கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
கறவை மாடுகளை, ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கோடு பராமரிக்க வேண்டும். கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மை, சரியான தீவனப் பராமரிப்பின்மை போன்றவற்றால், பால் உற்பத்திக் குறையும்; பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்; வருமானம் குறையும்.
கறவை மாடுகள் தற்காலிகமாகச் சினைப் பிடிக்காத நிலையே மலட்டுத் தன்மையாகும். இதனால், ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கை அடைய முடிவதில்லை. கறவை மாடுகளில் பால் உற்பத்திக் குறையவும், மலட்டுத் தன்மை ஏற்படவும் முக்கியக் காரணம், சரிவிகிதத் தீவனமின்மை மற்றும் கருவூட்டல் செய்யும் நேரமாகும்.
பின்பற்ற வேண்டிய உத்திகள்
மாடுகள் சினைப் பருவத்தை 8-24 மணி நேரம் வெளிப்படுத்தும். சினைப்பருவ அறிகுறிகள் காலையில் தெரிந்தால் மாலையிலும், மாலையில் தெரிந்தால், அடுத்த நாள் காலையிலும் சினைக்குச் சேர்க்க வேண்டும். சில மாடுகளில் 48 மணி நேரம் வரை, அதாவது, இரண்டு நாட்கள் வரை, சினைப் பருவம் இருக்கும். இத்தகைய மாடுகளுக்கு இரண்டு நாட்களுக்கும் சினை ஊசியைப் போட வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்ட 6-8 மணி நேரம் கழித்துச் சினைக்குச் சேர்க்க வேண்டும். சினைப் பருவம் முடிந்த பிறகு மாடுகளைச் சினைக்குச் சேர்க்கக் கூடாது. இதனால் சினைப் பிடிப்புத் தன்மையைக் கூட்டவும், மலட்டுத் தன்மையைக் குறைக்கவும் முடியும்.
கறவை மாடுகளைப் பொலி காளையுடன் சேர்ப்பதை விட, செயற்கை முறை கருவூட்டல் செய்வது மிகவும் நல்லது. இதனால், சில நேரங்களில் பொலி காளை மூலம் ஏற்படும் நோய்த் தொற்றைத் தவிர்க்கலாம். செயற்கை முறை கருவூட்டலில், நன்கு சுத்தம் செய்யப்பட்ட உறை விந்துக் குச்சிகளைப் பயன்படுத்துவதால், நோய்ப் பரவல் தவிர்க்கப்படும்; கருத்தரிக்கும் திறன் மேம்படும். செயற்கை முறை கருவூட்டல் செய்ய முடியாத நிலையில், பொலி காளையுடன் சேர்க்கலாம்.
ஊமைச்சினை அல்லது பொய்ச்சினை மூலமும் கறவை மாடுகளில் மலட்டுத் தன்மை ஏற்படும். இவ்வகைக் கறவை மாடுகள் சினைப் பருவத்தை வெளிப்படுத்தாது. இந்நிலையில், ஆசனவாய் ஆய்வைச் செய்து பார்த்தால், மாடுகள் சினைப் பருவத்தில் இருப்பது தெரிய வரும்.
இந்தப் பொய்ச் சினை எருமை மாடுகளில் ஏற்படும். அதாவது, கன்றை ஈன்ற பிறகு வரும் முதல் சினைப் பருவம் பொய்ச் சினைப் பருவமாகும். மாடுகள் ஈன்று 60-90 நாட்களில் வெளிப்படுத்தும் சினைப் பருவத்தில் அவற்றைச் சினைக்குச் சேர்க்க வேண்டும். இல்லையெனில், ஆண்டுக்கு ஒரு கன்று இலக்கை அடைய முடியாது.
கிடேரிக் கன்றுகளை வளர்த்துச் செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கு முன், அவற்றின் வயது, எடை, கருப்பை வளர்ச்சி ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பசுக்கன்றுகளை ஒன்றரை வயதிலும், எருமைக் கன்றுகளை மூன்று வயதிலும் சினைப்படுத்த வேண்டும். உடல் எடை, தாயின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும்.
சரிவிகிதத் தீவன முறைகள்
கறவை மாடுகளின் தீவனத்தில் பல்வேறு வைட்டமின்கள், தாதுப்புகள் இருந்தாலும், வைட்டமின் ஏ, இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உயிர்ச்சத்துக் குறைந்தால், சினைப் பிடிப்புத் தன்மை குறைவதுடன், மலட்டுத் தன்மை மற்றும் தொடக்கக்காலக் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பசுந்தீவனத்தை மட்டும் கொடுத்தால் பாஸ்பரஸ் பற்றாக்குறையும், இதனால் மலட்டுத் தன்மையும் உண்டாக வாய்ப்புள்ளது. தீவனக் குறையால் ஏற்படும் மலட்டுத் தன்மை என்பது, பல்வேறு சத்துகள் குறைவதன் வெளிப்பாடாகும். எனவே, பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் ஆகியவற்றின் பற்றாக்குறையே மலட்டுத் தன்மை நிகழ்வதற்கு முக்கியக் காரணமாகும். ஆகவே, கறவை மாடுகளுக்குச் சமச்சீர் தீவனத்தை அளித்தால் இதைச் சரி செய்யலாம்.
நன்கு வளர்ந்த ஒவ்வொரு மாட்டுக்கும் 10-15 கிலோ பசுந்தீவனம், 5 கிலோ உலர் தீவனம், ஒரு கிலோ கலப்புத் தீவனம் வீதம் கொடுக்க வேண்டும். இவற்றில் தாதுப்புகள் குறைவாக இருப்பதால், இதைச் சரி செய்ய, தினமும் 40-50 கிராம் தாதுப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும்.
பசுந்தீவனத்தில் நார்ச்சத்து மிகுந்த தீவனச்சோளம், புரதம் மிகுந்த வேலி மசால், தீவனத் தட்டைப்பயறு மற்றும் அகத்தி, சீமையகத்தி, சூபாபுல், முருங்கை, கல்யாண முருங்கை போன்ற மரவகைத் தழைகள், சுக்ரோஸ் மிகுந்த தீவன மக்காச்சோளம் போன்றவற்றை வயல் மற்றும் வரப்புகளில் வளர்த்துக் கொடுக்கலாம்.
இந்தப் பண்ணை உத்திகளைக் கையாண்டால், ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கை எட்டலாம்; பால் உற்பத்தியைப் பெருக்கலாம்; பண்ணை மூலம் வளமான வருவாயை அடையலாம்.
கி.செந்தில்குமார்,
ம.பெரியண்ணன், ம.செல்வராஜ், து.கோபிகிருஷ்ணன், ம.பழனிசாமி,
கால்நடை ஈனியல் மற்றும் இனப்பெருக்கத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.