சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

ன்று ஆட்டினங்களை, குணாதிசய அடிப்படையில் வெள்ளாடு, செம்மறியாடு எனப் பிரிக்கிறோம். இந்த ஆட்டினம் புல்லினம் என்னும் பெயரில் சங்கத் தமிழகத்தில் அழைக்கப்பட்டது.

கால்நடை வளர்ப்பைப் பற்றி விரிவாகப் பேசும் சங்க இலக்கிய நூலான கலித்தொகையின் முல்லைக் கலியில் ஆட்டை வளர்த்து வந்தவர், ஆட்டை உடையவர், புல்லினத்தார் (முல்லைக்கலி, 7:2) எனப்படுகிறார்.

கால்நடை வளர்ப்பைச் செய்து வந்த ஆயரில் ஒரு பிரிவினர், புல்லினத்து ஆயர் (முல்லைக்கலி, 10;1, 11:5, 15:4) என்றே அழைக்கப் பட்டனர்.

இன்றைக்கு வெள்ளாடு, செம்மறியாடு ஆகிய இரண்டையும் அழைக்கப் பயன்படும் பொதுச்சொல் ஆடு என்பது, சங்கத் தமிழகத்தில் யாடு என்றே அழைக்கப்பட்டது.

பதிற்றுப்பத்து, யாடுபரந் தன்ன (78:13) என்றும், மலைபடுகடாம், பல்யாட்டு இனநிரை (பாடலடி 416) என்றும், குறுந்தொகை, யாடுடை இடைமகன் (221:4) என்றும் இதைப் பதிவு செய்துள்ளன.
செம்மறியாடு செம்மறி என்றும், வெள்ளாடு வெள்ளை என்றும் சங்கத் தமிழகத்தில் அழைக்கப்பட்டு வந்தன.

மலைபடுகடாமில் (பாடலடி 414), கிடாவுடன் கூடிய செம்மறியாட்டுக் கூட்டம், வெள்ளாட்டுடன் கலந்திருக்கும் சூழல், தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ எனப் பதியப்பட்டு உள்ளது.

ஆட்டிடையன் எழுப்பும் ஒலிக்கு, ஆடுகள் கட்டுப்பட்டு வேறிடம் போகாமல் இருந்த இடத்திலே இருப்பதை, நற்றிணையின் 142 ஆம் பாடல் நமக்குக் காட்டுகிறது.

சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் என்பது, அப்பொருளில் இடம் பெற்றதாகும். இதிலுள்ள சிறுதலைத் தொழுதி என்பது, சிறிய தலையை உடைய ஆட்டுக் கூட்டத்தைக் குறிக்கும்.

இதைப் போலவே, ஆடுகளை ஒன்று சேர்க்கும் காட்டிலுள்ள இடையனின் செய்கையை அகநானூறு (394:13), காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும் எனக் கூறுகிறது,

குறிஞ்சி நிலத்தில் முருகன் பேரில் நிகழ்த்தப்படும் வெறியாடல் என்னும் சடங்கில் ஆட்டுக்குட்டி அறுக்கப்படுவது, வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து, என்னும் நற்றிணை (47:9) பாடலடி மூலம் தெரிய வருகிறது.

ஆட்டின் கழுத்தை அறுத்துத் தினை நிவேதனமாக வைக்கப்பட்ட தன்மை, மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇ என, குறுந்தொகையில் (263:1) பதிவாகி உள்ளது.

ஆட்டுக் குட்டிகளை ஒன்றாக வைத்து ஓலைப்பாயை முதுகில் சுமந்தபடி செல்லும் இடையன் பற்றிய குறிப்பு அகநானூற்றில் (94:4) காணப்படுகிறது.

மறித் துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன் என்பது, அப்பொருளில் வந்த பாடலடியாகும்.

தாயின் மடியில் இன்னும் பால்கூடப் பருகாத, மென்மையான தழையை உணவாகக் கொள்ளும் ஆட்டுக்குட்டி கொல்லப்படுவது, மென்முறிச், சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ, மறிகொலைப் படுத்தல் வேண்டி என்பதாக, அகநானூற்றில் (292: 2-4) காட்டப்படுகிறது.

முள் வேலியுள்ள தோட்டத்தில் மேய்ந்ததை, இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த எனக் காட்டப்படுகிறது, புறநானூற்றில்.

செம்மறியாட்டுப் பாலில் இருந்து தயாரித்த முற்றிய தயிர் பற்றிய குறிப்பு, அகநானூற்றில் (394:2) இடம் பெற்று உள்ளது.

சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர் என்பது, அப்பொருளில் வந்த பாடலடியாகும்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா, உதவிப் பேராசிரியர், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!