சக்கரவர்த்திக் கீரையின் பயன்கள்!

கீரைகள் அனைத்துக்கும் மன்னனைப் போலத் திகழ்வதால், இது சக்கரவர்த்திக் கீரை எனப்படுகிறது. இதற்குக் கண்ணாடிக் கீரை, பருப்புக் கீரை, சக்கோலி, சில்லிக்கீரை ஆகிய பெயர்களும் உண்டு.

இது, இந்தியாவில் இயற்கையாக வளர்கிறது. மேற்கு இமயமலைப் பகுதியில் கீரைக்காகத் தனிப்பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.

மணமற்ற குறுஞ்செடியான இது, 30-90 செ.மீ. உயரம் வரை செங்குத்தாக வளரும். பச்சை கலந்த சிவப்புத் தண்டுகளையும், நீண்ட காம்பைக் கொண்ட கருஞ்சிவப்பு இலைகளையும் உடையது. மடல் மென்மையாக இருக்கும்.

நூறு கிராம் கீரையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து 80.6 கிராம், புரதம் 4.5 கிராம், தாதுப்புகள் 4.2 கிராம், நார்ச்சத்து 1.6 கிராம், கார்போ ஹைடிரேட் 8.5 கிராம், கலோரிச் சத்து 321 கிலோ கலோரி, சுண்ணாம்புச் சத்து 321 மி.கிராம், பாஸ்பரஸ் 71 மி.கிராம், இரும்புச்சத்து 18 மி.கிராம்.

இந்தக் கீரையில், உயிர்ச்சத்து ஏ, சி, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் போதியளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்த இந்தக் கீரை சரிவிகித உணவாக உள்ளது.

இதைக் கூட்டாக, குழம்பாக, பொரியலாகச் சமைத்து உண்ணலாம். சூப்பாகவும் செய்து சாப்பிடலாம். புளி, மிளகாயைச் சேர்த்துக் கடைந்து சாதத்தில் பிசைந்து உண்ணலாம்.

பயன்கள்

பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடற்சூடு தணியும். நாவுக்குச் சுவையைத் தந்து பசியைத் தூண்டும். சிறுநீர் வெளியேறாமல் வயிறு உப்பி அவதிப்படுவோர், இந்தக் கீரையைப் பயன்படுத்திக் குணம் பெறலாம். இந்தக் கீரை, சிறுநீரகக் கல்லைக் கரைக்கும்; சிறுநீரகத் தொற்றைப் போக்கும்.

இரும்புச் சத்துக் குறையால் ஏற்படும் இரத்தச் சோகையைப் போக்கும். மூட்டு வலியைக் குணமாக்கும். சோர்வை அகற்றி, உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து. புற்றுநோயைத் தடுக்கும். எலும்புகளை வலுவாக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கில் ஏற்படும் சிக்கல் சரியாகும்.

இந்தக் கீரை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், குடலில் தோன்றும் கொக்கிப்புழு, நாக்குப்பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்கும். இந்தக் கீரையை அரைத்து உடலில் பூசினால், வெய்யிலால் உண்டாகும் தோல் சுருக்கம் மறையும்; காயங்கள் ஆறும்.

சத்துகள் நிறைந்த சக்கரவர்த்திக் கீரையை, வீட்டிலுள்ள காலியிடம் அல்லது மாடியில் வளர்க்கலாம். விலை மலிவாகக் கிடைக்கும் இதைப் போன்ற உணவுகளைப் பயன்படுத்தினால், சத்துக்குறை நோய் வராமல் உடம்பைப் பாதுகாக்கலாம்.


Pachai boomi Vimalarani

முனைவர் மா.விமலாராணி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!