காற்று மாசைக் களையும் வீட்டுக்குள் தோட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை

றிவியல் மற்றும் தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், நகர்ப் புறங்களில், அடுக்குக் குடியிருப்புகளில், நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம்.

நாம் நமக்குத் தெரியாமல் அசுத்தக் காற்றைச் சுவாசிப்பதால், அசுத்தக் காற்றுப் பரவலால், தோல் மற்றும் சுவாச நோய்களுக்கு ஆளாகி உள்ளோம்.

நவீனச் சமையல் முறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் மூலம், பென்சீன், ஈத்தர், ஃபார்மால் டிரைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் பல காற்று மாசுகளை ஏற்படுத்தி வருகிறோம்.

இந்த மாசுகளை, வீட்டுக்குள் தொட்டித் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் சுத்தம் செய்யலாம்.

வீட்டுக்குள் இருக்கும் மாசு கலந்த காற்றைச் சுவாசித்தால், எத்தகைய பின் விளைவுகள் ஏற்படும் என்பதை, சுகாதாரப் புள்ளி விவரம் ஒன்றின் மூலம் அறியலாம்.

அதாவது, தென்கிழக்கு ஆசியாவில், ஓராண்டில் நிகழும் சுமார் ஆறு இலட்சம் குறைப் பிரசவங்களில், ஏறக்குறைய 80 சதம், இந்தியாவில் மட்டுமே நிகழ்கின்றன.

இதைப் பார்க்கும் போது, கிராம மற்றும் நகர்ப்புற வீடுகளில், 70 சத வீடுகள் காற்றோட்ட வசதி இல்லாமல் உள்ளன என்பது தெளிவாகும்.

காற்று மாசு உண்டாகும் வழிகள்: நகர்ப் புறங்களில் தேவையற்ற கழிவுகளை எரிப்பதன் மூலம், காற்று மாசு அதிகமாக ஏற்படுகிறது.

மேலும், நகர்ப் புறங்களில் பூமிக்கு அடியில் கட்டப்பட்டு உள்ள சேமிப்பு அறைகளில் காற்றுப் புகுவது தடுக்கப்படுகிறது.

இதனால், அங்கே அடித்துள்ள பெயிண்ட், மணமிகு திரவங்கள் மற்றும் உடற் பூச்சுகள் மூலம், தீமை செய்யும் வாயுக்கள் உண்டாகின்றன.

பெயிண்ட் மட்டுமன்றி, குளியலறை, கழிவறையைச் சுத்தப்படுத்த உதவும் வேதிப் பொருள்கள் மூலம்,

கட்டுமானம் மற்றும் கட்டட இடிபாடுகள் மூலம் வெளிப்படும் புகை மற்றும் தூசி மூலம் பெருமளவில் காற்று மாசடைகிறது.

மேலும், குளிர் சாதனப் பெட்டிகளை இயக்குவதால் வெளிப்படும் பசுமைக்குடில் காற்று மாசாலும் காற்று அசுத்தம் அடைகிறது.

கிராமங்களில் விறகு போன்ற எரி பொருள்களால் ஏற்படும், புகை மற்றும் தூசு மூலம், பெருங் காற்று மாசு ஏற்படுகிறது.

வீடுகளில் உண்டாகும் காற்று மாசுகள்: நகர்ப் புறங்களில் உலர் சலவை மற்றும் பாத்திரப் பூச்சுக் கலவைத் தொழில் மூலம், டிரை குளோரோ எத்திலின் வாயு அதிகளவில் உண்டாகிறது.

அச்சக மை, நிறக்கலவை, வார்னீஷ், ஒட்டும் திரவங்கள் பயன்பாடு மூலமும், காற்று மாசு உண்டாகிறது.

பென்சீன் திரவம் பெரும்பாலும் நிறக் கரைப்பான்களில் பயன்படுகிறது.

உதட்டுச் சாயம், மை, எண்ணெய்த் திரவங்கள், பிளாஸ்டிக், ரப்பர் ஆகிய பயன்பாடுகள் மூலம், பென்சீன் வாயு காற்றில் கலக்கிறது.

சலவைப் பொடி, வெடி மருந்து தயாரிப்புகள், மருந்து ஆலைகள் மூலமும் வெளிப்படும் இந்த வாயு,

தோல், நாசித்துளை, தொண்டை மற்றும் கண்களில், எரிச்சலை, ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

சமையலறைக் கழிவுத் தொட்டிகளில் வளரும் நுண் கிருமிகளால் உண்டாகும் கெட்ட நாற்றம், நோய்ப் பூசணங்கள், தாவர மகரந்தம் மற்றும் கரப்பான் பூச்சிகளின் எச்சம் ஆகியன, ஒவ்வாமை, ஆஸ்துமா வரக் காரணமாக உள்ளன.

சுத்தமற்ற தரை விரிப்பு, அறை மணமூட்டி மற்றும் அழகு சாதன வேதிப் பொருள்களால், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்க்கு, சுவாசம் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன.

காற்று மாசைச் சுத்திகரிக்கும் உள்வீட்டுத் தாவரங்கள்: பெரும்பாலான உள் அரங்கத் தாவரங்கள், அதிக ஒளிச் சேர்க்கைத் திறன் மிக்கவை.

அதாவது, அறை ஒளியிலேயே தங்கள் வளர்ச்சிக்கு வேண்டிய உணவை, பச்சையத்தின் மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன.

இந்தத் தாவரங்கள் வீடுகளில் உண்டாகும் வாயு மாசை, கெட்ட வாசத் தனிமங்களை, இலைகளில் உள்ள நுண் துளைகள் மூலம் கிரகிக்கின்றன.

பிறகு, தாவரத் திரவ நகர்தல் மூலம் வேருக்கு எடுத்துச் சென்று, மண்ணில் சேர்க்கின்றன.

இப்படிச் சேர்க்கப்பட்ட இந்த மாசுகள், அங்குள்ள நுண் கிருமிகளால், பயன்படும் தனிமங்களாக மாற்றம் பெறுகின்றன.

சில நேரங்களில் இந்த மாசுகள், நுண் கிருமிகள் உதவியின்றி, தாவரங்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் மற்றும் கிரியா ஊக்கிகள் மூலம், அந்தத் தாவரங்கள் பயன்படும் வகையில் மாறுகின்றன.

மேலும், தாவரத் தொட்டிகளில் மண் வெளியே தெரியும் வகையில், தாவரங்களின் கீழ்ப்பகுதி இலைகளை நீக்கினால், சில வாயுக்களை, அந்த மண் நேரடியாக உறிஞ்சிக் கொள்ளும்.

இன்னும் சிலவகைத் தாவரங்கள், வெளிச்சம் இல்லா இரவிலும், தேவையற்ற காற்று மாசுகளை, இலைத் துளைகள் மூலம் உறிஞ்சிக் கொள்ளும்.

எனவே, பகலிலும் இரவிலும் செயல்படும் தாவரங்களை வீட்டுக்குள் வளர்த்தால், அதிகளவில் காற்று மாசை அகற்றலாம்.

அனைத்து வகை உள்ளரங்கத் தாவரங்களும், பென்சீன், டொலுயீன், ஜைலீன் போன்ற ஆவியாகும் காற்று மாசுகளை, மண் மற்றும் இலைத் துளைகள் மூலம் கிரகித்துக் கொள்ளும்.

லில்லி, கோல்டன், போத்தாஸ் போன்ற தாவரங்கள், கீட்டோன்ஸ், ஆல்டிஷைடு போன்ற வாயுக்களைக் கிரகித்துக் கொள்ளும்.

மற்ற உள்ளரங்கத் தாவரங்கள், ஃபார்மால் டிஷைடு, பென்சீன் போன்ற நச்சு வாயுக்கள் மற்றும் ஆவியாகும் கரிம வாயுவைக் கிரகித்துச் சுத்தம் செய்யும்.

ஃபில்லோ டென்ரான் என்னும் தாவரம், குறைந்த ஒளியில் அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்.

உள்ளரங்கத் தாவரங்கள், கிடைக்கும் சூரியவொளி அல்லது விளக்கு ஒளியைப் பொறுத்து, தங்களின் ஒளிச் சேர்க்கைத் திறனைக் கூட்டிக் கொள்ளும் அல்லது குறைத்துக் கொள்ளும்.

தொட்டிகளின் ஈரப்பதம் சரியாக இருந்தால், சுகாதாரத்தைக் காக்கலாம்.

அகன்ற இலைத் தாவரங்கள், காற்றில் கலந்துள்ள புகை மற்றும் தூசு மாசை ஈர்த்துச் சுத்தம் செய்யும்.

ஸ்பைடர் பிளான்ட்ஸ், கோல்டன் பத்தோஸ், பில்லோ டென்ட்ராக் ஆகிய தாவரங்கள், ஃபார்மால் டிசைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மாசுகளைச் சுத்தம் செய்யும்.

கழிவுகள், மர அறுவைத் தூசு, தரை விரிப்பு, கட்டுமானப் பொருள்கள் மூலம் உண்டாகும் நச்சு வாயு மற்றும் தூசுகளை;

ரப்பர் மரம், சோற்றுக் கற்றாழை, ஸ்பைடர், ஃபிக்ட்ரீ, எலிபன்டியர், பில்லோ டென்ராக் ஆகிய தாவரங்கள் அகற்றும். காற்றிலுள்ள தூள் மாசையும் அகற்றும்.

பச்சை அழகுத் தாவரங்கள், வாகனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் பிறவற்றின் மூலம் வெளியாகும் ஒலி மாசைக் கிரகித்துக் கட்டுப்படுத்தி, மனித நலம் காக்கும்.

நறுமணப் பூக்களைப் பூக்கும் தாவரங்கள், நச்சு வாயுக்கள் மற்றும் கெட்ட வாடையை மாற்றும்.

நோயற்ற வாழ்வைப் பேணுவதில், சுத்தமான உள்ளரங்க வசதி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், மக்களிடம் இந்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை.

வீட்டுக்குள், முற்றம் மற்றும் வராந்தாவில் அழகுச் செடிகளை வளர்த்தால், சுகாதாரம் பேணலாம்.

அழகுச் செடிகள் மற்றும் வாச மலர்கள், மனித வாழ்வில் புத்துணர்வை ஏற்படுத்தும்.

நாசா அறிவியல் கழக ஆய்வு மற்றும் பரிந்துரைப்படி, 1,800 சதுரடி உள்ளரங்கில், 15-20 செ.மீ. உயரத் தொட்டிகளில்,

15-18 உள்ளரங்கத் தாவரங்களை, மணந்தரும் பூச்செடிகளை வளர்த்தால், சுத்தமான சுவாசக் காற்றைப் பெறலாம்.

ஒரு மனிதன் தரமான சுவாசக் காற்றைப் பெற, 6-8 கன அடி, சுற்றுப்புறம் தேவை.

இந்தப் பரப்பில் வளர்க்கும் தாவரங்கள் மூலம், ஒரு மனிதன் தனக்குத் தேவையான சுவாசக் காற்றைப் பெற முடியும்.

ஆக, வீட்டுத் தோட்டமல்ல, வீட்டுக்குள் தோட்டம் அமைத்தால், மாசற்ற காற்றைச் சுவாசித்து, நெடுநாட்கள் சுகமாக வாழலாம்.

உள்ளரங்கில் வளர்க்க ஏற்றவை: அக்ளோனிமா, அரக்கேரியா, அஸ்பிடிஸ்ட்டிரா, குளோரோ ஃபைட்டம், டைஃபன் பேக்கியா, ட்ரஸினா, ரப்பர் மரம், மரான்டா, மான்ஸ்டீரா, ஃபில்லோ டென்ட்ரான், சான்சிவீரியா, சின்டாப்ஸிஸ்.

இருட்டுப் பகுதியில் வளர்க்க ஏற்றவை: அஸ்பிடிஸ்ட்டிரா, மரான்டா, மான்ஸ்டீரா, ஃபில்லோ டென்ட்ரான், செலாஜினெல்லா, சான்சிவீரியா, சிண்டாப்ஸிஸ்.

வடக்கு வரான்டா அல்லது முற்றம் அல்லது சன்னலில் வளர்க்க ஏற்றவை: அக்ளோனீமா, அஸ்பிடிஸ்ட்டிரா, புரோமீலியாட்ஸ், பெகோனியா, குளோரோ ஃபைட்டம். டையஃபன் பேக்சியா, ஹெடெரா, பெப்ரோமியா.

தெற்கு முற்றம் அல்லது சன்னலில் வளர்க்க ஏற்றவை: அகாலிஃபா, கோலியஸ், யூஃபோர்பியா, பெலர்கோனியம்.

கிழக்கு, மேற்கு முற்றம் அல்லது ச்ன்னலில் வளர்க்க ஏற்றவை: கெலாடியம், ஓஸ்முன்டா, ஃபைகஸ், கேலியோட்டா.


Velmurugan

முனைவர் க.வேல்முருகன், முனைவர் பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!