இணைந்து கொண்டனர். அங்கிருந்து பார்த்த போது, மேல் ஆழியாறு அணையும், கீழ்ப்பகுதியில் உள்ள நவமலை மின் வாரியமும் நன்றாகத் தெரிந்தன. மேல் ஆழியாறு அணையிலிருந்து வரும் நீர், மலையின் நடுவே வெள்ளியை உருக்கி ஊற்றி வைத்ததைப் போல அழகாகக் காட்சியளித்தது.

ஹார்ன்பில் காட்சி முனையில்…

அப்போது அந்த ஹார்ன்பில் காட்சி முனை குறித்து, வனச்சரகர்கள் முனியாண்டியும் சிவக்குமாரும் நம்மிடம் விவரித்தனர். “ஹார்ன்பில் என்பது இருவாச்சி என்னும் ஒருவகைப் பறவையின் ஆங்கிலப் பெயராகும். கழுகைப் போல மிகப்பெரிய உருவில் இருக்கும். அந்தப் பறவைகள் இங்கே மேல் ஆழியாறு அணையில் இருந்து கீழேயுள்ள நவமலை மின் வாரியம் வரை பறந்து சென்று வரும். அதனாலேயே இதற்கு ஹார்ன்பில் காட்சி முனை என்னும் பெயர் வந்தது.

அந்தப் பறவைகள் பறந்து செல்லும் போது அதன் இறக்கைகள் பெரியதாக இருப்பதால் ஹெலிஹாப்டர் பக்கத்தில் பறந்து செல்வதைப் போலச் சத்தம் கேட்கும். அந்தப் பறவை சத்தமிட்டால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் கேட்கும்’’ என்றனர்.

அடுத்து, அங்கிருந்து வெளியே வரும் போது, சற்றுத் தொலைவில் இருக்கும் ஆர்க்கிட்டோரியம் பகுதிக்கான பாதையை மலைகளுக்குள் செயற்கையாக அமைத்திருந்தனர். அதில் நடந்து செல்லும் போது, அடர்ந்த மலைப்பகுதியில் நடந்து செல்வதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. இடையில் இருக்கும் நீரோடையைக் கடக்க ஏதுவாக, அதன் மேலே பாலம் அமைத்திருந்தனர்.

மலைகளுக்கு ஊடாக நடைபயணம்…

அங்கே நடந்து செல்லும் போது, கணேசன் அங்கிருந்த சிங்கவால் குரங்குகளைக் காட்டி, இந்தக் குரங்குகள் தமிழ்நாட்டில் இரண்டு மலைகளில் மட்டுமே வசிப்பதாகக் கூறினார். மேலும், ஒரு மரத்தில் படர்ந்திருந்த பாசியைக் காட்டி, “இந்தப் பாசி சுத்தமான காற்று உள்ள இடத்தில் மட்டுமே வளரும். இந்தப் பாசி இருந்தால் அங்கே சுத்தமான காற்று உள்ளதென்று அர்த்தம்’’ என்று நம்மிடம் விளக்கினார்.

அப்படியே நடந்து ஆர்க்கிட்டோரியத்தை அடைந்தோம். அங்கே நிறைய ஆர்க்கிட் மலர்ச் செடிகள், புதிய உத்திகளுடன் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்வையிட்ட கணேசன், அங்கிருந்த அதிகாரிகளிடமும் சில ஆலோசனைகளை வழங்கினார்.

பிறகு, அங்கிருந்து கிளம்பி வால்பாறையை நோக்கிப் பயணித்தோம். அப்போது, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் நம்முடன் இணைந்து கொண்டார். சற்றுத் தொலைவு சென்றதும் வாட்டர் பால் என்றொரு பகுதி இருந்தது. அங்கு அழகான அருவி ஓடிக் கொண்டிருந்தது. அருவிநீர் சாலை வரை சாரலாக அடித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு பெரிய பாலம் ஒன்றைக் கடந்த போது, அந்தப் பாலத்தின் அடியில் அருவிநீர் பெருஞ் சத்தத்தோடு ஓடிக் கொண்டிருந்தது.

அங்கிருந்து மலையின் இருபுறமும் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. மிதமான சாரலும் அடித்தது. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையிலான சாலையில் இரம்மியமான காட்சிகளைப் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்த போது, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் நம்மிடம் பேசினார்.

அப்போது, “அட்டகட்டிப் பகுதிக்கு மேலிருந்து வால்பாறைப் பகுதி முழுவதும் இருக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களும் சோலைகளும் தனியாருக்குச் சொந்தமானவை. தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டமும் உள்ளது. இந்தப் பகுதியில் தான் யானைகள், சிறுத்தைகள் அதிகமாக வாழ்கின்றன. அவை, அங்கங்கே சில நேரங்களில் செய்யும் செயல்களால் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகச் சிரமம் இருக்கிறது. அப்படி, கடந்த சில தினங்களுக்கு முன் யானை சேதப்படுத்திய பகுதிகளைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்’’ என்ற போது கவரக்கல் என்ற பகுதியை அடைந்திருந்தோம்.

அது, மலையின் உச்சிப் பகுதி. காரின் முன் என்ன இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு ஒரே பனி மூட்டம். அதைப்பற்றி அவரிடம் கேட்டோம். அப்போது, “இது தான் இந்த மலையின் உச்சிப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,100 மீட்டர் உயரம். இங்கே எப்போதுமே இப்படித் தான் இருக்கும். இதற்கடுத்து மலை கீழ்நோக்கி இறங்கும். அங்கே தான் வால்பாறை உள்ளது’’ என்றார்.

அவர் கூறியதைப் போலச் சற்று நேரத்தில் வால்பாறையை அடைந்தோம். அங்கிருந்து தேயிலைத் தோட்டங்களுக்கு ஊடே பயணித்தோம். மாலை நேரம் என்பதால், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தத் தேயிலைத் தோட்டங்களுக்குள் அங்கங்கே சில வீடுகள் இருந்தன. அவை, தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் கட்டிக் கொடுத்த வீடுகள் என்றார்கள். தோட்டம், வனம், குளிர்ச்சியான காற்று, சுத்தமான குடிநீர் என, இனிமையான சூழலில் எளிமையான வீடுகள். இந்த வாழ்க்கை, நகரத்து மக்களுக்கு கிடைக்காத வரம். அப்படியொரு வாழ்க்கை.

அப்படியே பயணித்தோம். அங்கே ஓரிடத்தில் இருந்த ரேஷன் கடையை யானைகள் சூறையாடி இருந்தன. சன்னல்கள், கதவுகள், சுவர்கள் உடைக்கப்பட்டிருந்தன. அதற்கு அடுத்து ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த வீட்டையும் சேதப்படுத்தியிருந்தன. அவற்றை எல்லாம் காட்டி விளக்கினார் வனச்சரக அலுவலர் மணிகண்டன்.

அவற்றைப் பார்த்து முடித்த பிறகு அங்கிருந்து கிளம்பி மழுக்குப்பாறை சோதனைச் சாவடியை அடைந்தோம். அதற்குச் சற்றுத் தொலைவில் தான் கேரள எல்லை உள்ளது. அந்தச் சோதனைச் சாவடியில் இருந்த வாகனப்பதிவுப் புத்தகத்தைப் பார்வையிட்ட கணேசன், அங்கிருந்த அதிகாரிகளுக்குச் சில ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் பிறகு, அங்கிருந்து கிளம்பி மேல்நோக்கிப் பயணித்தோம். சாலையின் வலப்புறம் சோலையாறு அணை பிரம்மாண்டமாய்க் காட்சியளித்தது. மதகுக் கதவிடுக்கில் வழிந்து கொண்டிருந்த அணைநீர், அங்கிருந்த ஒளி விளக்குகளுக்கு மத்தியில், பாலை ஊற்றி விடுவதைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே நம்மிடம் பேசிய மணிகண்டன், “இங்கே சோலைக் காடுகள் அதிகமாக உள்ளதாலும், அதன் மத்தியில் கட்டப்பட்டதாலும், இந்த அணைக்குச் சோலையாறு என்று பெயர் வைத்துள்ளார்கள். இது தான் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான அணை. கிட்டத்தட்ட நூறு மீட்டருக்கு மேல் உயரம். இந்த அணை 1971 இல் கட்டி முடிக்கப்பட்டது. வால்பாறையைச் சுற்றிப் பெய்யும் மழை நீரெல்லாம் இந்த அணைக்கு வரும் வகையில் அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கான திட்டமிடுதலும் உருவாக்கமும் அற்புதமான ஒன்று. இந்த அணையின் ஒருபகுதி நீர் கேரளாவுக்கும், ஒருபகுதி நீர் தமிழ்நாட்டுக்கும் கிடைக்கிறது’’ என்று சோலையாறு அணையைப் பற்றி விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வனத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நம்மிடம் விளக்கினார் உதவி வனப் பாதுகாவலர் செல்வம். “பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு, மக்கள் உண்ணும் உணவுப் பொருள்களை வன விலங்குகளுக்குக் கொடுப்பது, அதைச் சாப்பிட விட்டு வேடிக்கை பார்ப்பது. இது மிகப்பெரிய தவறு. ஏனெனில், நாம் சாப்பிடும் உணவை, வன விலங்குகளுக்குக் கொடுப்பதன் மூலம் அவற்றின் வாழ்வியல் தன்மையை மாற்றுகிறோம்.

வன விலங்கு என்றால் அது வனத்தில் உள்ள இலைதழைகள், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றைச் சாப்பிடும். அதற்காக அவற்றைத் தேடும். அப்போது வனத்தில் சுற்றித் திரியும். அப்போது தான் அது சாப்பிட்ட உணவுப் பொருள் செரிக்கும். ஆனால், நாம் சாப்பிடும் உணவுப் பொருளை அதற்குக் கொடுத்து, அதன் உணவுத் தேடலை நிறுத்துகிறோம், அதன் வாழ்க்கை முறைக்கு மாறான உணவுப் பொருளைக் கொடுக்கிறோம். அதனால், அதன் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும். அத்துடன் நாம் பிளாஸ்டிக் உறைகளோடு கொடுக்கிறோம். சில நேரங்களில் அவற்றையும் சேர்த்து உண்ணும் போது அதன் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

அடுத்ததாக இங்குள்ள பகுதிகளில் வரையாடுகள், சிங்கவால் குரங்குகள் அதிகம். இந்த இரண்டும் பட்டியல் ஒன்றில் உள்ள விலங்குகள். வேறு எங்கும் அவ்வளவாக இல்லாத விலங்குகள். ஆனால், இவற்றை இங்கே எளிதாகப் பார்க்கலாம். அவற்றுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பது, துரத்துவது, சத்தமிடுவது, ஆர்ப்பரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அது வன விலங்குகளைத் துன்புறுத்துவது ஆகும்.

வனச்சாலைகளில் செல்லும் போது வேகக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். அத்துடன், எல்லா இடங்களிலும் வாகனங்களை நிறுத்துவது, கீழிறங்கி புகைப்படம் எடுப்பது, சிறுநீர்க் கழிப்பது, மது அருந்துவது, அந்தப் புட்டிகளைத் தூக்கிப் போடுவது, குடிநீர்ப் புட்டிகளைத் தூக்கியெறிவது, சாப்பிடுவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. ஏனெனில், வனப்பகுதியில் வன விலங்குகள் எந்நேரமும் எங்கும் வரும் ஆபத்து உள்ளது.

யானை ஊருக்குள் வந்து விட்டது என்கிறார்கள். குரங்கு வீட்டுக்குள் வந்து விட்டது என்கிறார்கள். யானையும் குரங்கும் ஊருக்குள் வீட்டுக்குள் வரவில்லை. நாம் தான் அவற்றின் இடத்தில் இருக்கிறோம். எனவே, அவற்றைத் தொந்தரவு செய்யாமல், தீங்கிழைக்காமல் அவற்றுடன் இணைந்து வாழப் பழகிக் கொள்வதே நல்லது. அமைதியை விரும்புவது தான் சுற்றுலா. அமைதியின் அடையாளம் தான் வனம். இயற்கையை இயற்கையாகவே அனுபவித்தல் நலம். நிறைய விழிப்புணர்வு தேவை’’ என்றார்.

பலமணி நேரப் பயணத்தின் இறுதிக்கு வந்த நாம், அங்கிருந்து கிளம்பி உருளிக்கல் சோதனைச் சாவடியை அடைந்தோம். அங்கும் பார்வையிட்டு அங்கிருந்த வனக் காப்பாளர்களுக்கு சில அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார் கணேசன். அதன் பிறகு வால்பாறையைக் கடந்து ஆழியாறு வந்தடைந்தோம்.

உடலுக்கும் மனத்துக்கும் மருந்தாக அமைவதால் தான், இயற்கையை அனுபவித்தல் சுகம் என்கிறோம். அந்தச் சுகத்தை அடைய நினைப்பவர்கள், ஒருமுறையாவது ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை, சோலையாறுக்குச் சென்று வர வேண்டும்.

நிழற்படத் தொகுப்பு:

 


மு.உமாபதி,

படங்கள்: அ.ஸ்டான்லி, பிஏ பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!