நெல் சாகுபடிக்கு முன்னும், தென்னையில் ஊடுபயிராகவும் சணப்பைப் பயிரிட்டால், நிலவளம் காத்து உயர் மகசூலை அடையலாம்.
நெல் சாகுபடி தொடங்கு முன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சணப்பைப் பசுந்தாள் உரப்பயிரைப் பயிரிட்டு உரச்செலவை குறைக்க முடியும்.
ஏக்கருக்கு 20 கிலோ சணப்பு விதைகள் தேவைப்படும். இது, மிக வேகமாக வளரும் பயிர். ஏழு வாரத்தில் பூக்கத் தொடங்கி விடும்.
இரண்டு மீட்டர் உயரம் வளரும். இதன் ஆழமான வேர்கள், மண்ணில் நன்றாக ஊடுருவி, மண்ணின் கட்டமைப்பை மாற்றும்.
மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கும். பிற பயிர்களுடன் போட்டியிடும் தன்மையற்றது.
இப்பயிரின் சிறப்பு, இது காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து, ரைசோபியம் என்னும் நுண்ணுயிர் மூலம் வேர் முடிச்சுகளில் வைத்து பயிருக்கு அளிப்பது.
மண்ணிலும் தழைச்சத்தை அதிகரிக்கும். ஏழு வாரங்களில் இதை மண்ணில் மடக்கி உழுவதன் மூலம், ஏக்கருக்கு 5 டன் தழைகள் கிடைக்கும்.
எளிதாக மட்கக் கூடிய தன்மை உள்ளது. ஏக்கருக்கு 40-50 கிலோ தழைச்சத்தை நிலத்தில் சேர்க்கும். மண்ணில் கரிம வளமும் அதிகரிக்கும். இதனால், தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம்.
தழைச் சத்துக்காக யூரியாவை வாங்கிச் செலவழித்துப் பயிரிடுவதைக் காட்டிலும், பசுந்தாள் உரப்பயிரை சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழுதால் உரச்செலவை மிக எளிதாகக் குறைக்க முடியும்.
மண்ணில் கரிம அமிலங்கள் அதிகரிப்பதால் நுண்ணுயிர்களும் பெருகும். மண்ணின் கட்டமைப்பு மாறும்.
எனவே, விவசாயிகள், உரச் செலவைக் குறைக்கவும், மண்ணுக்கு வளம் சேர்க்கவும், சணப்புப் போன்ற பசுந்தாள் உரப் பயிர்களைப் பயிரிட்டுப் பயன் பெறலாம்.
திலகவதி, வேளாண்மை உதவி இயக்குநர், மதுக்கூர்.