சிறுதானிய உணவுகளும் அவற்றின் பயன்களும்!

சிறுதானிய உணவு

சிறுதானிய வகைகளை உணவாகக் கொண்டதால் தான், நமது முன்னோர்கள் நலமாக வாழ்ந்தனர். சத்துமிகு சிறுதானிய உணவே, அவர்களின் உடல் நலம் காக்கும் மருந்தாக விளங்கியது.

ஆனால், இன்றைய இளைய தலைமுறை மக்கள், உணவே மருந்து என்னும் நிலையில் இருந்து, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதற்கு, மாறிவரும் உணவுப் பழக்கமே காரணம்.

இந்த நிலையில் இருந்து மீள வேண்டுமெனில், நோய் எதிர்ப்பு ஆற்றல், உயிர்ச் சத்துகள் மற்றும் உடல் நலத்துக்கு வேண்டிய அனைத்துச் சத்துகளும் நிறைந்த சிறுதானிய உணவுகளை, நமது அன்றாட உணவில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

சிறுதானியங்களும் பயன்களும்

கம்பு, சோளம், தினை, வரகு, சாமை, கேழ்வரகு, பனிவரகு ஆகியன சிறுதானிய வகையில் அடங்கும். இன்றைக்கும் கிராமங்களில் சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்வோரின் உடல் நலம் சிறப்பாக உள்ளது. நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் போன்றவை ஏற்படுவதில்லை.

கம்பு: இதில், புரதம், சுண்ணாம்பு, நார்ச்சத்து பாஸ்பரஸ் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. எனவே, நம் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும். பிற சிறு தானியங்களில் இருப்பதை விட, கம்பில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது, உடல் வெப்பம் சம நிலையில் இருக்க உதவும்.

மேலும், வேண்டாத கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். பாலூட்டும் தாய்மார்களின் பால் உற்பத்தி மற்றும் உடல் வலிமையைக் கூட்டும்.

சோளம்: இதில், உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன. சோள உணவு உடலுக்கு உறுதியைத் தரும். உடல் கனம், வயிற்றுப் புண் போன்றவற்றுக்கு இடமளிக்காத சோள உணவு, வாய் நாற்றத்தைப் போக்கும். ஆனால், சோள உணவு, மூல நோயாளிகளுக்கு ஒத்துக் கொள்ளாது.

கேழ்வரகு: தானியங்களில் அதிகச் சத்துமிக்கது கேழ்வரகு தான். இதற்கு, இராகி என்னும் பெயரும் உண்டு. தாதுப்பு, கால்சியம், மக்னீசியம், சுண்ணாம்பு, இரும்புச்சத்து மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. உடல் வெப்பம் சம நிலையில் இருக்க உதவும், குடலுக்கு வலிமை தரும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவு.

தினை: இது, சிறு தானியங்களில் முக்கியமானது. உயிர்ச்சத்து மிகுந்தது. உடலுக்கு பலவித நன்மைகளைச் செய்வது. கால்சியம், புரதம், இரும்பு, நார்ச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால், மறதி நோய் என்னும் அல்சைமர் தீவிரமாகாமல் தடுக்க உதவுகிறது, இதயத்துக்கு பலம் சேர்க்கும் தானியம்.

வரகு: இதில், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

சாமை: அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சார்ந்த அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும். ஆண்கள் விந்து உற்பத்திக்கும், ஆண்மைக் குறையை நீக்கவும் உதவும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

பனிவரகு: இது, குளிர்காலப் பனியிலேயே விளையக் கூடியது. எனவே, இப்பயிரைப் பனிவரகு என்பர். குறுகிய காலப் பயிரும் கூட. இதில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாதுப்புகள், மாவுச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இது, உடல் சர்க்கரையைக் குறைக்கும், கல்லீரலில் உருவாகும் கற்களைக் கரைக்கும்.

குதிரைவாலி: ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. எலும்பு வலிமைக்கு, நீரிழிவு நோய்க்கு, பார்வைக் குறையைத் தடுக்க மற்றும் உடல் எடையைக் குறைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

சோள அரிசி, கம்பரிசி, கேழ்வரகு அரிசி, தினையரிசி, சாமையரிசி, வரகரிசி, பனிவரகு அரிசி மற்றும் குதிரைவாலி அரிசி. இவற்றை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்? பயன்படுத்தி இருப்போம்?நம் மண்ணுக்கே உரித்தான சிறு தானியங்களைத் தொலைத்து விட்டதால், நம் உடல் நலத்தையும் தொலைத்து விட்டோம். இனியேனும், நம் பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்பி, சிறுதானிய உணவுகளை உண்போம், உடல் நலம் பேணுவோம் என்னும் உறுதியை ஏற்போம்.

சிறு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், அவற்றைச் சந்தைப்படுத்துவதிலும் நேரடியாக ஈடுபட்டால் தான் அதிகமான இலாபத்தை ஈட்ட முடியும். சிறுதானியங்களின் முக்கியம் கருதியே, 2018 ஆம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாகவும், 2023 ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும் அறிவித்தனர்.

எனவே, விவசாயிகள் சிறு தானியங்களை அதிகளவில் பயிரிட வேண்டும். மீண்டும் மக்கள் அனைவரும் சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் பயன்படுத்தி, உடல் நலம் காக்க வேண்டும்.

நான், ஐதராபாத்தில் உள்ள, இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய பயிற்சியில் பங்கேற்றுச் சான்று பெற்றுள்ளேன். இந்த நிறுவனம் வழங்கும் பயிற்சிகளில், சிறுதானியத் தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்வது, தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். மேலும், இந்த நிறுவனம் மூலம் வழங்கப்படும் தொகுப்பு நிதியைப் பெற்றும் பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு: இயக்குநர், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், இராஜேந்திர நகர், ஐதராபாத். தொலைபேசி: 0402 – 4599382.


மா.சௌந்தர்ராஜன், வேளாண்மை அலுவலர், நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!