எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

யிர்களுக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளில் முக்கியமானது தழைச்சத்து. இது, குருணை வடிவ யூரியாவாகத் தான் பயிர்களுக்கு இடப்படுகிறது. இதில், தழைச்சத்தான நைட்ரஜன் 46% உள்ளது. அளவுக்கு அதிகமாகச் செயற்கை உரங்களை நிலத்தில் இடுவதால், மண்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, விளையும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை உண்டாதல் போன்ற தீமைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கும் வகையில், நானோ யூரியா என்னும் திரவ யூரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திரவ நானோ யூரியா

இந்த யூரியா, பயிர்களின் இரண்டு முக்கிய வளர்ச்சி நிலைகளில் இலை மூலம் தருவதற்கு ஏற்றது. இதன் மிக நுண்ணிய துகள்கள், இலைகளின் துளைகள் மற்றும் பிற திறப்புகள் மூலம் பயிர்களால் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இதில் பயன்படாமல் உள்ள தழைச்சத்து, இலைச் செதில்களின் வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டு, பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான போது மெதுவாகக் கிடைக்கிறது.

ஆனால், குருணை யூரியாவைப் பயிர்களுக்கு இடும்போது, 70%க்கு மேலான யூரியா, பயிர்கள் எடுத்துக் கொள்ளாத நிலையில் வீணாகிறது. இதனால், நிலம் அமிலத் தன்மையை அடைவதுடன், நீரில் கரைந்தோடும் யூரியாவால், நீர் நிலைகளும் மாசடைகின்றன.

நானோ யூரியாவின் சிறப்புகள்

இது, நானோ தொழில் நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் பயன்பாட்டுத் திறன், குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. குருணை யூரியாவை விடக் குறைவாகவே தேவைப்படும். நீடித்த நிலையான சுற்றுச் சூழலுக்கும், உணவுக்கும் பாதுகாப்பானது. இதனால், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படுவதில்லை. நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம் 50% குருணை யூரியாவைக் குறைக்கலாம்.

பயன்படுத்தும் முறை

ஓர் ஏக்கருக்கு 500 மில்லி திரவ யூரியா போதுமானது. இதை, 125 லிட்டர் நீரில் கலந்து, பயிர்களின் இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். பயிர்களின் வளர்ச்சி நிலையைப் பொறுத்து நீரின் அளவு மாறுபடும். முதலில், பயிரின் வளர்ச்சிப் பருவமான 30-35 நாட்களில் அல்லது பயிர்கள் கிளைக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

அடுத்து, பயிர்கள் பூப்பதற்கு ஒரு வாரம் முன்பாக அல்லது முதல் தெளிப்பில் இருந்து 20-25 நாட்கள் கழித்துத் தெளிக்க வேண்டும். இந்தத் திரவ யூரியா, பயிர்களில் தெளிப்பதற்கே பரிந்துரை செய்யப்படுகிறது. இதை, சல்பேட் ஆஃப் பொட்டாஷ் அல்லது நீரில் கரையும் 0:52:34 உரத்துடன் கலந்து தெளிக்கலாம். இதனால், பயிருக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் கிடைப்பதால், நல்ல பலன் கிடைக்கும். நானோ யூரியாவுடன் உயிர் ஊக்கிகளையும் சேர்த்துத் தெளிக்கலாம்.

தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை

நானோ யூரியா புட்டியை நன்றாகக் குலுக்கி விட்டுத் திறக்க வேண்டும். தெளிப்பில் ஈடுபடுபவர், கையுறை, காலுறை மற்றும் உடல் முழுவதும் மறைக்கும் உடையை அணிய வேண்டும். தெளிப்புக்குத் தட்டை வடிவ அல்லது வெட்டுமுனைத் தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும். பனி பெய்யும் நேரம் தவிர்த்து, காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும். இந்த யூரியாவை, உற்பத்தி செய்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுக்குள் பயன்படுத்த வேண்டும்.

நானோ யூரியாவின் நன்மைகள்

அரை லிட்டர் திரவ யூரியாவானது, ஒரு மூட்டைக் குருணை யூரியாவுக்குச் சமமான பயனை அளிக்கிறது. அனைத்துப் பயிர்களுக்கும், குருணை யூரியாவை மேலுரமாக இடுவதற்கு மாற்றாக, நானோ யூரியாவைப் பயன்படுத்தலாம். இது, இலைவழியே ஊடுருவி வேர்கள் வரையில் சென்று தழைச்சத்தை அளிக்கிறது. மண், நீர், காற்று மாசடையாமல் பாதுகாத்து மகசூலைக் கூட்டுகிறது. இதன் மூலம் இயல்பான மகசூலை விட 8% வரை கூட்டலாம்.

அரை லிட்டர் நானோ யூரியாவின் விலை 240 ரூபாய். இது, இப்போது IFFCO-BAZAAR இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உரக்கடைகளிலும் கிடைக்கிறது. அன்பார்ந்த விவசாயப் பெருமக்களே, திட யூரியாவைத் தவிர்ப்போம்; திரவ யூரியாவைத் தெளிப்போம்; மகசூலைப் பெருக்குவோம்.


வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்நாகை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!