நிலக்கடலையில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

முக்கியமான எண்ணெய் வித்துப் பயிரான நிலக்கடலை, கோடையில் ஜூன் ஜூலையிலும், கார்த்திகைப் பட்டத்தில் நவம்பர், டிசம்பரிலும் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தினால், கூடுதல் மகசூலைப் பெற்று இலாபம் அடையலாம்.

ஜிப்சம் இடுதல்

ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45 நாளில் பாசனப் பயிருக்கும், 40-75 நாளில் மானாவாரிப் பயிருக்கும், செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத் தன்மையைப் பொறுத்து ஜிப்சத்தை இட வேண்டும். நிலத்தைக் கொத்தி ஜிப்சத்தை இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

கால்சியம் மற்றும் கந்தகக் குறையுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை, இரசாயன உரங்களுடன் கலந்து அடியுரமாக இட்டால், மானாவாரி மற்றும் இறவைப் பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

சத்துக் கலவைத் தெளிப்பு

பெரிய பருப்புகளைக் கொண்ட இரகங்களில், காய்களில் பருப்பின் வளர்ச்சிக் குறைபாடு என்பது பெரிய சிக்கலாக உள்ளது. இதைத் தவிர்த்து நன்கு விளைந்த பருப்புகளைப் பெறுவதற்குப் பல சத்துகளைக் கலந்து தெளிக்க வேண்டும்.

இந்தக் கலவையைத் தயாரிக்க, டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்காரம்) 0.5 கிலோவை, 37 லிட்டர் நீரில் ஒன்றாகக் கலந்து இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.

மறுநாள் காலை, இந்தக் கலவையை வடிகட்டினால், 32 லிட்டர் வரை தெளிந்த சத்துநீர் கிடைக்கும். இதை 468 லிட்டர் நீருடன் சேர்த்து 500 லிட்டராக ஆக்க வேண்டும். தேவைப்பட்டால் இத்துடன் 350 மில்லி பிளானோபிக்சைச் சேர்த்து, விதைத்த 25 மற்றும் 35 நாளில் தெளிக்க வேண்டும்.


முனைவர் வெ.செ.மைனாவதி, கால்நடை உணவியல் நிலையம், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203, செங்கல்பட்டு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!