கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020
இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கை மரம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. இது, காய், இலை, பூ, பட்டை வேர் என, அனைத்துப் பாகங்களும் பயன்படும் வகையிலுள்ள அதிசய மரமாகும். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மிகுதியாக வளர்க்கப்படும் முருங்கை மரம், எகிப்து, பிலிப்பைன்ஸ், இலங்கை. தாய்லாந்து, மலேசியா, மியான்மர், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், கியூபா, ஜமாய்க்கா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. பெரும்பாலும், காய்களுக்காக வளர்க்கப்படும் முருங்கை மரத்தின் இலைகளில் பல்வேறு சத்துகள் மற்றும் நோயெதிர்ப்புத் தன்மை இருப்பதால், இப்போது, முருங்கை மரத்தை இலைக்காக வளர்க்கும் ஆர்வம் விவசாயிகளிடம் பெருகி வருகிறது.
முருங்கை இலையிலுள்ள சத்துகள்
முருங்கை இலையில், கால்சியம், இரும்பு, பீட்டா கரோட்டீன் நார்ச்சத்து, உயிர்ச்சத்து சி மற்றும் டோக்கோ பெராஸ் எனப்படும் உயிர்ச்சத்து இ ஆகியன மிகுதியாக உள்ளன. மேலும், பல சத்துகளும் நிறைந்துள்ளன.
சாகுபடி முறை
நிலம் தயாரித்தல்: பொதுவாக, முருங்கை அனைத்து வகை நிலங்களிலும் வளரும். நல்ல வடிகால் வசதியுள்ள, வண்டல் கலந்த செம்பொறை மண்ணில் சிறப்பாக வளரும். களிமண் மற்றும் நீர்த் தேங்கி நிற்கும் நிலங்களில் முறையான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். முருங்கை நடவு நிலத்தை 3-4 முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், தொழுவுரத்தை இட்டு நிலத்தைப் பண்படுத்த வேண்டும். பிறகு, 20 செ.மீ. உயரத்தில் தேவையான நீளத்தில் பார்களை 1.5 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும்.
விதையளவு மற்றும் விதை நேர்த்தி: ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடியை எடுத்து, இந்த விதைகளைக் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.
நடவுக்காலம்: ஜூலை, செப்டம்பர் மாதங்களில் விதைகளை நடலாம். நேர்த்தி செய்த விதைகளைப் பார்களில், 50-60 செ.மீ. இடைவெளியில், 5 செ.மீ. ஆழத்துக்குள் நட வேண்டும்.
பாசனம்: விதைகளை நட்டதும் பாத்திகள் நன்கு நனையுமாறு நீரைப் பாய்ச்ச வேண்டும். உயர் படுக்கைப் பாத்தி முறைக்குச் சொட்டுநீர்ப் பாசன முறையே உகந்தது. இரண்டு வரிசைக்கு ஒரு சொட்டுநீர்ப் பக்கக்குழாய் இருக்குமாறு பாசன முறையை அமைக்க வேண்டும். விதைகள் முளைக்க 7-8 நாட்கள் ஆகும். அதுவரை ஈரம் குறையாமல் இருக்கும் வகையில் பாசனம் செய்ய வேண்டும்.
விதைகள் நன்கு முளைத்த பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள் நீரைப் பாய்ச்ச வேண்டும். செடிகள் நன்கு வளர்ந்த பிறகு, தட்பவெப்ப நிலையைப் பொறுத்து வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பாசனம் தேவைப்படும். ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் புது இலைகள் உற்பத்திக்கு நிலத்தில் போதுமான ஈரப்பதம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உரம்: இலைகளுக்காக முருங்கை மரங்களை வளர்க்கும் போது, போதிய உரங்களைச் சீரான கால இடைவெளியில் மரங்களுக்கு அளிக்க வேண்டியது அவசியம். 180:30:60 கிலோ தழை, மணி, மற்றும் சாம்பல் சத்தை, 8-10 பங்காகப் பகிர்ந்து, ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் பத்து நாட்கள் கழித்து நீர்வழி உரமாகக் கொடுத்தால் சீரான இலை மகசூலைப் பெறலாம்.
அறுவடை
நடவு செய்த விதைகள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக 80-90 நாட்களாகும். தரையிலிருந்து 45-50 செ.மீ. உயரத்தில் அறுவடை செய்ய வேண்டும். பிறகு, 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து முருங்கை இலைகளை அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்த இலைகளைக் காற்றோட்டமும் நிழலும் உள்ள இடத்தில் வைத்து உலர வைக்க வேண்டும். முருங்கை இலைகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், அழுகிப் போக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, அவ்வப்போது சீரான இடைவெளியில் கிளறி விட வேண்டும்.
மகசூல்
ஓராண்டில் ஏக்கருக்கு 7-8 அறுவடைகளில் 17-18 டன் பச்சை இலைகளும் 2.5-3.0 டன் உலர் இலைகளும் மகசூலாகக் கிடைக்கும்.
முனைவர் இரா.பாலகும்பகன்,
உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்-625604.
முனைவர் வெ.சிவக்குமார், உதவிப் பேராசிரியர்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்-642101.