குமிழ் மரம்!

குமிழ் மரம் வெர்பனேசி என்னும் தேக்கு வகையைச் சார்ந்தது. மெலினா ஆர்போரியா என்பது, இதன் தாவரவியல் பெயர். இதன் தாயகம் இந்தியா. இம்மரம், பர்மா, தாய்லாந்து, லாவோ, கம்போடியா, வியட்நாம், சீனத்தின் தெற்கு மாநிலங்களில் இயற்கைக் காடுகளில் உள்ளது. மேலும், சியாரா, நைஜீரியா, மலேசியா ஆகிய நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரமுள்ள எல்லா இடங்களிலும் இயற்கையாக, வேகமாக வளரும் இலையுதிர் மரமாகும். கொஞ்சம் நீர் இருந்தாலே போதும். முப்பது மீட்டர் உயரம் மற்றும் 1.2 அடி முதல் 4 அடி கனம் வரை வளரும்.

களிமண் நிலத்தில் நன்றாக வளரும். தொடர்ந்து நீர்த் தேங்கும் நிலத்தில் வளராது. வரப்பு மற்றும் வாய்க்கால் ஓரத்தில் நட்டு வளர்க்கலாம். நிறைய இலைகளுடன் மரம் அழகாக இருக்கும். கீழே விழும் இலைகள் மட்கி மண்ணுக்கு உரமாகும்.

வறட்சியைத் தாங்கி வளரும் இம்மரம், 7-8 ஆண்டுகளில் முதிர்ந்து பயனைத் தரும். இம்மரங்களை வெட்டியதும் முளைக்கும் போத்துகள் 5-6 ஆண்டுகளில் முதிர்ந்து பயனைக் கொடுக்கும். இம்மரத்தைக் காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கலாம்.

மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். ஆறு ஆண்டுகளில் முழுமையாகப் பூக்கும். இப்பூக்களில் தேன் அதிகமாக இருக்கும். எனவே, குமிழ்மரத் தோப்பில், தேனீக்களை வளர்த்துக் கூடுதல் வருமானம் பெறலாம்.

குமிழ் வளர்ப்பில் முக்கியமான இரண்டு உத்திகள் பாசனம் மற்றும் கவாத்து. 20 அடி உயரம் வரையில் கவாத்து செய்ய வேண்டும். அடுத்துத் தேவையில்லை. அதைப் போல, முறையான பாசனம் அவசியம். ஆறடி இடைவெளியில் ஏக்கருக்கு 1,200 கன்றுகளை நடலாம்.

இவற்றில் பாதி மரங்களை 3-4 ஆண்டுகளில் வெட்டி வருமானம் பெறலாம். அடுத்து, 7-8 ஆண்டுகளில் மீதமுள்ள மரங்களை வெட்டி வருமானம் பார்க்கலாம். அடர் நடவு முறையில் 1,200 குமிழ் மரங்கள், 600 சந்தன மரங்கள், 600 அகர் மரங்களை ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்க்கலாம்.

7-8 ஆண்டுகள் முறையாக வளர்த்தால், ஒரு குமிழ் மரத்தில் இருந்து 18 கன சதுர அடி பலகை கிடைக்கும். இந்தப் பலகை 30 ஆண்டுகள் வரையில் நீடித்து உழைக்கும். மரத்தின் உட்பகுதி இள மஞ்சளாக இருக்கும். நன்கு விளைந்த தேக்கு மரத்தைப் போலவே, 7-8 ஆண்டுகள் விளைந்த குமிழ் மரத்தின் உறுதித் தன்மையும் இருக்கும்.

மரப் பொருள்கள் தயாரிப்பில் இது முக்கியமாகப் பயன்படுகிறது. கைவினைப் பொருள்கள், மரச் சாமான்கள், கிரிக்கெட் மட்டை, சன்னல், கதவு நிலைகள் மற்றும் செயற்கைக் கை, கால்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. குமிழ் இலைகள் பட்டுப்புழு உணவாக, கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

ஒரு கிலோ குமிழ் விதைகளின் விலை சுமார் 750 ரூபாய். ஒரு கிலோ எடையில் ஆயிரம் விதைகள் இருக்கும். 15 ஆண்டுகள் வளர்ந்த மரத்தில் இருந்து சுமார் 10 கிலோ விதைகள் கிடைக்கும்.

இவ்வகையில் ஒரு மரம் தரும் வருமானம் 7,500 ரூபாய். விதைக்காக நூறு மரங்களை வளர்த்தாலே ஆண்டுக்கு 7.5 இலட்ச ரூபாயை வருமானமாக அடையலாம். குமிழ்மர வளர்ப்புக்கு மத்திய அரசு 50 சதம் மானியம் வழங்குகிறது.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!