கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021
இன்றைய விஞ்ஞானம் நமக்கு நாகரிக வாழ்க்கையைக் கற்றுத் தந்துள்ளது. ஆனாலும், நோய்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதற்கு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் கூறுவது, உடலைத் தாக்கும் கிருமிகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டும் என்பதாகும்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே உலுக்கி, கோரத் தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா வைரஸ். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம், வைரஸிடம் இருந்து காத்துக் கொள்ளுமாறு அரசு, மக்களைக் கேட்டுக் கொள்கிறது. இத்துடன், உணவு முறையிலும் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டுத் தோட்டம்
நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வீட்டு தோட்டத்தில் இருந்தே பெற முடியும். கொரோனா ஊரடங்குக் காலத்தில் காய்கறிகளின் விலை இரு மடங்காகக் கூடினாலும் வாங்கிக் கொண்டு தான் உள்ளோம். இதற்கு எளிதான தீர்வு வீட்டுத் தோட்டம் அமைப்பது. நஞ்சில்லாத மற்றும் சுவையான பழம் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்; புத்தம் புதிய காய்களைச் சமைக்கலாம்; காய்கறிச் செலவையும் குறைக்கலாம்.
சமையலறையில் வீணாகும் நீர் மற்றும் பொருள்களையே இதற்குப் பயன்படுத்தலாம்; வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வது உடலுக்கும் மனதுக்கும் சுகமான பயிற்சியாகும். வீட்டுத் தோட்டம் அமைக்க, பெரிய இடம் தேவையில்லை; பால்கனி அல்லது மொட்டைமாடியே போதும். பழைய குடிநீர் கேன், குடம், வாளி, டயர், ஜாடி, பாத்திரம் என அனைத்திலும் செடிகளை வளர்க்கலாம்.
அனைத்துப் பழங்கள் மற்றும் காய்களை வீட்டுத் தோட்டத்தில் விளைய வைக்க முடியாது என்றாலும், அன்றாட உணவில் பயன்படும் கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைய வைக்கலாம். ஆர்வம் இருந்தால் 500 சதுரடி வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்கலாம். மேலும், அரசு அலுவலகங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் தோட்டங்களை அமைத்து, அங்கே கிடைக்கும் வருவாயை அவர்களே பெறுமாறும் செய்யலாம்.
சரிவிகித உணவின் அடிப்படையில், ஒரு மனிதன் தினமும் 85 கிராம் பழம், 300 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டும். ஆனால், நாம் 120 கிராம் காய்கறிகளைத் தான் சாப்பிடுகிறோம். இந்நிலை மாற, அவரவர் வீட்டில் சத்துமிகு தோட்டத்தை அமைத்து, காய், கனி, மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்க்கலாம்.
அனைத்துச் சத்துகளும் அடங்கிய உணவுகளை உண்பதே சமச்சீர் உணவு. நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, கே, பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னிசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுகள் காய்கனிகளில் நிறைந்துள்ளன. மேலும், உயர்ரக எதிர்ப்புத் தாதுவான வெலினியமும் வைட்டமின் இ-யும் கிடைக்கும்.
தோட்டம் அமைத்தல்
திறந்தவெளித் தோட்டம், நிழற்குடில் தோட்டம் மற்றும் இவை இரண்டும் சேர்ந்த தோட்டம் என மூன்று வகைகளில் வீட்டுத் தோட்டத்தை அமைக்கலாம். மாடியில் மண்ணைக் கொட்டினால் கட்டுமானம் பாதிக்கப்படும். எனவே, மாட்டுச்சாணம், மட்கிய தென்னைநார்க் கழிவு போன்ற கனமற்ற, வளமான பொருள்களைக் கொண்டு அமைக்கலாம். மண்ணை மட்டும் பயன்படுத்தினால் தாவரங்களின் வேர்கள் நன்கு பரவாது.
எனவே, ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தொழுவுரம், 3 பங்கு மண் அல்லது மட்கிய தென்னைநார்க் கழிவு அல்லது சர்க்கரை ஆலைகள் விற்கும் பகசி கம்போஸ்ட்டைப் பயன்படுத்தலாம். மாடித் தோட்டத்தில் முக்கியச் சிக்கல் மண் இறுகிப் போவது. என்ன தான் மணல், மண், உரம், இலை மட்கு என்று கலந்து இட்டாலும் மண் இறுகி விடுகிறது.
அதனால் தென்னைநார்க் கழிவைக் கொட்டி நாற்றுகளை நடலாம். தென்னைக் கழிவு கனமின்றி இருப்பதால் எங்கும் எளிதாக தூக்கிச் செல்லலாம். இக்கழிவில் உள்ள நார்கள் செடிகளின் வேர்களை இறுக்கிப் பிடித்துக் கொள்வதால், மண்ணில் வளர்வதைப் போலவே செடிகள் நன்கு வளரும். பல்வேறு அளவுகளில் கிடைக்கும் தார்பாலின் பைகளையும் பயன்படுத்தலாம்.
மேலும் உடைந்த வாளிகள், அரிசி, சிமெண்ட் சாக்குகள், மண் தொட்டிகள் என, அவரவர் வாழும் சூழலில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தலாம். மொட்டை மாடியில் நீர் போகும் வழியை அடைக்காமல் அமைக்க வேண்டும். கைப்பிடி சுவரை ஒட்டி அமைக்காமல், நான்கு புறமும் சென்று வர ஏதுவாக அமைக்க வேண்டும். செடிகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். அடர்த்தியாக இருந்தால் சத்துகளை எடுப்பதில் செடிகளுக்குள் போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.
செடிகளைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளைக் கட்டுப்படுத்த, 3% வேப்ப எண்ணெய்க் கரைசலைக் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். எறும்பைக் கட்டுப்படுத்த தூள் மருந்தை இடாமல், மேசை உப்பைக் கோடு போலத் தூவி விட்டால் போதும். பூச்சிகளைச் சாப்பிட்டுப் பயிர்களைக் காக்கும் பல்லி, சிலந்தியைக் கட்டுப்படுத்த வேண்டாம். தேவைக்கு ஏற்ப, பூவாளி அல்லது சொட்டுநீர்க் கருவி மூலம் நீரைத் தரலாம்.
செடிகள் தேர்வு
வீட்டுத் தோட்டத்துக்கு நாட்டுக் காய்கனிகள் மிகச் சிறந்தவை. வெண்டை, கொத்தவரை விதைகளைச் சிறிய பைகளில் நடலாம். கத்தரிக்காய், மிளகாய், தக்காளியை நாற்று மூலம் நட வேண்டும். அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் விதைகளை, பெரிய பை அல்லது 20 லிட்டர் வாளிகளில் நடலாம். இவற்றில், அவரை, புடலங்காய், பாகற்காய்க் கொடிகளைப் பந்தலில் படரவிட வேண்டும்.
மாதுளையை 50 லிட்டர் அளவுள்ள நெகிழிப்பை அல்லது 50 லிட்டர் டிரம்மில் வளர்க்கலாம். முருங்கை, கொய்யா, வாழையை 75-100 லிட்டர் டிரம்களில் வளர்க்கலாம். நெகிழித் தட்டுகளில் கொத்தமல்லி, புதினா, பாலாக்கீரை, காசினிகீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை, வல்லாரை, பொன்னாங்கண்ணி, மிளகு தக்காளிக் கீரை, ஆகியவற்றைப் பயிரிடலாம். புதினா, பொன்னாங் கண்ணியை அவற்றின் தண்டுகளை நட்டு உற்பத்தி செய்யலாம். வல்லாரையை வேர்கள் மூலம் உற்பத்தி செய்யலாம்.
எல்லாக் காய்கறிகளையும் வீட்டுத் தோட்டத்தில் பெற முடியாது என்றாலும், அன்றாடம் தேவைப்படும் முக்கியக் காய்கறி, கீரை, பழங்களை வீட்டுத் தோட்டம் மூலம் பெற முடியும். நமது வீட்டில் இருக்கும் மண், தட்ப வெட்ப நிலை, நீர் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கீரைகள், காய்கறிகள், பழங்கள் என, நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுப் பொருள்களைப் பெறலாம்.
இந்த வீட்டுத் தோட்டத்தை அமைப்பதில் வீட்டிலுள்ள குழந்தைகளை ஊக்கப் படுத்தலாம். இதன் மூலம் பயனற்ற வழிகளில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, பயனுள்ள வாழ்வியல் பழக்கத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ,
உதவிப் பேராசிரியை, முனைவர் ந.ஆனந்தராஜா, திட்ட ஒருங்கிணைப்பாளர், தே.சபரிகுமார், வேளாண்மை அறிவியல் நிலையம், பொங்கலூர், திருப்பூர்-622667.