அதிகளவில் தரமான குஞ்சுகளைப் பெறுவதற்கு, திடமான சேவலும் பெட்டைக் கோழிகளும் அவசியம். பத்துக் கோழிகளுக்கு ஒரு சேவல் வீதம் வைத்துக் கொள்ளலாம்.
பல வண்ண இறக்கைகளை உடைய அசீல் இனச் சேவல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீண்ட கழுத்து, நீண்ட, நேரான, உறுதியான கால்கள், அகன்ற மார்புள்ள சேவல்கள் இனவிருத்திக்கு ஏற்றவை.
இத்தகைய பண்புகளுள்ள சேவல்களை 7-9 மாத வயதில் தேர்வு செய்து, மூன்று வயது வரை இனவிருத்திக்குப் பயன்படுத்தலாம்.
இதைப் போலவே, 7 மாதமான அசீல் பெட்டைக் கோழிகளைத் தாய்க் கோழிகளாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்தக் கோழிகளைத் தீவிர முறை, மிதத் தீவிர முறையில் வளர்க்கலாம்.
தீவிர முறையில் கோழிகள் நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைபட்டிருக்கும்.
இம்முறையில், ஒரு கோழிக்கு மூன்று சதுரடி இடம் தேவைப்படும். கொட்டகையின் அகலம் 20-22 அடி வரை இருக்கலாம்.
நீளப்பகுதியை நமது தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். உள்ளே பத்து அடிக்கு ஒரு தடுப்பு வீதம் இருந்தால், கோழிகளைக் கையாள்வது எளிதாக இருக்கும்.
மிதத் தீவிர முறையில், பகலில் கோழிகளை மேய்ச்சலுக்குத் திறந்து விடலாம். கோழிகளின் பாதுகாக்கச் சுற்றுவேலி இருப்பது நல்லது.
இம்முறையில் கொட்டகைக்கு உள்ளும், புறமும் ஒரு கோழிக்கு இரண்டு சதுரடி இடம் தேவை.
திறந்த வெளியில் பசுந்தீவனச் செடிகளை வளர்ப்பது, கோழிகள் மேய்வதற்கு ஏதுவாக இருக்கும். நாட்டுக் கோழிகளை, இயற்கை மற்றும் செயற்கை முறையில் இனவிருத்தி செய்யலாம்.
மரு.சு.முருகேசன்.