தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதைக் கற்பக விருட்சம் என்கிறோம்.
இத்தகைய தென்னை பல்வேறு பூச்சிகளால் தாக்கப்படுகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.
தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் காண்டாமிருக வண்டும் ஒன்று. அதைப் பற்றிப் பார்ப்போம்.
காண்டாமிருக வண்டு
வண்டின் மேற்புறம் கறுப்பு நிறத்தில் வழவழப்பாக இருக்கும். 34-45 மி.மீ. நீளமிருக்கும்.
ஒரு கொம்பு, தலையின் மேலிருந்து மேல்நோக்கி வளர்ந்திருக்கும். இந்தக் கொம்பு காண்டாமிருகக் கொம்பை ஒத்திருப்பதால் இதைக் காண்டாமிருக வண்டு என்கிறோம்.
இவ்வண்டு, நீள்வட்ட வடிவில் வெள்ளை முட்டைகளை எருக்குழி மற்றும் அழுகிய பொருள்களில் இடும்.
இளம் புழுவின் தலை பழுப்பு நிறத்திலும், உடல் பகுதி அழுக்கு வெள்ளை நிறத்திலும் இருக்கும். 90-100 மி.மீ. நீளமிருக்கும்.
எருக்குழிகளில் இந்தப் புழுக்கள் காணப்படும். இவ்வண்டு 4 முதல் 8 மாதங்கள் வரை வாழும்.
சேத அறிகுறி
இது, இளங் குருத்துகளைத் துளைத்துச் செல்வதால் குருத்து ஓலை மற்றும் இளம் பூம்பாளைகள் பாதிக்கப்படும்.
வண்டு துளைத்துச் சென்ற குருத்துத் துளையில் இளம் ஓலைகளின் சக்கை வெளியே தள்ளப்படும்.
தாக்கப்பட்ட இலை விரிந்ததும், விசிறியைப் போலக் காணப்படும். சிறிய கன்றுகள் தாக்கப்பட்டால் காய்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்
தாக்கப்பட்டு மடிந்த தென்னை மரங்களை வெட்டி அழிக்க வேண்டும். தோப்பில் குப்பை, சாணத்தைக் குவித்து வைக்காமல் சுத்தமாக வைக்க வேண்டும்.
எருக்குழியை மண்ணால் மூட வேண்டும். எருக்குழியில் இருக்கும் முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
எருக்குழியில் வளரும் புழுக்களை, பச்சை மஸ்கார்டின் என்னும் பூசணத்தைத் தெளித்து அழிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் நனையும் தூள் வீதம் கலந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எருக்குழியில் தெளித்துப் புழுக்களை அழிக்க வேண்டும்.
வண்டு துளைத்த துளைகளின் வழியே நீண்ட கம்பியைச் செலுத்தி, துளைக்குள் இருக்கும் வண்டைக் கம்பியால் குத்தி வெளியே எடுக்க வேண்டும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இலை இடுக்குகளில் வேப்பங் கொட்டைத் தூளையும், மணலையும் சமமாகக் கலந்து, இளம் மரம் ஒன்றுக்கு 150 கிராம் வீதம், அடிக்குருத்தில் இருந்து மூன்றாவது குருத்தில் இட வேண்டும்.
மின்விளக்குப் பொறிகளை வைத்து, ஆண், பெண் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
ஆமணக்குப் புண்ணாக்கு 2.5 கிலோ கிலோ, ஈஸ்ட் 5 கிராம் அல்லது அசிடிக் அமிலம் 5 மி.லி. கலவையில் நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் இலை மட்டைத் துண்டுகளை நனைத்து, ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கை 5 லிட்டர் நீரில் கலந்து மண் பானைகளில் ஊற்றித் தோப்புகளில் ஆங்காங்கே புதைத்து வைக்கலாம். இதன் வாடையால் ஈர்க்கப்படும் வண்டுகள், பானையில் விழுந்து அழிந்து விடும்.
ரைனோலூர் இனக்கவர்ச்சிப் பொறிகளை, இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து, வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
மூன்று பாச்சை உருண்டைகளைச் சிறு துகள்களாக உடைத்து, அடிக் குருத்தில் இருந்து மூன்றாவது குருத்தில் இட வேண்டும்.
5 கிராம் போரேட் குருணை வீதம் எடுத்து, சிறிய நெகிழிப் பைகளில் இட்டு, அவற்றின் அடிப்பகுதியில் குண்டூசியால் துளையிட்டு, அவற்றை மட்டை இடுக்குகளில் வைக்கலாம். இதன் மூலம் காண்டாமிருக வண்டால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கலாம்.
முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.