எந்த இடத்திலும் வைக்க உகந்த தேனீப்பெட்டி!

மது நலமான வாழவுக்கு ஆதாரமாக, இயற்கைத் தேன், நெல்லிக்காய், எலுமிச்சை முதலியன உதவும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்தால் நீடித்த ஆயுள், நல்ல உடலமைப்பைப் பெறலாம்.

விவசாயிகள் அவரவர் தோப்பில் அல்லது தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து, தேனீக்களை வளர்க்கலாம்.

இதில் வியப்பு என்னவெனில், தேனீக்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்ய, தாமாகவே கஷ்டப்பட்டுக் கூடுகளைக் கட்டி, கைக்கெட்டா உயரத்தில் கூட்டு வாழ்க்கை வாழ்கின்றன.

இவற்றைக் கட்டிக் காத்தால், 20 முதல் 30 சதவீதத் தென்னை மரங்களில் காய்ப் பிடிப்பு அதிகமாகும். பழங்களில் நல்ல சுவை, தரம் அதிகரிக்க, தானியங்களில் தரமான மணிகள் உருவாக வழிவகை ஏற்படும்.

பூச்சியியல் வல்லுநர்கள் ஏராளமான முறைகளை, தமது பயிற்சிகள் மூலம் தந்து, தேனீக்களை வளர்க்க ஊக்கம் தருகிறார்கள்.

தமிழக அரசும், தேனீ வளர்ப்புக் குறித்த விழிப்புணர்வை அளித்து, தேனீப் பெட்டிகளை மானியத்தில் வழங்கி வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு வேளாண் பல்லைக் கழகம், வேளாண் அறிவியல் நிலையங்கள், தன்னார்வ நிறுவனங்கள், வேளாண் கல்லூரிகள் ஆகியன, தேனீ வளர்ப்பைப் பறைசாற்றி வருகின்றன.

தென்னந் தோப்பில் ஏக்கருக்கு 20 தேனீப் பெட்டிகள் வைத்தால் போதும்.

மலர்கள், பழ வகைகள் மற்றும் நீண்ட கால பூக்கள் உள்ள மர வகைகள், தேனீ வளர்ப்புக்கு உதவுவதால், வேலியில் கூட இலவன், பூவரசு, வேம்பு, கல்யாண முருங்கை, புளி, மாவை சாகுபடி செய்யலாம்.

தனது சொந்தச் செலவில் தேனீப் பெட்டிகளை அதிகப் பரப்பில் வைக்க விரும்புவோர், மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புவோர் மற்றும்

இயற்கை விவசாய விவசாயிகள், தேனீ வளர்ப்புப் பயிற்சியைப் பெற்று, தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.

தேனீக்களை வளர்க்க நிலம் தேவையில்லை. அதிகப் பணம் தேவையில்லை. நல்ல மனம் இருந்தால் போதும். மேலும், விவரம் பெற 98420 07125 எண்ணில் அழைக்கலாம்.


முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!