உயிர் உரங்கள், தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரங்கள் எனவும், மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு அளிக்கும் உயிர் உரங்கள் எனவும், இரு வகைப்படும்.
பயறுவகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம் ரைசோபியம்.
மற்ற பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம் அசோஸ் பயிரில்லம்.
அசோஸ் பயிரில்லம்: இது, காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிறுத்தும் பாக்டீரியம்.
காற்றோட்டம் இருந்தாலும் வளரும்; இல்லா விட்டாலும் வளரும். பயிருடன் இணைந்து வாழும்.
பயிர்களின் வேர்களில் இருந்து வெளியாகும் வேர்க்கசிவால் கவர்ந்து இழுக்கப்படும் அசோஸ் பயிரில்லம் அதற்கு உணவாகப் பயன்படும்.
மேலும், நைட்ரோஜினேஸ் என்னும் நொதி மூலம் காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குத் தரும்.
அசோஸ் பயிரில்லம் லிப்போபெர்ம் என்னும் உயிர் உரத்தை நெல்லுக்கு இடலாம்.
அசோஸ் பயிரில்லம் பிரேசிலென்ஸ் என்னும் உயிர் உரத்தை, நெல்லைத் தவிர, வேர்முடிச்சு இல்லாத மற்ற பயிர்களுக்கு இடலாம்.
ரைசோபியம்: பயறுவகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்துவது ரைசோபியம்.
இது, பயறுவகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகளைத் தோற்றுவித்து இணை வாழ்க்கை நடத்தும் பாக்டீரியம்.
பயிர்களின் வேர்களில் இருந்து வெளியாகும் வேர்க்கசிவால் கவரப்பட்டு, சல்லி வேர்கள் வழியாக உள்ளே சென்று வேர் முடிச்சுகளை உருவாக்கும்.
இந்த வேர் முடிச்சுகளில் உள்ள நைட்ரோஜினேஸ் என்னும் நொதிப் பொருள் மூலம் காற்றிலுள்ள தழைச் சத்தை நிலை நிறுத்தும்.
ரைசோபியத்தில் நிலக்கடலைக்கு எனவும், நிலக்கடலை தவிர்த்த மற்ற பயிர்களுக்கு எனவும் இரண்டு வகைகள் உள்ளன.
பாஸ்போ பாக்டீரியா: இது, மணிச் சத்தைக் கரைத்துப் பயிர்களுக்குத் தரும் உயிர் உரம்.
மணிச்சத்து, மண்ணில் பல்வேறு வேதி மாற்றங்களால், பயிர்களுக்குக் கிட்டாத நிலைக்குச் சென்று விடும்.
அதாவது, அமிலவகை மண்ணில், இரும்பு மற்றும் அலுமினிய அயனிகளுடன் இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறி விடும்.
காரவகை மண்ணில் கால்சியம் மற்றும் மக்னீசியத்துடன் இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறி விடும்.
இத்தகைய பாஸ்பேட்டுகளைப் பயிர்களால் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்நிலையில், மணிச்சத்தைக் கரைத்துத் தருவதில் பாஸ்போ பாக்டீரியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த நுண்ணுயிரிகள் தங்களின் செல்களிலிருந்து சுரக்கும் ஃப்யூமாரிக், சக்ஸீனிக் போன்ற அங்கக அமிலங்கள் மூலம்,
பயிர்களுக்குக் கிட்டாத நிலையில், கரையாத நிலையில் மண்ணில் இருக்கும் மணிச் சத்தைக் கரைத்து, பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும்.
மேலும், பாஸ்படேஸ் என்னும் நொதியைச் சுரந்து, மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு வழங்கும்.
முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.