எலிகளால் ஏற்படும் தொல்லைகள்!

லிகளில், எல்லாப் பயிர்களையும் தின்று நாசம் செய்யும், சுண்டெலி, புல் எலி, இந்திய வயல் எலி, கறம்பெலி, பெருச்சாளி போன்ற வகைகள் உள்ளன.

இவை, வயல்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் வீடுகளில் உணவுப் பொருள்களை நாசம் செய்கின்றன. நன்கு வளர்ந்த எலி, தினமும் 36 கிராம் உணவுப் பொருளைத் தின்று விடும்.

சேதம்

நெல் விதைப்புத் தொடங்கி அறுவடை வரையில் எலிகளால் மிகுந்த சேதம் ஏற்படுகிறது. வயலில் ஒரு எலி, தினமும் சுமார் 100 தூர்களைக் கடித்து நாசம் செய்கிறது. கதிர் விளையும் போது ஆகும் சேதம் அதிகம்.

பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்தில் 30 எலிகளுக்கு மேல் வசிக்கும். ஆனால், இரவில் உணவைத் தேடி 200-க்கும் மேற்பட்ட எலிகள் நடமாடும். மேலும், வரப்புகளில் வளைகளை அமைப்பதால், இவற்றின் வழியே பாசனநீர் வெளியேறி வீணாகும்.

வாழ்க்கை

ஒரு எலி இரண்டு ஆண்டுகள் வாழும். ஓராண்டில் 2-3 முறை ஈனும். ஒவ்வொரு முறையும் சராசரியாக 12 குட்டிகளைப் போடும். குட்டிகள் பிறந்த பத்து நாட்களில், அவற்றின் வாயில் உளியைப் போன்ற கூரிய பற்கள் வளரத் தொடங்கும்.

இப்பற்கள் ஆண்டுக்கு 5-6 அங்குலம் வளரும். இப்படி வேகமாக வளரும் பற்களை, பயிர்களைக் கடித்தும், ஏதாவது பொருளைக் கடித்தும் குறைக்கும். எலிகள், நிலத்தில் கீழ்நோக்கி ஆழமாக வளைகளை அமைத்து வாழும்.

ஒவ்வொரு வளையிலும் உணவறை, படுக்கையறை, வளர்ப்பு அறை என, பல அறைகள் இருக்கும். நெருக்கடி நேரத்தில் தப்பிச் செல்வதற்கு, கள்ளவழி அல்லது அவசர வழியும் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

எலிகளை முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால், சில முறைகள் மூலம், அவற்றின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். அதாவது, அறுவடைக்குப் பிறகு வரப்புகளை வெட்டி எலிகளை அழிக்கலாம். திடல்களில் உள்ள செடிகள், புதர்களை அகற்றி, எலிகளுக்கு வாய்ப்பான நிலையைத் தடுக்கலாம்.

இரவில் விளக்குகள் மூலம் புல் எலிகளைப் பிடித்து அழிக்கலாம். நெற்பயிர் நடவு முடிந்து 20-30 நாளில் இருந்து, தஞ்சாவூர் வில்பொறி என்னும் மூங்கில் கிட்டிகளை, ஏக்கருக்கு 40 வீதம் வைத்து, எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

களைகள் மிகுந்த வயலில், எலிகளும் அவற்றின் சேதமும் அதிகமாக இருக்கும். எனவே, வயலில் களைகள் இருக்கக் கூடாது. எலிகள் வயலுக்கு அருகிலுள்ள திடல்களில் தங்கி, இனவிருத்தி செய்யும். எனவே, அங்குள்ள வளைகளையும் எலிகளையும் அழிக்க வேண்டும்.

நெற்பொரி 49 பங்கு, எலி மருந்து என்னும் ஜிங்க் பாஸ்பைடு ஒரு பங்கு எடுத்து, கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யில் கலந்து, எலி வளைகள் அருகிலும், நடமாடும் இடங்களிலும் வைத்தால், இதை உண்ணும் எலிகள் சில நாட்களில் இறந்து விடும்.

எலி வளைகளில் அரை கிராம் அலுமினிய பாஸ்பைடு மாத்திரைகளை இட்டு, அவற்றின் துளைகளை ஈர மண்ணால் மூடி விட்டால், அங்கே உருவாகும் நச்சு வாயுவால் எலிகள் இறந்து போகும். தயார் நிலை ப்ரோமோ டையலான் வில்லையை, ஒரு வளைக்கு அரை வீதம் வைத்தும், எலிகளை அழிக்கலாம்.

இப்படி, உழவர்கள் எலிக் கட்டுப்பாடு இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், எலிகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியும்.


முனைவர் கோ.சீனிவாசன், மூ.சாந்தி, ஜெ.ஜெயராஜ், வேளாண் பூச்சியியல் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!