கால்நடைப் பண்ணையைத் தொடங்குமுன் கவனிக்க வேண்டியவை!

கால்நடைப் பண்ணை உயிருள்ள விலங்குகளைக் கொண்டு அமைக்கப் படுவது. சிறிய தவறுகூட பெரிய உயிராபத்தை, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும்.

ஒரு சிலர், எடுத்த எடுப்பில் பெரிய கட்டுமானத்தை அமைத்து, ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத கால்நடைகளை, அதிலும் அதிகமாக வாங்கி விடுகின்றனர்.

ஆனால், அவர்களுக்குக் கால்நடை வளர்ப்புத் தொடர்பான அனுபவமோ, அடிப்படை அறிவோ இருக்காது.

பண்ணைக்குப் பொறுப்பாக இருப்பவரும் உறவுக்காரராக இருப்பார். அவருக்கும் கால்நடை வளர்ப்பில் பெரிய அனுபவமோ, ஆர்வமோ, அறிவோ இருக்காது.

உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள பண்ணையைப் பார்த்தோ, சமூக ஊடகத் தகவல்களைப் பார்த்தோ பண்ணையைத் தொடங்கி விடுவார்.

ஊரில் பண்ணையைத் தொடங்கி விட்டு அவர் வெகு தொலைவில் இருப்பார்.

பண்ணையில் நடப்பதை சிசிடிவி காமிரா மூலம் பார்ப்பார். பண்ணை ஆட்கள், காமிரா மூலம் தங்களின் செயல்களை, உரிமையாளருக்குக் காட்டுவார்கள்.

அந்தளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.

இந்த இடத்தில் எங்கள் மாட்டுப் பண்ணை இருக்கிறது. கொஞ்ச நாட்களாகவே அங்குள்ள விலங்குகள் மெலிகின்றன,

இறக்கின்றன, நோய்க்கு உள்ளாகின்றன, பல கால்நடை மருத்துவர்களிடம் காட்டி விட்டோம். சரியாக வரவில்லை.

நீங்கள் சென்று பார்க்க முடியுமா? எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறோம் என்று தொலைபேசி மூலம் அழைப்பார்கள்.

இந்த மாதிரியான கால்நடைப் பண்ணைகள், துறை சார்ந்த கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல்,

யூடியூப், முகநூல், வாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் நம்பகத் தன்மையற்ற செய்திகளின் அடிப்படையில் தொடங்கப் பட்டிருக்கும்.

ஆரம்பத்தில் சிறப்பாகப் போகும் இந்தப் பண்ணைகளில், நாட்கள் செல்லச் செல்லச் சிக்கல்கள் உருவாகும்.

கால்நடைகள் அதிகமாக உள்ள பண்ணையில், குறைவாக உள்ள வேலையாட்கள், அதிக வேலைப் பளுவுடன் இருப்பார்கள்.

மேலும், வேலையாட்கள் அடிக்கடி மாறுவார்கள். சம்பளப் பிரச்சனையும் ஏற்படும்.

கால்நடைகளை வாங்கவும், கட்டுமான வசதிக்கும் செலவழித்த அளவுக்கு, தரமான மருத்துவமோ மருந்துகளோ வாங்க மாட்டார்கள்.

முறையான பசுந்தீவன ஏற்பாடு இராது. வாகனங்கள் போக முடியாத, கால்நடை வைத்தியரே கிடைக்காத, நீர் வசதி இல்லாத, ஒதுக்குப் புறத்தில் பண்ணை இருக்கும்.

இந்த மாதிரி பண்ணையில் இருந்து நோய் நிலை தொடர்பாக வருகிறவர்கள், குறிப்பாக அந்த உறவுக்காரர், மருத்துவரை அணுகும் விதமே தனி இரகமாக இருக்கும்.

ஒரே தடவையில் எல்லாம் சரியாக வேண்டும். இல்லாவிடின் சிக்கல் தான். உடனே மருத்துவரை மாற்றி விடுவார்கள்.

அந்த உறவுக்காரர் செலவழிக்கும் விதம் அவர்களின் தோற்றம், வெளிநாட்டு உரிமையாளர் இவர் தானா எனக் கேட்கத் தோன்றும். அப்படி ஒரு பகட்டு.

ஆனால், கால்நடைகளுக்கு மருந்து வாங்க, மருத்துவம் செய்ய, பார்த்துப் பார்த்துச் செய்வார்கள்.

மிகவும் விலை குறைந்த மருந்துகளை, குறைவாகக் கட்டணம் வாங்கும் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். அவர் கால்நடை மருத்துவராக இல்லா விட்டாலும் பரவாயில்லை.

இத்தகைய கால்நடைப் பண்ணைகளைக் குறி வைத்தே பல போலி மருத்துவர்கள் உள்ளனர்.

கறக்கும் வரை கறந்து விட்டு, பண்ணை மூடப்படும் நிலையில், அவர்கள் கழன்று விடுவார்கள்.

அந்த நபர்கள் சமூக ஊடகங்களில் குழுக்களை அமைத்து, தங்களைப் பெரிய மருத்துவர்கள் போலவும்,

விலங்கு நல நேயர்கள் போலவும் காட்டிக் கொண்டு, இந்த மாதிரி அனுபவம் இல்லாத கால்நடைப் பண்ணையாளர்களை மடக்கி விடுகின்றனர்.

இந்தப் பண்ணைகளில் உள்ள எல்லா மருந்துகளையும் மாறி மாறி பயன்படுத்துவர்.

இந்த மருந்துகளை ஊரில் கணக்கு வழக்கின்றி திறந்துள்ள விலங்குணவுக் கடைகளில் யாரும் வாங்கலாம்.

அவற்றில் பல மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லிகள். மனித சுகாதாரத்தை நேரடியாகப் பாதிப்பவை.

இலாப நோக்கில் மருந்து நிறுவனங்களால், பலசரக்குக் கடை வரைக்கும் வழங்கப்படும் மருந்துகள்.

இதனால், மிகச்சிறிய நோய்க்கும், மிகப் பெரிய மருந்தைக் கொடுத்தும் நோய் சரியாகாத நிலை ஏற்படும்.

கால்நடை வளர்ப்பைப் பொறுத்த வரை, முதலீட்டுக்கு ஏற்ப, உடனடி இலாபம் இருக்காது. கடுமையாக உழைக்க வேண்டும். பொறுமை முக்கியம். அனுபவம் தேவை.

உங்களுக்குப் பண்ணை அனுபவம் இல்லாது போனால், கால்நடை வளர்ப்பில் அனுபவம் உள்ளரை, பண்ணைப் பொறுப்பாளாராகத் தேர்வு செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் விட, தேர்வு செய்யும் இடம், கால்நடை வளர்ப்புக்கு ஏற்றதா என்பதை, கால்நடை மருத்துவரிடம் கேட்டு முடிவு செய்வதே சாலச் சிறந்தது.

இல்லாது போனால், நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை, வீணாகச் செலவழிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.


முனைவர் கோ.கலைச்செல்வி, முனைவர் ரா.இரம்யா, மத்திய ஆய்வகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை – 600 051.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!