ஆடுகளில் தீவனப் பராமரிப்பு!

தானியவகைத் தீவனப் பயிர்களில் அதிகளவு மாவுச்சத்தும், ஓரளவு புரதச் சத்தும் உள்ளன. இவ்வகையில், தீவனச்சோளம் கோ.எப்.எஸ்.29, மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியன முக்கியமானவை.

புல்வகைத் தீவனப் பயிர்களில் அதிகளவு மாவுச் சத்தும் ஓரளவு புரதச் சத்தும் உள்ளன. இவ்வகையில், கோ.4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்,

கொழுக்கட்டைப் புல், கினியாப்புல், மயில் கொண்டைப்புல் ஆகியன முக்கியமானவை. உலர் பொருள் அடிப்படையில் இவற்றில் 5-10% புரதம் உள்ளது.

பயறுவகைத் தீவனப் பயிர்களில் அதிகளவில் புரதச்சத்து மற்றும் தாதுப்புகள் நிறைந்து உள்ளன.

இவ்வகையில், வேலிமசால், குதிரை மசால், தீவனத் தட்டைப் பயறு, தீவனச் சோயா மொச்சை, கொள்ளு, நரிப்பயறு ஆகியன முக்கியமானவை.

பயறுவகைப் பசுந் தீவனங்களைப் புல்வகைத் தீவனங்களுடன் கலந்து ஆடுகளுக்குக் கொடுப்பது, அடர் தீவனத்தைக் கொடுப்பதற்குச் சமமாகும்.

மரவகைத் தீவனப் பயிர்களில் புரதச்சத்து நிறைந்து உள்ளது. இவ்வகையில், சூபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, சித்தகத்தி ஆகியன முக்கியமானவை.

வளரும் குட்டிகளுக்குத் தினமும் 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும். 20-40 கிலோ எடையுள்ள வெள்ளாட்டுக்குத் தினமும் 1-2 கிலோ பசுந்தீவனம் தேவைப்படும்.

வெள்ளாடுகளுக்குத் தீவனப் புற்களைக் கொடுத்தால் மட்டும் போதாது. இவற்றின் தேவைக்குத் தக்கவாறு அடர் தீவனமும் அளிக்கப்பட வேண்டும்.

வளரும் இளம் ஆட்டுக்கு 100 கிராம், பெரிய ஆடு மற்றும் சினை ஆட்டுக்கு 250 கிராம், பொலி கிடாவுக்கு 400 கிராம் வீதம் அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.

வெள்ளாடுகளுக்கு உலர் தீவனமாக, சோளத் தட்டை, கடலைக் கொடி, கொள்ளு, நரிப்பயறு போன்ற காய்ந்த பயறுவகைத் தீவனங்களைத் தரலாம்.

இவற்றை, மானாவாரி நிலங்களில், மழைக் காலத்தில் விதைத்து, பூக்கும் போது அறுவடை செய்து உலர்த்தி, சேகரித்து வைத்தால், மேய்ச்சல் குறைந்த கோடையில் ஆடுகளுக்குத் தரலாம்.


மரு.வ.பா.இராகவேந்திரன்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!