மனித உணவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல சத்துகளை தரக் கூடியவை பழங்கள் மட்டுமே. இப்பழங்கள், வெப்ப மண்டல, மிதவெப்ப மண்டல, குளிர்ப் பகுதிகளுக்கு ஏற்ப பிரிக்கப்படுகின்றன.
மேலும், இந்தப் பழங்கள் அறுவடைக்குப் பின் பழுப்பவை மற்றும் அறுவடைக்குப் பின் பழுக்காதவை என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
மா, கொய்யா, வாழை, சப்போட்டா, பப்பாளி, அத்தி, ஆப்பிள், கிவி, பேரிக்காய் முதலிய பழங்கள் அறுவடைக்குப் பின் பழுக்கும் தன்மை வாய்ந்தவை. எனவே, இவற்றை, பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்து விற்றுவிட முடியும்.
அனைத்து விதமான பழங்களும் மரத்திலேயே பழுப்பதில்லை. அவற்றை அறுவடைக்குப் பிறகு பழுக்க வைக்க வேண்டும். பழங்கள் பழுக்கும் போது, எத்திலீன் வாயுவை வெளியிடும்.
பழுத்த பழங்கள் மென்மையாக இருப்பதால், இவற்றை வெகுதூரம் எடுத்துச் செல்வதும், அடிக்கடி கையாள்வதும் கடினமாக இருக்கும். நன்கு பழுத்த பழங்களை, அருகிலுள்ள சந்தைக்கு மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
பழங்களை விரைவாக, ஒரே மாதிரியாக, பழுக்க வைப்பதில் தொழிற் சாலைகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றன. தொழிற் சாலைகளில் பல்வேறு நவீன உத்திகள் மற்றும் வேதிப் பொருள்களைப் பயன்படுத்துவதில் நன்மைகளும் உள்ளன; தீமைகளும் உள்ளன.
விவசாயிகள் சிறிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பழங்களைப் பழுக்க வைக்கின்றனர். சாதாரணமாக, கால நிலையைப் பொறுத்து, பழங்களில் பழுத்தல் நிகழ்வு மாறுபடுகிறது. உதாரணமாக, மாம்பழமாக 5-6 நாட்களும், சப்போட்டா பழமாக 6-7 நாட்களும் ஆகும்.
பழுத்த பழங்களையும், பழுக்காத பழங்களையும், காற்றோட்டம் இல்லாத பெட்டியில் வைக்கும் போது, ஏற்கெனவே பழுத்த பழங்கள், எத்திலீன் வாயுவை வெளியேற்றி, பழுக்காத பழங்களை விரைவாகப் பழுக்க வைக்க உதவுகின்றன. இது, வீடுகளில் பின்பற்றும் சிறிய தொழில் நுட்பம் ஆகும்.
பழங்களைக் காற்றுப் புகாத அறையில் வைத்துப் புகை மூட்டத்தைப் போடுவதன் மூலம், அசிட்டிலீன் வாயு வெளியேறி, பழங்களை ஒரே சீராகப் பழுக்க வைக்க உதவுகிறது. நிறைய வணிகர்கள் இந்த முறை மூலம் பழுக்க வைக்கின்றனர். ஆனால், புகையைப் போடுவதால் பழங்களின் தரம் குறைந்து விடும்.
பழுக்காத பழங்களை ஒரே வரிசையில் வைத்து அதன்மேல் வைக்கோலைப் பரப்பி வைத்தால், ஒரு வாரத்தில் பழங்கள் பழுத்து விடும். இதைப் போல, பழங்களைப் பழுக்க வைக்கும் அறையில், எத்திலீன் வாயு நிறைந்த புட்டிகளை வைத்தால், 24-48 மணி நேரத்தில் பழங்கள் பழுத்து விடும்.
ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி எத்திரல் வீதம் கலந்த ஒரு சத எத்திரல் கலவையில், பழங்களின் காம்புப் பகுதியைத் துடைத்துக் காய வைக்க வேண்டும்.
பின்பு, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் செய்தித் தாளில் பழங்களைப் பரப்பி வைத்து, அவற்றின் மீது பருத்தித் துணியை மூடிவிட வேண்டும். இந்த முறையில் 2 நாட்களில் பழங்கள் பழுத்து விடும்.
ஐந்து லிட்டர் நீரில், 10 மில்லி எத்திரல் மற்றும் 2 கிராம் சோடியம் ஹைட்ராக்ஸைடு தூளைக் கரைத்து, அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பாத்திரத்தைப் பழம் பழுக்க வைக்கும் அறையில், பழங்களின் அருகில் வைத்து, காற்றோட்டம் இல்லாமல் அறையை மூடிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பழங்கள், 12-24 மணி நேரத்தில் பழுத்து விடும்.
அறுவடைக்குப் பிறகு தொழில் துறை தரத்துக்கு, பழங்களைப் பழுக்க வைக்க, பெரும்பாலும் கால்சியம் கார்பைடு பயன்படுகிறது. கால்சியம் கார்பைடு பயன்பாடு சில நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை, கால்சியம் கார்பைடு பயன்பாடு தடைச் சட்டத்தைக் (பிரிவு 44 அஅ) கொண்டு வந்துள்ளது.
நீரில், கால்சியம் கார்பைடைக் கரைக்கும் போது உற்பத்தியாகும் அசிட்டிலின் வாயு, செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைக்க உதவுகிறது. அசிட்டிலீன் வாயு நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதைக் குறைக்கிறது. ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் உடல் நலத்துக்குத் தீமை செய்யும்.
உலகம் முழுவதும் பெரும்பாலும் கையாளப்படும் எத்திலீன் பயன்பாடு பாதுகாப்பு மிக்கது. இந்த முறையில் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள நிலையில், பழங்களைப் பழுக்க வைக்கலாம்.
எத்திலீன் இயற்கை ஹார்மோன். அதனால் உடல் நலத்துக்குத் தீமை செய்யாது. எத்திலீன், பச்சையாக இருக்கும் பழத்தோலை, மஞ்சளாக மாற்றி, சுவை, மணம் மாறாமல் பழத்தின் மதிப்பைக் கூட்டுகிறது.
மற்ற முறைகளைக் காட்டிலும் எத்திலீன் முறையில் செலவு குறைவு. எத்திலீன் 3%க்கு மேல் கூடினால், வெடிக்கும் அல்லது எரியும். காற்று இல்லாத அறையில், நிலையான வெப்ப நிலையில், பழங்களை வைக்க வேண்டும். பெரும்பாலான பழங்களுக்கு, 18-21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், மாவுக்கு 29-31 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் தேவை.
எத்திலீன் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்று, எத்திலீன் வாயுவை ஓர் அறையில் 10/ul லிட்டர் அளவில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும்.
அதற்குப் பிறகு, கார்பன் டை ஆக்ஸைடு 1%க்கு மேல் கூடாமல் இருக்க, அறையில் காற்றோட்டத்தை உண்டாக்க வேண்டும். நன்கு துளையிட்ட கர்டன்களைக் கொண்ட பெட்டியில் பழங்களை அடுக்கி, தேவையான காற்றை உருவாக்கி அறையைக் குளிரவிட வேண்டும். எத்திலீன் வாயு சீராக அறையில் பரவ, சிறிய மின் விசிறியைப் பயன்படுத்தலாம்.
இரண்டாவது முறை, சுத்தமான எத்திலீன் வாயுவைப் பயன்படுத்தும் முறையை விடப் பாதுகாப்பானது. எத்திலீன் வெளியிடும் எத்திப்பான் வாயு, தக்காளியைப் பழுக்க வைக்க உதவுகிறது. எத்திப்பானைத் தெளிக்கும் போது, எத்திலீன் அளவு கூடும். இதனால், கார அமிலத் தன்மை மற்றும் ஈரப்பதமும் கூடும்.
முனைவர் அ.பாரதி, உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.