சாகுபடி உத்திகள் எனப் பல இருந்தாலும், மூலிகை சாகுபடியில் மேலும் சில முறைகளைக் கட்டாயம் கையாள வேண்டும். மூலிகை சாகுபடி நிலத்தில், பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் உப்பு, அமிலம் மற்றும் நச்சுத் தன்மை இருக்கக் கூடாது.
கல்லறைகள், பிணங்களை எரிக்கும் இடங்களுக்கு அருகில் மூலிகை சாகுபடி நிலம் இருக்கக் கூடாது. ஏனெனில், இத்தகைய இடங்களில் மண்வளம் கடும் பாதிப்பில் இருக்கும். மேலும், தீ எரிந்த மண்ணில் எந்தப் பயிரும் முறையாக வளராது.
நீர்ப்பிடிப்புத் திறன், மண் செறிவு, உயிர்த் தன்மை ஆகிய முக்கிய பௌதிகக் குணங்கள் நிலத்தில் இருக்க வேண்டும். மண்ணுக்கு வளம் சேர்க்கும் இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் இடப்பட்ட நிலமாக இருப்பது நல்லது.
சாகுபடியின் முதல் முப்பது நாட்களில், களைகள் வராமல் இருக்க வேண்டும். மண் மற்றும் நீர் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உரங்களை இட வேண்டும். வளமான நிலத்தில் நலமாக வளரும் சூழலில் தான், முழுச் சத்துகள் அடங்கிய மூலிகைகள் கிடைக்கும்.
நகர்ப்புறக் கழிவுகள் மூலம் கிடைக்கும் கம்போஸ்ட் உரத்தை, மூலிகைப் பயிர்களுக்கு இடவே கூடாது. பச்சைச் சாணம் அல்லது ஆட்டுப் புழுக்கையை நேரடியாக இடக்கூடாது.
மட்காத மிருகக்கழிவு மற்றும் மட்கிய மனிதக் கழிவை, மூலிகைப் பயிருக்கு இடக்கூடாது. மேலும், மூலிகைகள் வளரும் நிலத்தில் மனிதர்கள் மலம் கழிக்கவும் விடக்கூடாது.
மூலிகைப் பயிரின் எந்தப் பகுதியைப் பயன்படுத்த நேர்ந்தாலும், அதைப் பாதிக்கும் கூறுகளைத் தவிர்க்க வேண்டும். மண்ணை ஆய்வு செய்ய மாதிரிகளை அனுப்பும் போது, அவற்றின் சத்து வேறுபாடுகள் மட்டுமின்றி, அவை நஞ்சாக மாறிடும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, முறையான தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பெற்று, மூலிகைப் பயிர்களைப் பயிரிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 98420 07125.
முனைவர் பா.இளங்கோவன், மேனாள் வேளாண் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு.