தற்போது, கரும்பு சாகுபடியில் விதைச் செலவைக் குறைக்கும் நோக்கில், ஒரு பரு கரணை நடவு முறை பின்பற்றப் படுகிறது.
இதற்கு, ஒரு ஏக்கருக்கு 4,400 ஒரு பரு கரணைகள் தேவைப்படும். இந்தக் கரணைகளின் மொத்த எடை வெறும் 50 கிலோ மட்டுமே.
இந்தக் கரணைகளை 400 கிலோ விதைக் கரும்பில் இருந்து எடுத்து விட்டு, மீதமுள்ள 350 கிலோ கரும்பை ஆலைக்கு அனுப்பி விடலாம்.
கருவி மூலம் பருக்களைப் பெயர்த்து எடுத்து, குழித் தட்டுகளில் வளர்த்து, முப்பது நாட்களில் ஆறு இலையுள்ள கரும்பு நாற்றுகளை உற்பத்தி செய்து, 5×2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
இதில், 80 சதம் முளைப்புத் திறன் என்று வைத்துக் கொண்டால், ஏக்கருக்கு 3,520 குத்துகள் இருக்கும்.
இவற்றில், ஒரு குத்துக்கு 12 கரும்புகள் வீதம் கணக்கிட்டால், ஒரு ஏக்கரில் 42,200 கரும்புகள் இருக்கும்.
அதிக இடைவெளியில் நடுவதால், ஒரு கரும்பின் எடை 2 கிலோ வரை இருக்கும். ஆகவே, ஏக்கருக்கு 84 டன் கரும்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஐந்து மீட்டர் நீளத்தில் 96 கரும்புகள் அல்லது குத்துக்கு 12 கரும்புகள் இருந்தால், இந்த 84 டன் கரும்பு மகசூல் சாத்தியம் ஆகும்.
ஓர் ஒப்பீடு
பார்களில் இரு பரு கரணைகளை நடும் போது, 1.200 கிலோ எடையுள்ள 45,000 கரும்புகள் மூலம் கிடைக்கும் மகசூல் 54 டன்.
குழி நடவு முறையில் நடும் போது, 1.250 கிலோ எடையுள்ள 56,000 கரும்புகள் மூலம் கிடைக்கும் மகசூல் 70 டன்.
நான்கடி இடைவெளிப் பார்களில், நட்டு நீர்த்தேக்க முறையில் பாசனம் செய்யும் போது, 1.500 கிலோ எடையுள்ள 40,500 கரும்புகள் மூலம் கிடைக்கும் மகசூல் 60 டன்.
ஒரு பரு சீவல் நாற்று நடவு முறையில் நட்டு, சொட்டு நீர் உரப் பாசனம் செய்யும் போது, 2 கிலோ எடையுள்ள 42,200 கரும்புகள் மூலம் கிடைக்கும் மகசூல் 84 டன்.
எனவே, பயிர் எண்ணிக்கை சரியாக இருக்கும் வகையில் பராமரித்து, சொட்டுநீர் உரப் பாசனம் செய்தால், எதிர்பார்க்கும் கரும்பு மகசூலைப் பெற முடியும்.
செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.