கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
காசநோய் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் என்னும் நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள், மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோயக் கிருமிகள், நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மக்களுக்கும் பரவுகின்றன.
நோய் அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும். மாடுகள் மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும். இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும். மார்பிலுள்ள நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும். குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
மடி பாதிக்கப்பட்டால் மடியின் மேல்பாகம் அதிக கெட்டித் தன்மையை அடைந்து விடும். பாலின் தன்மையும் கெட்டுப் போகும். பாதிக்கப்பட்ட மாடுகள், நோய் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை அவதிப்பட்டு இறந்து விடும்.
தடுப்பு முறைகள்
தொடர்ந்து இளைத்துக் கொண்டே வரும் மாடுகளின் தோலில் ட்யூபர்குளின் சோதனைக்கு உட்படுத்தி காசநோய் உள்ளதா என்பதை அறிய வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை, மாடுகளைக் காசநோய் சோதனைக்கு உட்படுத்தி, நோயுற்ற மாடுகளைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
நோயுற்ற மாடுகளைப் புதிதாகப் பண்ணையில் சேர்க்கக் கூடாது. மூன்று மாத வயதுள்ள கன்றுக் குட்டிகளையும் ட்யூபர்குளின் சோதனைக்கு உட்படுத்தி, காசநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
முனைவர் க.தேவகி,
முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
முனைவர் கா.செந்தில் குமார், முதுகலை கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்.