மலச்சிக்கல் தீர பூவன், மொந்தன்; உடல் எடை குறைய கற்பூரவள்ளி!

வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்று என்னும் சிறப்புக்கு உரியது. இந்த வாழைப் பழத்தில் பல இரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வாழையும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் நலத்துக்கு உதவுகிறது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பூவன் வாழைப் பழத்தில், தாதுப்புகள் எல்லாமே உள்ளன. உயிர்ச் சத்துகள் ஏ, பி, சி, டி உள்ளன. இதிலுள்ள சிறு புளிப்புத் தன்மையால் உடற்சூடு தணியும். சிறந்த மலமிளக்கியாக இருப்பதால் மலச்சிக்கல் தீரும். அதனால், மூலத்துக்கும் மருந்தாகும்.

மொந்தன் வாழைப் பழத்தில் அனைத்து உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடல் பருமனைத் தடுக்கும். மஞ்சள் காமாலை, மூல நோயைத் தடுக்கும்.

கற்பூரவள்ளிப் பழத்தில், செரட்டோனின், எபிஎனப்ரின் மற்றும் கரையும் சத்துகள் உள்ளன. இதைச் சாப்பிட்டால், நன்றாகச் செரிக்கும். உடற்சூடு தணியும். உடல் எடை குறையும். நரம்புகளுக்கு வலிமை கிடைக்கும்.

இரஸ்தாளிப் பழத்தில், வைட்டமின் பி6, பொட்டசியம், சோடியம், நார்ச்சத்து சிஹச்ஓ ஆகிய சத்துகள் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடற்சோர்வு நீங்கும். மாவுச்சத்து அதிகமாக இருப்பதால் நன்றாகத் தூக்கம் வரும். பசி அடங்கும், நன்றாகச் செரிக்கும். மன அழுத்தம் குறையும்.

ரொபஸ்டா பழத்தில், வைட்டமின் ஏ-யும், இ-யும் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும். உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். அல்சர் தீரும். வெள்ளைப் படுதல் குறையும்.

செவ்வாழைப் பழத்தில், பீட்டா கரோட்டீன், உயிர்ச் சத்துகள் கே-யும், சி-யும் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடம்பில் நோயெதிர்ப்பு சக்தி கூடும். அதனால் உடல் பலமாகும்.

மூளை நன்றாக இயங்கும். தாதைக் கூட்டும். தொற்றுக் கிருமிகளைக் கொல்லும். சிறுநீரகக் கல் வருவதைத் தடுக்கும். மாலைக்கண் சரியாகும், குதிகால் வலி நீங்கும்.

நேந்திரன் பழத்தில், மாவுச்சத்து, புரதச்சத்து, பொட்டாசியம் ஆகியன உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். நன்றாகச் செரிக்கும்.

குடற் புழுக்கள் ஒழியும். மலச்சிக்கல் கட்டுப்படும்.

பச்சை நாடன் பழத்தில், நார்ச்சத்து, உயிர்ச்சத்து, தாதுப்புகள் ஆகியன உள்ளன. இதைச் சாப்பிட்டால், இதயம் வலுவாகும். உடல் எடை குறையும். குடற்புண் ஆறும். உடற்சூடு தணியும்.

பேயன் வாழைப் பழத்தில், எல்லா உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் உள்ளன. இது, குழந்தைகளுக்கு ஏற்ற முதல் உணவு. பித்த நோய் குணமாகும். இரத்தம் பெருகும்.

மட்டி வாழைப் பழத்தில், பொட்டாசியம் அதிகமாக உள்ளது. புரதமும் உப்பும் குறைவாக உள்ளன. இதை விடாமல் சாப்பிட்டு வந்தால், இரைப்பை, குடல் கோளாறு, அல்சர் குணமாகும். சிறுநீரகச் சிக்கல் சரியாகும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!