கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
நம் நாட்டுச் சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இதன் சிறப்பை அறியாதவர்கள் உணவிலிருந்து இதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இதை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
பெயர் காரணம்
கறிவேம்பு, கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை எனப்படும் இது, பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். இது, சமைக்கப்படும் பலவித உணவுப் பொருள்களில் சுவைக்காக, மணத்துக்காகச் சேர்க்கப்படும். இந்தச் செடியின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். இதில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணமிக்க செங்காம்பு இரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு இரகம் எனப் பல இரகங்கள் உள்ளன. கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலை வேப்பிலையைப் போல இருப்பதாலும், கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை எனப்படுகிறது.
வேதிப்பொருள்கள் மற்றும் மருத்துவக் குணங்கள்
கறிவேப்பிலை மற்றும் பட்டையில் பலவகை வேதிப்பொருள்கள் உள்ளன. பொதுவாகக் காணப்படும் மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பில்லாத நார்ச்சத்து, தாதுப்புகள், வைட்டமின்கள் ஏ, சி, சுண்ணாம்பு, ஆக்சாலிக் அமிலம், கிளைக்கொசைட், கார்பகால், அல்கலாய்டு, மியுர்ராச்டீன், மியுர்ரயலின், கோறீன், கோநீடின் போன்றவை உள்ளன.
சுண்ணாம்பு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியன கணிசமாக உள்ளன. அதனால் தான், தாதுப்புக் குறையுள்ள பெண்களும், முதியோரும், எலும்புப்புரை நோயாளிகளும் கறிவேப்பிலையை உணவில் நிறையச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கறிவேப்பிலையில் உள்ள வேதிப் பொருள்கள், சர்க்கரை நோய், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், பூஞ்சை நோய்கள் மற்றும் பலவகை நுண்ணுயிர் நோய்களையும் எதிர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளன. மேலும், நறுமணம் காரணமாக, அழகுச் சிகிச்சையிலும் கறிவேப்பிலை பயன்படுகிறது.
கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை
தாதுப்புகள், வைட்டமின்கள், வேதிப்பொருள்கள் உள்ளதால், கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை வெகுவாகப் பயன்படுகிறது. மலட்டுத் தன்மை, நீர்க்கழிச்சல் ஆகியவற்றைப் போக்குவதில் கறிவேப்பிலை பயன்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், மரபுவழி மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூலம், இந்த மருத்துவம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
மலட்டுத் தன்மையைப் போக்க
ஈன்ற கறவை மாடுகள் 3-4 தடவை சினையூசி போட்டும் சினையாகாமல் இருந்தால் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம். ஒரு மாட்டுக்கு முதல் 5 நாட்களுக்கு தலா கால் கிலோ முள்ளங்கி, அடுத்த 4 நாட்களுக்குத் தலா ஒரு சோற்றுக் கற்றாழை மடல், அடுத்த 4 நாட்களுக்குத் தலா 4 கைப்படி முருங்கை இலை, அடுத்த 4 நாட்களுக்குத் தலா 4 கைப்பிடி பிரண்டை, கடைசி 4 நாட்களுக்குத் தலா 4 கைப்பிடி கறிவேப்பிலையை, கொஞ்சம் பனைவெல்லம், உப்பைச் சேர்த்துக் கொடுத்தால், கருப்பைச் சிக்கல் நீங்கி மாடுகள் எளிதில் கருத்தரிக்கும்.
கருப்பை அழற்சியை முள்ளங்கியும் சோற்றுக் கற்றாழையும் போக்கும். தாதுப்புக் குறையை, முருங்கை, பிரண்டை, கறிவேப்பிலையில் உள்ள தாதுப்புகள் சரி செய்யும்.
நீர்க்கழிச்சல் நீங்க
ஒரு மாட்டுக்கு, வெந்தயம் 10 கிராம், சின்ன வெங்காயம் 5, பூண்டு ஒரு பல், சீரகம் 10 கிராம், மஞ்சள் 10 கிராம், கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, கசகசா 5 கிராம், மிளகு 10 கிராம், பெருங்காயம் 5 கிராம், பனை வெல்லம் 100 கிராம் தேவைப்படும்.
இவை அனைத்தையும் அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி, கழிச்சல் உள்ள மாட்டுக்கு தினமும் ஒரு வேளை வீதம் நான்கு நாட்களுக்குக் கொடுத்தால் நீர்க்கழிச்சல் குணமாகும்.
முனைவர் செசிலியா ஜோசப்,
கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-7.
அ.இளமாறன், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம்.