பால் காளான் வளர்ப்பு!

மிழ்நாட்டில் வெப்ப மிதவெப்பப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்றது பால் காளான். இதன் தாவரவியல் பெயர் கேலோசைப் இன்டிகா. இக்காளான் வெண்மையாக, குடை போன்ற அமைப்பில் தடித்த தண்டுடன் இருக்கும்.

மிதமான வறட்சியைத் தாங்கி அதிக மகசூலைத் தரும் இந்தக் காளானை 5-8 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம். சுமார் 250 கிராம் வைக்கோல் காளான் படுக்கையில் 360 கிராம் காளான் கிடைக்கும்.

தகுந்த சூழ்நிலை

இக்காளான், 25-35 டிகிரி செல்சியஸ் வெப்பம், 85 சதம் காற்றின் ஈரப்பதம் இருந்தால் சிறப்பாக வளரும். இது, வறட்சியைத் தாங்கி வளர்வதால், 38 டிகிரி செல்சியஸ் வெப்பம், காற்றின் ஈரப்பதம் 75 சதம் உள்ள பகுதியிலும் வளர்க்கலாம்.

வகைகள்

பால் காளான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் மூலம், 1998 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் எம்.2, கோ.1, ஏபிகே.1, எம்டியு1, ஊட்டி 1 ஆகிய இரகங்கள், பிளியூரோட்டஸ் என்னும் சிப்பிக் காளான் வகையைச் சார்ந்தவை.

ஆனால், ஏபிகே2 பால் காளான், கேலோசைப் இன்டிகா என்னும் பூசணத்தைச் சார்ந்தது. இது, மொட்டுக் காளானைப் போல வெள்ளையாக இருக்கும். தண்டும், தலையும் சதைப் பிடிப்புடன் இருக்கும்.

தமிழ் நாட்டில் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் குறைந்த முதலீட்டில் இந்தக் காளானை வளர்க்கலாம். மொட்டுக் காளான் வளர்ப்பில் மட்கிய நெல் அல்லது கோதுமை வைக்கோல் பயன்படுகிறது.

ஆனால், பால் காளான் உற்பத்திக்கு வைக்கோலை மட்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. படுக்கையைத் தயாரித்த நாளிலிருந்து 24-28 நாட்களில் முதல் அறுவடை கிடைக்கும். ஒரு படுக்கை அறுவடை முடிய 45-50 நாட்களாகும்.

மொட்டுக் காளானை விடப் பால் காளானின் வயது குறைவாகும். ஒரு காளான் 55-60 கிராம் இருக்கும். பல நாட்கள் வரை கெடாமல் இருப்பதால் சேமிக்க, வெகுதொலைவு எடுத்துச் செல்ல, பால் காளான் மிகவும் ஏற்றது. இதில், 32.3 சதம் புரதம், 0.7 சதம் கொழுப்பு, 9.9 சதம் மாவுச்சத்து, 41.1 சதம் நார்ச்சத்து உள்ளன.

வளர்ப்பு முறை

உலர்ந்த வைக்கோல், மக்காச்சோளத் தட்டை, சோளம் மற்றும் கம்புத்தட்டை, பாம்ரோசா புல், வெட்டிவேர் புல், கரும்புச் சக்கை, சோயா பீன்ஸ் மற்றும் நிலக்கடலைச் செடியில் இதை வளர்க்கலாம். ஆனால், வணிக நோக்கில் வளர்க்க, நெல் வைக்கோல் தான் சிறந்தது.

காளான் வித்துத் தயாரிப்பு

சிப்பிக் காளானைப் போன்றே தாய் வித்து மற்றும் காளான் உற்பத்திக்குத் தேவையான படுக்கை வித்துகளைத் தயாரிக்க வேண்டும். சோளம், கம்பு அல்லது நெல்லில் தயாரிக்கப்பட்ட வித்துகள் 10-15 நாட்கள் வளர்ந்து வெண்மையாக இருக்கும்.

தரமான தாய்க் காளான் வித்துகளைப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், ஒரு தாய்வித்துப் புட்டி மூலம் 25-30 புட்டி வித்துகள் வீதம் தயாரித்து, காளான் வளர்ப்பைச் செய்யலாம்.

படுக்கைத் தயாரிப்பு

வைக்கோலை 5 செ.மீ. துண்டுகளாக நறுக்கித் தொற்று நீக்கம் செய்து, அடுக்கு முறையில் வித்துகளை இட்டு, உருளைப் படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும். பிறகு இவற்றைத் தென்னையோலைக் குடிலில் அடுக்குகளாக அல்லது உறியில் கட்டித் தொங்கவிட வேண்டும்.

அறையின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் காற்றின் ஈரப்பதம் 80%க்கும் கூடுதலாக இருக்க வேண்டும். இவற்றில், பால் காளான் பூசண இழைகள் படர 15 நாட்கள் ஆகும். இந்தப் படுக்கைகளை மேற்பூச்சுக் கலவையிட்டு, நெகிழிக் கூண்டில் வைக்க வேண்டும்.

மேற்பூச்சு மண் தயாரிப்பு

இதற்கு, சுண்ணாம்பு மற்றும் கார அமில நிலை 8.0 உள்ள, மணல் கலந்த கரிசல் மண் மிகச் சிறந்தது. இந்த மண்ணை ஒரு மண் தொட்டியில் இட்டு, இலேசாக ஈரப்படுத்தி 120 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், ஆவியழுத்த வெப்பமூட்டியில் 30 நிமிடம் வைத்துத் தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.

பின்பு, சுத்தமான இடத்தில் குளிர வைத்து மேற்பூச்சுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த மண்ணுக்குப் பதிலாகத் தென்னை நார்க் கழிவுத் தூளையும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ கழிவுடன் 20 கிராம் சுண்ணாம்புத் தூளைச் சேர்த்து, தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.

நெகிழிக் கூண்டில் படுக்கைப் பராமரிப்பு

நிழலான இடத்தில் உட்புறம் சரியாத அளவில் 2-3 அடி ஆழமுள்ள செவ்வகக் குழிகளைத் தோண்டி, உட்புறத்தைக் களிமண்ணால் பூச வேண்டும். தரைக்கு மேல் ஓரடி உயரத்தில் செங்கல் அல்லது மண் சுவரை அமைக்க வேண்டும்.

பிறகு, குழியின் மேற்பகுதியைக் கெட்டியான நீலநிற நெகிழித் தாளால் கூண்டை அமைக்க வேண்டும். இதற்குள் நல்ல காற்றோட்டம் கிடைக்க, சன்னல்களை அமைக்க வேண்டும். கூண்டுக்குள் நிலவும் வெப்பக் காற்றை வெளியேற்ற, மின்விசிறி இருக்க வேண்டும். கூண்டில் 1,600 முதல் 3,200 லக்ஸ் அளவில் வெளிச்சம் அவசியம்.

உருண்டை வடிவில் கெட்டியாக இருக்கும் காளான் படுக்கையை, இரு சம பாகமாக, குறுக்கு வாக்கில் வெட்டிப் பிரிக்க வேண்டும். இவற்றின் மீது 1-2 செ.மீ. உயரத்துக்கு மேற்பூச்சுக் கலவையைச் சமமாக இட்டு, கூண்டில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

மேற்பூச்சுக் கலவையில் 50-60 சதம் ஈரப்பதம் இருக்கும் வகையில் நீரைத் தெளித்து வர வேண்டும். இதனால், 8-10 நாட்களில் மேற்பூச்சின் மேல் வெந்நிறக் காளான் மொட்டுகள் அதிகளவில் தோன்றும். மேலும், அடுத்த 6-8 நாட்களில் பெரிய காளான்களாகி அறுவடைக்குத் தயாராகி விடும்.

நன்கு வளர்ந்த காளான் மொட்டுகளை, விரிவதற்கு முன்பே அறுவடை செய்துவிட வேண்டும். படுக்கை தயாரித்த 24-30 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம்.

அடுத்து, மேற்பூச்சுக் கலவையைக் கிளறி விட்டு, தொடர்ந்து நீரைத் தெளித்து வந்தால் அடுத்தடுத்த 10 நாட்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அறுவடையைச் செய்யலாம். மொத்தத்தில் 45-50 நாட்களில் மூன்று முறை மகசூல் கிடைக்கும். ஒரு அறுவடையில் ஒரு படுக்கையில் இருந்து 360 கிராம் காளான் கிடைக்கும்.


SUDHAKAR

முனைவர் கு.சுதாகர், சு.தாவீது, முனைவர் எ.முருகன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!