இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பெரும்பகுதி பொருளாதாரம் என்பது, சிறு, குறு விவசாயிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது.
ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாமல் போவதால், விவசாயமும் பொய்த்துப் போகிறது.
இத்தகைய சூழலில், விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக அமைவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளே. அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பவை பசுக்கள்.
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்னும் திருப்பாவை வரிகள் மூலம்,
தமிழர் வாழ்வில் பழங்காலம் முதலே பசுக்கள் பெரிதும் பயன்பட்டு வருவதை உணர முடியும்.
இந்நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், நாட்டில் ஏற்பட்ட வெண்மைப் புரட்சியால், பாலை அதிகமாகத் தரும் கலப்பினப் பசுக்கள் பெருகின.
இவை, நமது நாட்டினப் பசுக்களைக் காட்டிலும் அதிகமாகப் பாலைத் தர வல்லவை.
அதே நேரம், நம் நாட்டுச் சூழலில் இந்தப் பசுக்களில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவே ஆகும்.
இதனால், கலப்பினப் பசுக்களில் ஒரு சில நோய்கள் அதிகமாக ஏற்படு கின்றன. அவற்றுள் முக்கியமானது மடிநோய் ஆகும்.
பாலில்லாப் பசுக்கள்
பசுவின் மடியை, மடிநோய் தாக்கினால் பால் உற்பத்திப் பாதித்து, பசுவின் மொத்த மதிப்பும் போய் விடும்.
இந்தச் சூழலில், விவசாயிகள் அப்பசுவை வளர்க்க விரும்பாமல் மிகக் குறைந்த விலைக்கு விற்று விடுவர்.
ஆகவே, பசுவின் மதிப்புக்குக் காரணமாக விளங்குவது அதன் மடிதான். இந்த மடி மற்றும் மடிநோயைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
மடி நோய்
மடிநோய் என்பது, பல்வேறு காரணிகளால் பசுக்களின் மடியில் ஏற்படும் ஒவ்வாமை ஆகும்.
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் மைக்கோ பிளாஸ்மா போன்ற நுண்ணுயிரிகள் தான் இந்நோய்க்குக் காரணம்.
மடிநோயின் தாக்கம், பால் தரும் கலப்பினப் பசுக்களில் அதிகமாக இருக்கும்.
இந்நோய், பால் சுரப்புத் திசுக்களைத் தாக்கி, பாலின் நிறம், தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பால் உற்பத்தி அளவையும் குறைக்கும்.
மேலும், உரிய நேரத்தில் முறையாக சிகிச்சை செய்யாத நிலையில், முழு மடியும் பாதித்து, நிரந்தரமாகப் பாலுற்பத்தி நின்று போகலாம்.
எனவே, மடிநோயால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்க்க, முறையான நோய்த் தடுப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்.
குறிப்பாக, பண்ணையின் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும்.
பண்ணை சுகாதாரம்
சுகாதாரமற்ற சுற்றுப்புறம், நோய்க் கிருமிகள் வளர்வதற்கு மிகவும் உகந்தது.
எனவே, பண்ணையும், சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்.
சாணம் போன்ற கழிவுகளை உடனுக்குடன் பண்ணையில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால் கொண்டு சேர்க்க வேண்டும்.
நோயுள்ள மடியில் கறந்த பாலில் 5 சத பீனாலைக் கலந்து, சுற்றுப் புறத்தில் கிருமிகள் மேலும் பரவா வகையில் அகற்ற வேண்டும்.
மாடுகள் இருக்கும் அதே இடத்தில் பாலைக் கறந்து கீழே விடக் கூடாது.
இது, நோயற்ற மாடுகளிலும் கிருமிகள் பரவ வாய்ப்பாக அமைந்து விடும்.
கறவை மாடுகளின் சுகாதாரம்
கறவை மாடுகளைத் தினமும் குளிப்பாட்டி, அவற்றின் மடியிலும் சுற்றிலும் ஒட்டியுள்ள சாணம் மற்றும் அழுக்கை நீக்க வேண்டும்.
இதனால், பசுக்களில் மடிநோயின் பாதிப்புக் குறைவதுடன், பால் உற்பத்தியும் சுத்தமாக இருக்கும்.
பாலைக் கறப்பதற்கு முன், காம்பு மற்றும் மடியைச் சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.
கிருமிநாசினி கலந்த நீரால் கழுவினால், பாலின் மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம்.
மடிநோய் தாக்கிய பசுக்கள் வீணாக்கும் தீவனத்தை, பிற கால்நடைகளுக்குத் தரக் கூடாது.
கறவையாளர் சுகாதாரம்
கறவை மாடுகளில் மடிநோய் மற்றும் சில தொற்று நோய்கள், கறவையாளர்கள், பண்ணை வேலையாட்கள் மூலம் பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே, பண்ணை ஆட்கள், பால் கறவையாளர்களின் சுத்தம் மிகவும் அவசியம்.
குறிப்பாக, சுவாச நோய் உள்ளவர்களைப் பால் கறக்க விடக் கூடாது.
கறவையின் போது புகைத்தல், இருமுதல், புகையிலை போடுதல், எச்சில் உமிழ்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பெரிய பண்ணைகளில் பால் கறவை இயந்திரத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
கறவைக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் பிற பொருள்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
பால் கறக்கும் சமயத்தில், காம்புகளில் எண்ணெய்யைத் தடவுதல், எச்சிலைத் தடவிப் பால் கறத்தல் போன்ற செயல்களை அறவே தவிர்க்க வேண்டும்.
பாலைக் கறக்கும் போது, மாடுகளுக்குக் கலப்புத் தீவனம் வைத்தல் போன்ற செயலால், பாலில் தூசி சேர வாய்ப்பு உள்ளது.
இதைத் தவிர்க்க, அடர் தீவனத்தை நீரில் பிசைந்து தரலாம்.
மடிநோய் மற்றும் பிற நோய்களுக்கு உள்ளான கால்நடைகளில் பயன்படுத்திய கருவிகளை, பிற கால்நடைகளில் பயன்படுத்தக் கூடாது.
பால் கறக்கும் முறை
ஐந்து விரல்களையும் கொண்டு பால் கறத்தல், கட்டை விரலை உட்புறம் மடக்கிக் கறத்தல், கட்டை விரல், ஆள்காட்டி விரல்களை மட்டும் வைத்துக் கறத்தல் ஆகிய முறைகள் நடைமுறையில் உள்ளன.
இவற்றில், எல்லா விரல்களையும் கொண்டு கறக்கும் முறை தான் மிகவும் சிறந்தது. இம்முறையில் காம்புகளில் பாதிப்பு ஏற்படாது.
மடிநோய் வந்த கால்நடைகளில் இறுதியாகப் பாலைக் கறப்பதன் மூலம், பிற கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.
கறவைக்கு முன், கறவையாளர்கள் தங்கள் கைகளை, சோப்பு அல்லது கிருமிநாசினி கலந்த நீரில் கழுவ வேண்டும்.
கறவை இயந்திரம் எனில், சரியான உத்திகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
மடிநோய்க்கு உள்ளான பசுக்களில் கறவை இயந்திரம் மூலம் கறக்கக் கூடாது.
ஏனெனில், மடிகளில் வலி உண்டாவதுடன் கறவை இயந்திரம் அசுத்தமாகும்.
தினசரி கறவைகளுக்கு இடையேயான இடைவெளி சீராக இருக்க வேண்டும்.
பால் வற்றும் காலம் வருமுன், பால் கறவையைப் படிப்படியாக நிறுத்தினால், மடியில் பாதிப்பு ஏதும் ஏற்படாது.
முதலுதவி மூலிகை மருத்துவம்
கறவை மாடுகளை வளர்ப்போர், மடிநோயைத் தொடக்க நிலையிலேயே கவனித்து சிகிச்சை செய்யாமல் விட்டு விடுகின்றனர்.
குறைந்தது மூன்று நாட்களில் மடிநோய் முற்றிய நிலையை அடைந்து விடுகிறது.
கிராமங்களில் சரியான காலத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் போவதும், இந்நோய் பெருகக் காரணமாகும்.
இதை உணர்ந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மரபுசார் மூலிகை மருத்துவம் என்னும்,
விலங்குகளின் நோய்களைத் தீர்க்கும் பாரம்பரிய முறைகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் மாநிலப் புதுமைத் திட்டத்தின், இனவழிக் கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் என்னும்,
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருகிறது.
இம்மையம், மடிநோயை இயற்கை முறையில் குணப்படுத்தும், மூலிகை மருத்துவ முறைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
முதலுதவி மூலிகை மருத்துவம்
ஒரு மாட்டுக்குத் தேவையானவை: சோற்றுக் கற்றாழை 200 கிராம்,
மஞ்சள் பொடி 50 கிராம்,
சுண்ணாம்பு 5 கிராம்.
சிகிச்சை முறை: இவற்றை ஆட்டுக் கல்லில் இட்டு நன்றாக அரைத்து எடுத்து, மாட்டின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும்.
வீக்கம் குறையும் வரை, தினமும் 8-10 முறை பூச வேண்டும். தினமும் புதிதாகத் தயாரிக்க வேண்டும்.
குறிப்பு: மூலிகை மருத்துவம் என்பது, முதலுதவி மருத்துவம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகவே, இம்மூலிகை மருத்துவம் செய்த பிறகு தேவைப்படின் அருகிலுள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
மருத்துவ சிகிச்சை அவசியம்
மடிநோய் தாக்கி இருப்பதை அறிந்ததும், தகுதியான கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.
மடிநோய் தாக்கிய மாடுகளை, மற்ற மாடுகளிடம் இருந்து தனியே பிரித்துப் பராமரிக்க வேண்டும்.
கன்றுகளைப் பால் குடிக்க விடக் கூடாது. சிகிச்சை பலனளிக்காத காம்புகளை, மருந்துகள் மூலம் நிரந்தரமாகப் பாலை வற்ற வைத்து விட வேண்டும்.
மரு.அ.இளமாறன், மரு.க.கண்ணன், மரு.த.இராமசாமி, இல.கலைச்செல்வி, ப.பிரீத்தா, சீ.இரமேஷ், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி.