கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
மாடு ஈன்ற சிலமணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேற வேண்டும். ஆனால், ஒருசில மாடுகளில் நஞ்சுக்கொடி விழாமல் இருக்கும். அல்லது கால தாமதமாக விழும். இத்தகைய சமயத்தில் முறையான கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். இதை மீறி, கறவை மாட்டின் உரிமையாளர்களே நஞ்சுக்கொடியை அகற்ற முயல்வது அல்லது தகுதியற்றவர்களின் உதவியை நாடுவது, கறவை மாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
தகுதியற்றவர்கள் நஞ்சுக்கொடியை அகற்றக் கையாளும் முறைகளால், கருப்பையில் புண் உண்டாகிச் சீழ்ப் பிடித்துப் பிறப்புறுப்பு வழியே வழியும். இதனால் ஏற்படும் வலியில் மாடு உண்ணுவதில் நாட்டம் கொள்ளாது. ஆகையால், பாலுற்பத்தி பாதிக்கும். மேலும், தொடர்ந்து வழியும் சீழ், மாட்டின் மடியில் பட்டால் மடிநோய் வரலாம். இதனாலும் பாலுற்பத்தி கடுமையாகப் பாதிக்கும். மடிநோயைத் தீர்க்கவும் போராட வேண்டும். கருப்பையில் இருக்கும் காட்டிவிடன் என்னும் விதைகளையும் நஞ்சுக்கொடியுடன் சேர்த்து எடுத்து விட்டால், அடுத்துச் சினைப்பிடிக்கும் தன்மையை மாடு இழக்க நேரிடும்.
நஞ்சுக்கொடி என்பது, கருப்பையையும், அதிலுள்ள கன்றையும் தாயுடன் இணைக்கும் உறுப்பாகும். இது பொதுவாக, மாடு ஈன்று 8-10 மணி நேரத்தில் தானாக வெளியேறி விடும். அப்படி விழாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கன்று வீச்சு (அபார்ஷன்) நோயால் பாதிக்கப்பட்ட மாட்டில், நஞ்சுக்கொடி தானாக வெளியேறாது.
ஈற்றின் போது கருப்பையில் கையை விட்டுத் தவறான முறையில் கன்றை வெளியே எடுப்பது, கன்று பிறந்ததும் தாயிடம் சீம்பாலைக் குடிக்க விடாமல் இருப்பது போன்றவற்றாலும் நஞ்சுக்கொடி வெளியேறாமல் கருப்பையிலேயே தங்கிவிடும். சினைக்காலத்தின் கடைசி இரண்டு மாதங்களில் சரிவிகிதத் தீவனத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், நஞ்சுக்கொடி முறையாக விழாது.
இந்தநிலை ஏற்படாமலிருக்க, சினை மாடுகளை மருத்துவரிடம் காட்டிச் சோதித்துக் கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் கட்டியே வைக்காமல், அவ்வப்போது கொஞ்ச தூரம் நடக்க விட வேண்டும். பச்சைத் தீவனத்தை நிறையக் கொடுக்க வேண்டும். ஈனும் வரையில் கறவை மாட்டின் பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நஞ்சுக்கொடி விழத் தாமதமானால், கால்நடை மருத்துவரின் உதவியைத் தான் நாட வேண்டுமே தவிர, நமக்குத் தெரிந்ததைச் செய்து பார்ப்போம் என்று எதையாவது செய்யக் கூடாது. மேலும் விவரங்களுக்கு 94864 69044 என்னும் எண்ணில் பேசலாம்.
மரு.வி.இராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை,
நத்தம், திண்டுக்கல் மாவட்டம்.