தென்னந் தோப்பில் பலவகைப் பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரவு அதிகம் பெறுவது மட்டுமல்ல, தென்னையின் மகசூலைக் கூட்ட முடியும்.
இதர வேளாண் துணைத் தொழில்களைத் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும்.
குறுகிய காலத்தில் காசு பார்க்க, மஞ்சள், இஞ்சி, மிளகாய், கம்பு, சர்க்கரை வள்ளி, சேனை, கனகாம்பரம், மல்லிகை முதலிய பயிர்கள் உதவும்.
நீர்வளம் நன்றாக உள்ளதா? அங்கே பல்லாண்டுப் பயிர்களான, அன்னாசி, கொக்கோ, தொட்டியில் மிளகு, கிராம்பு ஆகியவற்றை வளர்த்து நல்ல வரவு பெறலாம்.
மிகக் குறைந்த வெளிச்சம் இருந்தாலும், அதனைப் பயன்படுத்தும் அற்புதப் பணப் பயிர் தான் அன்னாசி.
இதை நான்காம் அடுக்குப் பயிர் என்றும் கூறலாம். அதாவது, முதல் அடுக்குப் பயிர் நெட்டைத் தென்னை இரகம்.
இரண்டாவது பன்னியூர் 2 மிளகு. மூன்றாம் அடுக்குப் பயிர் கொக்கோ ஆகும்.
இவற்றுடன் நான்காம் அடுக்குப் பயிர் தான் இலாபம் தரும் அன்னாசி.
இது ருசி மிகுந்தது. உடல் நலம் பேண உதவும். அன்னாசிப் பழச்சாறு, ஸ்குவாஷைத் தயாரித்து, புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.
தோப்பில்லா குவதர்டு, ஐயண்ட் கிவ் என்னும் பைனாப்பிள் இரகம் சாலச் சிறந்தது.
இதனை, 60×90 செ.மீ. இடைவெளி விட்டு நடலாம். இப்படி, ஏக்கருக்கு 12,000 அன்னாசிக் கன்றுகளை ஊடுபயிராக வளர்க்கலாம். அதன் மூலம் ஐந்து ஆண்டுகள் வரை வருமானம் கிடைக்கும்.
ஆழியார் தென்னை ஆராய்ச்சி மையத்தில் நடத்திய ஆய்வில், தென்னந் தோப்பில் ஊடுபயிராக வளர்க்க ஏற்றது அன்னாசி எனத் தெரிய வந்துள்ளது.
அன்னாசிப் பழத்தின் தலைப் பகுதியான பச்சை இலைக் கற்றையை அப்படியே வெட்டி நடலாம்.
அன்னாசிப் பழம் ஒரு கூட்டுப் பழம் எனப்படும். இது, சிறு சிறு பழங்களைச் சேர்த்து ஒட்டியது போன்று இருக்கும். இதிலுள்ள சிறு தொகுதி கண் எனப்படும்.
கண்கள் எனப்படும் கணுக்களைச் சதுரமாக, ஆழமாக வெட்டி நடவு செய்யலாம்.
இதற்கென ஸ்கூப்பர் என்னும் கத்தி உள்ளது. அந்தக் கத்தி மூலம் நோண்டி நடவு செய்யலாம்.
நீர் வசதியுள்ள விவசாயிகள், கடும் களைக் கொல்லியைத் தெளித்து, தோப்பைச் சுத்தமாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தென்னந் தோப்பில் மூடுபயிராகப் பல்வேறு பயிர்களை வளர்ப்பது அனைவரின் கடமையாகும்.
மேலும் விவரம் பெற 98420 07125 என்னும் எண்ணில் பேசலாம்.
முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.