நாட்டினக் கிடேரிகள் சுமார் 24 மாதங்களிலும், கலப்பினக் கிடேரிகள் அவற்றின் இனத்தைப் பொறுத்து 8-18 மாதங்களிலும், எருமைக் கிடேரிகள் 24-30 மாதங்களிலும் பருவமடையும். கிடேரிகள் தங்கள் தாயின் எடையில் 75 சதவீதத்தை அடையும் போது பருவத்துக்கு வரும்.
கிடேரிகளின் இனப்பெருக்க உறுப்புகளும், உடலும் போதுமான வளர்ச்சியை அடைந்ததும் முழுச் சினையாகும் திறனை அடையும். இப்படி, கிடேரிகள் முழுச் சினையாகும் திறனை அடைவதை, பாலியல் முதிர்ச்சி என்கிறோம். பருவமடைதல் மற்றும் பாலியல் முதிர்ச்சிக்கு இடைப்பட்ட காலத்தில், இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வளரும்.
பருவமடைவதைப் பாதிக்கும் காரணிகள்: மரபணுக்கள். பருவமடையும் வயதிலுள்ள பருவநிலை மாற்றங்கள். கிடேரிகளின் உடல் வளர்ச்சி. கிடேரிகளின் தீவனமுறை. கிடேரிகளின் உடல்நிலை. கிடேரிகளின் கணநீர்ச் சுரப்பு.
கிடேரிகள் பருவம் அடைந்ததும் முழுச் சினையாகும் திறனை அடைவதில்லை. பருவ வயதை அடையும் போது தான், இனப்பெருக்கம் செய்யத் தயாராகும். இனப்பெருக்க உறுப்புகளும், அவற்றைத் தூண்டும் அவயங்களும் உரிய அளவில் முதிர்ச்சி அடையும்.
பொதுவாக, பசுக் கிடேரிகள் 9 லிருந்து 18 மாதங்களில் பருவ வயதை அடைந்து, சினப்பருவச் சுழற்சி மற்றும் சினைப் பருவத்தை வெளிப்படுத்தத் தொடங்கி விடும். ஆனால், இனப்பெருக்க மண்டலம் செயல்படத் தொடங்கி, சினைத் தருணத்துக்கு வந்தால் தான் சினைப் பிடிக்கும்.
கிடேரிகளைச் சினையாக்குவதில் வயதை விட, அவற்றின் எடைக்கும் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்குண்டு. கிடேரிகள் 35 சதவீத உடல் வளர்ச்சி வந்ததுமே பருவத்துக்கு வந்து விடும். ஆனால், வயிற்றில் கன்றைத் தாங்கி வளர்க்கும் உடல் எடை வந்த பிறகு தான் சினைப்படுத்த வேண்டும்.
200-250 கிலோ எடையை அடையும் கிடேரி, சினைப்படுத்த ஏற்றது. இந்த எடையை அடைய, ஒரு கிடேரிக்குப் பத்து மாதமும் ஆகலாம். இரண்டு மூன்று ஆண்டுகளும் ஆகலாம்.
பருவமடைதல் என்பது, வயதை விட, உடல் எடையைச் சார்ந்தே அமைகிறது. கிடேரிகளின் பருவ வயதானது, இனம், உடல்நிலை, தீவனம், சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் வேறுபடுகிறது.
அடுத்து, கிடேரிகள் பருவமடைவதைப் பாதிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது அவற்றின் வளர்ச்சி நிலையாகும். தரப்படும் தீவனத்தைப் பொறுத்தே வளர்ச்சி அமையும். எனவே, தீவனம், புரதம், தேவையான எரிசக்தி, தாதுப்புகள், வைட்டமின்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.
போதுமான சத்துகள் இல்லாத தீவனத்தைக் கொடுத்தால், பருவ வயதை அடையக் காலதாமதம் ஆவதுடன், கருவுற்றாலும் ஈனும் போது பல சிக்கல்கள் உண்டாகும். எனவே, சத்தான உணவுகள் கிடேரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
மரு.சு.பிரகாஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.