தேனீ வளர்ப்பின் வெற்றி, பருவ மழையைச் சார்ந்து உள்ளதால், பாசன வசதியுள்ள இடங்களில் தேனீக்களை வளர்க்கலாம்.
இடத்தின் தன்மைக்கு ஏற்ப தேனீக்களின் வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
சமதள நிலப்பரப்பில் மலைத் தேனீக்களை வளர்க்க முடியாது. இயற்கையாக ஒரு தோட்டத்தில் தேனீக்கள் கூடு கட்டி வாழ்ந்தால் அவற்றை அழிக்கக் கூடாது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்திய தேனீக்களைப் பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம்.
தோட்டக்கலைப் பயிர்களான மா, நெல்லித் தோப்புகள் தேனீ வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவை.
பல்வேறு பயிர்கள் சாகுபடியில் உள்ள தோட்டங்களில் தேனீக்களை வளர்த்தால், அதிகளவில் தேனை எடுக்கலாம்.
ஏனெனில், தேனீக்கள் பல பயிர்களை நாடிச் சென்று உணவைத் திரட்டும்.
பயிர்கள் பூக்கும் காலத்தில் தேனீக்களை வளர்த்தால் நல்ல பயன் கிடைக்கும்.
தேனீ வளர்ப்பில் கிடைக்கும் தேன், மகரந்தம், தேன் மெழுகு போன்ற பொருள்களைத் தக்க நேரங்களில் விற்று கூடுதல் இலாபத்தை ஈட்ட முடியும்.
காடுகள் அழிப்பு, முறையற்ற பூச்சி மருந்துகள் பயன்பாடு போன்றவற்றால், அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன.
இந்த நேரத்தில் தேனீ வளர்ப்பு என்பது, நல்ல துணைத் தொழிலாக இருப்பதுடன், பயிர் சாகுபடியில் நடமாடும் இடுபொருளாகவும் பயன்படும்.
தானியப் பயிர்களும், தோட்டக்கால் பயிர்களும், மரப் பயிர்களும் இணைந்த பண்ணைகளில் தேனீக்களுக்கு ஆண்டு முழுவதும் உணவு கிடைக்கும்.
எனவே, இங்கே தேனீ வளர்ப்பைச் சிறப்பாகச் செய்யலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் தேனீ வளர்ப்பும் இருந்தால், அது நல்ல வருவாயை ஈட்டித் தரும்.
பயிர்களுக்கும் தேனீக்களுக்கும் இடையே நிலவும், உனக்காக நான் எனக்காக நீ என்னும் உன்னத உறவு, தேனீ வளர்ப்பை, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் ஒப்பற்ற அங்கமாக்குறது.
பூக்கும் காலங்களில் தேனீக்களின் சேவை பயிர்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும்.
எனவே, தேனீ வளர்ப்பைத் திட்டமிட்டுச் செய்தால் அதிகமான இலாபத்தை ஈட்ட முடியும்.
நிழலான பகுதியில், காற்று அதிகமில்லாத பகுதியில், தேனீப் பெட்டிகளை வைப்பது நல்ல பலனைத் தரும்.
இந்தியத் தேனீக்கள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று திரும்பும்.
ஆனாலும், பூக்கள் இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேனீப் பெட்டிகளை வைத்தால், நன்றாகத் தேனை உற்பத்தி செய்ய முடியும்.
முனைவர் மு.சுகந்தி, உதவிப் பேராசிரியை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.