மண்ணில் நடைபெறும் செயல்களை முறைப்படுத்துவதில் கண்களுக்குப் புலப்படும் முதுகெலும்பற்ற உயிரினங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மண் வளத்தைப் பராமரிப்பதில், மண்ணில் சத்துகளைச் சுழற்சி செய்வதில், கரையான்களும், மண் புழுக்களும் தமது பங்கை ஆற்றுகின்றன.
மண் புழுக்கள் மட்குண்ணிகள் வகையில் அடங்கும். உண்ணும் பழக்க அடிப்படையில், கழிவுண்ணி, மண்ணுண்ணி என்றும் அழைக்கப்படும்.
மண்ணின் மேற்பரப்பில் அல்லது அதனடியில் இருப்பவை கழிவுண்ணிகள் எனப்படும்.
அங்ககப் பொருள்கள் நிறைந்த மேல் மண்ணில் இருக்கும் தாவரக் குப்பை, கால்நடை எச்சம் ஆகியன இவற்றின் முக்கிய உணவாகும். இந்தப் புழுக்களை, மட்குர உருவாக்கிகள் என்று கூறுகிறோம்.
சர்க்கரை ஆலைக் கழிவு
உலகளவில், சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது நாட்டில் சுமார் 704 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன,
இவற்றின் மூலம் ஆண்டுக்கு 8 மில்லியன் டன் சர்க்கரை ஆலைக்கழிவு கிடைக்கிறது.
இது, மண்வளத்தைப் பராமரிக்க, பயிர் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உயிர் உரமாகப் பயன்படுகிறது.
சர்க்கரை நிறைந்துள்ள இதில், கரிமம், நைட்ரஜன், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நுண் சத்துகளுடன் தாவரச் சத்துகளும் உள்ளன.
இடத்தேர்வு
உரக்குழிப் படுக்கை அமைவிடத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மழைக் காலத்தில், படுக்கையில் நீர்த் தேங்காமல் இருக்க, சற்று உயரமான மற்றும் நிழலான இடத்தில் அமைக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே கனத்த மழை பெய்கிறது.
எனவே, உள்ளூர் மண் புழுக்கள் உள்ள படுக்கைகளில் நீர்த் தேங்கினும் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது.
உரக்குழியை அமைத்தல்
படுக்கைகளில், மேல்நிலைப் புழுக்களை வளர்க்க மண் தேவையில்லை. விவசாயச் சூழல்களில் மேல்நிலை மற்றும் இடைநிலைப் புழுக்களைக் கலந்து வளர்க்கும் போது, 15 செ.மீ. உயரத்துக்குக் குறையாத சேற்று மண்ணால் ஆன அடித்தளம் இருப்பது நல்லது.
குழிகள், சிமென்ட் தொட்டிகள், மரப்பலகை அல்லது செங்கற்களை வரப்பாகக் கொண்ட படுக்கைகள்,
மரம் அல்லது பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றிலும் உரக் குழியை அமைக்கலாம். சிமென்ட் தொட்டிகளைக் குறைந்த செலவில் அமைக்க வேண்டும்.
இவற்றில் வடிகால்களை அமைத்து, மண் புழுக்களால் செறிவூட்டப்படும் நீரைச் சேகரிக்கலாம்.
உரக்குழியை நிரப்புதல்
உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கற்களைக் கொண்ட அடித்தளத்தை அமைத்து, அதன் மீது 6-7.5 செ.மீ உயரத்தில் பெருமணலை இட வேண்டும்.
இப்படிச் செய்வது சரியான வடிகாலுக்கு உதவும். இதன் மீது 15 செ.மீ. உயரத்தில் ஈர மண்ணை நிரப்ப வேண்டும்.
பிறகு, தென்னை நார்க்கழிவை நிரப்ப வேண்டும். இதில் வெப்பம் அதிமாக இருக்கும் என்பதால், உரக்குழியில் மண் புழுக்களை விடுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்து, தினமும் நீரைத் தெளிக்க வேண்டும்.
பிறகு, உள்ளூரில் சேகரித்த மேல்நிலை மற்றும் இடைநிலைப் புழுக்களை இட வேண்டும்.
அதாவது, பெ.எக்ஸ்கவேட்டஸ், இஃபோட்டிட மற்றும் இ.யுஜினியா என்னும் மேல்நிலை புழுக்களையும், லா.மாரிட்டீ என்னும் இடைநிலைப் புழுக்களையும் விட வேண்டும்.
இதன் மீது, 10 செ.மீ. உயரத்தில் வைக்கோலை மூட வேண்டும். பிறகு, நனையும் அளவில் இதன் மீது நீரைத் தெளிக்க வேண்டும். அதிகமாகத் தெளிக்கக் கூடாது.
முடிவாக, தென்னங் கீற்று அல்லது பனை ஓலையால் குழியை மூடிவிட வேண்டும்.
இதனால், பறவைகளால் புழுப் படுக்கைக்கு ஏற்படும் இடையூறைத் தடுக்கலாம்.
ஓலைகள் கிடைக்காத நிலையில், பழைய சணல் சாக்குகளைப் பயன்படுத்தலாம். ஆனால், பிளாஸ்டிக் உறைகளைப் பயன்படுத்தக் கூடாது.
முப்பது நாட்களுக்கு நீரைத் தெளிப்பதும், படுக்கையைக் கவனிப்பதும் தொடர வேண்டும்.
அதன் பிறகு ஓலையை நகர்த்திப் பார்க்கும் போது, இளம் புழுக்கள் கண்ணுக்குப் புலப்படலாம். இது நல்ல அறிகுறியாகும்.
கழிவாக இருந்த புழுப் படுக்கை, இப்போது, மென்மை, உறிஞ்சும் தன்மை மற்றும் நறுமணம் மிக்க கரும் பழுப்பு உரமாக மாறி இருப்பதைக் காணலாம்.
நாற்பத்து இரண்டாம் நாள் நீர்த் தெளிப்பை நிறுத்த வேண்டும். இதனால், புழுக்கள் படுக்கையின் அடியை நோக்கிச் சென்று விடும்.
இது, புழுக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் மட்குவுரத்தை எடுக்க உதவும். அனுபவம், முயற்சி, உழைப்பு இருந்தால், இதைத் தனித் தொழிலாகவே செய்து வருமானம் ஈட்டலாம்.
க.சகாதேவன், நான்காம் ஆண்டு மாணவர், முனைவர் பெ.மங்களதேவி, உதவிப் பேராசிரியர், சி.பரமேஸ்வரி, உதவிப் பேராசிரியர்,
தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர் – 621 115