தும்பையின் மருத்துவக் குணங்கள்!

முடிதும்பை என்னும் தும்பை மூலிகைச் செடியாகும். இது, லேபியே டேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வயல், வரப்பு மற்றும் புதர் ஓரங்களில், குத்துச் செடியைப் போல வளரும்.

தும்பையில், பெருந்தும்பை, சிறுதும்பை, மலைத்தும்பை, கழுதைத் தும்பை என்னும் கவிழ் தும்பை, கசப்புத் தும்பை, காசித் தும்பை எனப் பல உள்ளன.

தும்பை இலையும் பூவும் மருத்துவக் குணமிக்கவை. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கை மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுகின்றன. இவற்றை உள் மருந்தாகவும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

காதில் சீழ் வடிதல்

காதில் சீழ் வடிவதைத் தும்பைப்பூ அடியோடு நீக்கும். இப்பூவைக் கட்டிப் பெருங்காயம் சேர்த்து அரைத்து,

சுத்தமான எண்ணெய்யில் கலந்து நன்றாகக் காய்ச்சி வடிகட்டி ஆற விட்டுப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு,

இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டுகள் வீதம் காதில் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் குணமாகும்.

தேமல், படர் தாமரை

உடலில் இருக்கும் தேமல், படர் தாமரை ஆகியன, தும்பை இலையை அரைத்துப் பூசி வந்தால் சரியாகும்.

சொரி, சிரங்கு நீங்க, தும்பைச் சாற்றில் சோற்றுப்பைக் கலந்து பூசி, 15 நிமிடம் கழித்துக் குளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.

ஒற்றைத் தலைவலி

தும்பை இலையுடன் சுக்கு அல்லது மிளகைச் சேர்த்து அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணமாகும்.

நீர்க் கோர்வையால் வரும் தலைவலி குணமாக, தும்பையிலை, தும்பைப் பூவைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.

குறிப்பாக, ஒற்றைத் தலைவலி இருப்போர் வாரம் ஒருமுறை ஆவி பிடித்து வர வேண்டும்.

தும்பையிலைச் சாற்றை மூன்று சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் இருக்கும் நீர், கபால நீர், மண்டைக் குத்தல், தலைவலி ஆகியன குணமாகும்.

கபம் நீக்கி

சளி, கோழை, மூக்கில் நீர் வடிதல் ஆகியன குணமாக, தும்பைப்பூ வைத்தியம் கை கொடுக்கும்.

தும்பைப் பூக்கள் மற்றும் பனங் கற்கண்டைப் பாலில் சேர்த்துக் காய்ச்சி நன்கு ஆற வைக்க வேண்டும்.

பிறகு, இதைக் கரண்டியால் மசித்துக் குடித்தால், தொண்டைச் சளி, கோழை எல்லாமே வாந்தியாக வெளியேறி விடும்.

பூவில் இயல்பாகத் தேன் இருப்பதால், இதில் தேனைச் சேர்க்கத் தேவை யில்லை. பூக்களை மசித்துச் சாறெடுத்து, குழந்தையின் நாக்கில் தடவினால், சளி, கோழைக்கட்டு, இருமல் நீங்கி விடும்.

தாகம் தணிக்கும்

கோடைத் தாகத்துக்கு, நீர்மோர், இளநீர், பானகம் போன்று தும்பைப் பூவையும் பயன்படுத்தலாம்.

காலையில் தும்பைப் பூவைக் கசக்கி ஒரு தேக்கரண்டிச் சாறெடுத்து, அதேயளவில் தேனைக் கலந்து சாப்பிட்டால் நாள் முழுக்க, வறட்சி, தாகம், அசதி ஏற்படாது.

மண்டைக் கோர்வை நீர்

தலைக் கபாலத்தில் நீர்க்கோர்வை இருந்தால் முகம் முழுக்க வலி ஏற்படும். கன்னம், நெற்றி, தாடை, கழுத்துப்பகுதி வரை வலி இருக்கும்.

சீதளம் என்னும் கபால நீரை வெளியேற்ற, தும்பையிலைச் சாறு உதவும். தினமும் தலைக்குக் குளிக்கும் ஆண்கள், அடிக்கடி தலைக்குக் குளிக்கும் பெண்கள் தான் இந்தச் சிக்கலுக்கு உள்ளாவார்கள்.

இவர்கள், தும்பை இலையை நீர் விடாமல் அரைத்துச் சாறெடுத்து மூக்குத் துளைகளில் 2-3 சொட்டு உள்ளுக்குள் விடலாம்.

அல்லது உறிஞ்சினால் அரைமணி நேரத்தில் தலையில் இருக்கும் நீர் முழுவதும் மூக்கின் வழியே வெளியேறி விடும்.

கருப்பைச் சிக்கல்

தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வந்தால், கருப்பை சார்ந்த நோய் எதுவாக இருந்தாலும் குணமாகும். இதை, 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அதிக இரத்தப்போக்கு இருந்தால், தும்பை இலையை எலுமிச்சைச் சாற்றில் சேர்த்து அரைத்து, நல்லெண்ணெய்யில் குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

தும்பையிலை, கீழாநெல்லி இலையைச் சமமாக எடுத்து அரைத்து, அதில் சுண்டைக்காய் அளவில் பசும்பாலில் கலந்து இருவேளை குடித்து வர, மாத விலக்கு ஒழுங்காகும்.

விசக்கடி

தும்பை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான்கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.

பாம்புக் கடிக்கும், தும்பை மற்றும் மிளகைச் சேர்த்து முதலுதவி மருந்தாகத் தரலாம். பாம்புக் கடிக்கு உள்ளானவர், 25 மில்லி தும்பையிலைச் சாற்றைக் குடித்தால் 2-3 தடவை பேதியும், கபத்துடன் வாந்தியும் ஏற்படும்.

இதனால், குளிர்ச்சியாக இருந்த உடல் சூடாகும். புதுப் பானையில் உப்பற்ற, பச்சரிசி, பாசிப்பயறு பொங்கல் செய்து சாப்பிட வேண்டும்.

பாம்பால் கடிபட்டவர் ஒருநாள் முழுவதும் தூங்கக் கூடாது. மூன்று நாட்கள் உப்பற்ற பொங்கலைச் சாப்பிட்டால் நஞ்சு இறங்கும்.

மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லை என்றால் இறப்பது உறுதி.

தும்பை இலையையும், மிளகையும் அரைத்து உண்ணக் கொடுப்பதுடன் வெளியிலும் பூசினால் விசம் இறங்கும்.

தும்பையிலை மற்றும் தேள் கொடுக்கு இலையை அரைத்து உண்டால், தேள்கடி விசம் நீங்கும். தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க, விசம் இறங்கும்.

கண் பார்வைக்கு

தும்பைப்பூ, நந்தியாவட்டைப்பூ, புளியம்பூ, புங்கம்பூ, எள்பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டி வந்தால், வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவாகும்.

தும்பைப்பூ மற்றும் ஆடு தீண்டாப்பாலை விதையை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை மிகும்.

தும்பைச் சாறும், வெங்காயச் சாறும் கலந்து ஐந்து நாள் குடித்து வந்தால் ஆசனப்புண் குணமாகும்.

கழுதைத் தும்பை என்னும் கவிழ் தும்பையால், அரையாப்புக் கட்டி, வாதநோய், இரத்தமும் சீதளமும் கலந்த வயிற்றுப்போக்கு நீங்கும்.

தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து, அதிகாலையில் உண்டால் விக்கல் நீங்கும்.

தும்பைச்சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு ஆகியவற்றில் சீரகத்தைத் தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி, சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால், இதய பலவீனம் நீங்கும்.

சுரத்துக்குப் பின் ஏற்படும் சோர்வு தீரும். பசி மிகும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும்.

தும்பை வேர், தைவேளை இலை, வெங்காயம் மூன்றையும் அரைத்துக் கட்டினால் பவுத்திரம் குணமாகும்.


முனைவர் சி.ஜெயலட்சுமி, முனைவர் கு.வடிவேல், ஜே.எஸ்.ஏ. வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, ஆவட்டி, கடலூர் – 606 108.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!