மண்புழு உரம்: எந்தப் பயிருக்கு எவ்வளவு தேவை?

ண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையேல், அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர் பாலி எத்திலின் பைகளில் சேமிக்கலாம்.

சேமிப்புக் கிடங்கின் வெப்பநிலை மிகாமலும், ஈரப்பதம் 20-40 சதத்துக்குள் இருக்க வேண்டும். இதனால், தரம் குறையாமல் 3-5 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பரிந்துரை அளவு

மண்புழு உரம், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் நிறைந்த இயற்கை உரம். இதை இரசாயன உரங்களில் கலந்து இட்டால், அதிலுள்ள நுண்ணுயிர் வளர்ச்சி, நொதிகளின் செயல் திறன் பாதிக்கப்படும். எனவே, இதை அடியுரமாக இட்டுச் சில நாட்கள் கழித்து, இரசாயன உரங்களை இட வேண்டும்.

மண்புழு உரத்தில் நுண்ணுயிர் உரங்களைச் சேர்த்து இட்டால், இதன் பயனை பயன் முழுதாகக் கிடைக்கும். நுண்ணுயிர்களின் சிறந்த உணவாக மண்புழு உரம் இருப்பதால், அவை பெருகிப் பயிர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

மண்புழு உரத்தில் தழைச்சத்து, காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிறுத்தும் நுண்ணுயிர்கள், பயிர்களுக்குக் கிடைக்காத தழைச்சத்தை, பயிருக்குக் கிடைக்கச் செய்யும் நுண்ணுயிர்கள் உள்ளன.

இவை, தழைச்சத்து உரங்களான யூரியா, அம்மோனியம் குளோரைடின் தேவையை ஈடு செய்கின்றன. ஏக்கருக்கு 5 டன் மண்புழு உரத்தை இட வேண்டும் என்றாலும், இந்த அளவு, மண் மற்றும் பயிரைப் பொறுத்து மாறுபடும்.

மண்புழு உரத்தால் காய்கறிப் பயிர்களில் பூச்சி, நோய்களின் தாக்கம் குறைந்து மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது. காய்கறிகள் தரமாக, சுவையாக இருப்பதால் நல்ல விலையும் கிடைக்கிறது.

பாகல், வெண்டை, கத்தரி சாகுபடியில், ஏக்கருக்கு 5 டன் மண்புழு உரத்தை இட்டால், இட வேண்டிய இரசாயன உரங்களில் பாதியைக் குறைத்து இடலாம்.

ஒரு ஏக்கருக்கு வேண்டிய அளவு

சிறுதானியப் பயிர்கள்: 2 டன்,

பயறுவகைப் பயிர்கள்: 2 டன்,

எண்ணெய் வித்துகள்: 3-5 டன்,

நறுமணப் பயிர்கள்: 4 டன்,

காய்கறிப் பயிர்கள்: 4-6 டன்,

பழ மரங்கள்: மரத்துக்கு 2-3 கிலோ வீதம், ஆண்டுக்கு இருமுறை,

மலர்ப் பயிர்கள்: 4 டன்,

அழகுப் பயிர்கள்: 5 டன்,

தென்னை: மரத்துக்கு 5 கிலோ.

இடும் முறை

தென்னை மற்றும் பழ மரங்களில், மரத்தைச் சுற்றி ஒரு அடி தள்ளி 15-20 செ.மீ. ஆழத்தில், சிறிதளவு காய்ந்த மாட்டுச் சாணம் மற்றும் மண்புழு உரத்தைக் கலந்து இட்டு மண்னால் மூடிவிட வேண்டும். அல்லது பண்ணைக் கழிவாலும் மூடி விடலாம்.

இதனால் மகசூல் கூடும், பாசனநீர் மிச்சமாகும். தொட்டியில் வளரும் அழகுச் செடிகளுக்கு மாதந்தோறும் 250-500 கிராம் மண்புழு உரத்தை இட வேண்டும். கொய் மலர்களான ஆந்தூரியம், ஆர்கிட், கிளாடியோலஸ் மற்றும் ரோஜா செடிக்கு 100-200 கிராம் இட வேண்டும்.

மண்புழு உரத்தில் நுண்ணுயிர் உரங்களைக் கலத்தல்

நெல், சோளம், கம்பு, இராகி: 500 கிலோ + 25 கிலோ அசோஸ் பயிரில்லம்.

கரும்பு, இதர பணப் பயிர்கள்: 1000 கிலோ + 50 கிலோ அசோஸ் பயில்லம்.

திராட்சை, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, காபி: மரத்துக்கு 2.5 கிலோ + தலா 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் பயிரில்லம்.

தென்னை, மா, பலா: மரத்துக்கு 2.5 கிலோ + தலா 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் பயிரில்லம்.

வாழை: மரத்துக்கு 1-2 கிலோ + 25 கிராம் பாஸ்போ பாக்டீரியா.

அழகு மற்றும் குரோட்டன் செடி: செடிக்கு 250 கிராம் + 25 கிராம் அசோஸ் பயிரில்லம்.

பூச்செடி, வெற்றிலைக் கொடி: செடி அல்லது கொடிக்கு 250 கிராம் + 25 கிராம் அசோஸ் பயிரில்லம்.

இயற்கைச் சூழலைப் பாதிக்காமல், தொடர்ந்து சீரான மகசூலைத் தருவதில் மண்புழு உரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழுவுரம், பசுந்தாள் உரம் மற்றும் மட்கிய இயற்கை உரங்களுக்கு மாற்றாக, மண்புழு உரத்தை இட்டால், 25-50 சத இரசாயன உரங்களைக் குறைத்து விடலாம்.


SUDHAKAR

முனைவர் கு.சுதாகர், சு.தாவீது, முனைவர் எ.முருகன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!